Friday, March 20, 2020

கம்பராமாயணம் 70




5080.
'கண்டிலன்கொலாம் இளவலும்?
   கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர்?
   உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம் ?'
   எனக் குழையா,
புண் திறந்ததில் எரி
   நுழைந்தாலெனப் புகைவாள்.

(மானின் பின்னே சென்ற இராமன்
திரும்பாததுபோல்)
'தம்பியையும் காணவில்லையோ ?
ஆரவாரிக்கும் கடலின் நடுவில்
இலங்கை இருப்பதை அறியவில்லையோ ?
எல்லா உலகையும் வருத்தும் இராவணன்
என்னை அபகரித்துக்கொண்டு வந்ததை
அறியவில்லையோ ?'
என்று எண்ணினாள், மனம் வருந்தினாள்,
திறந்த புண்ணில் தீ நுழைந்தது போல்
துடித்தாள்.


 5098.
இருந்தனள், திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல் அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும், துயில் நறைக் களி பொருந்தினார்.

சீதை இருந்த இடத்தில் இருந்தாள்,
திரிசடை என்னும் திருநாமம் கொண்டவள்,
இனிய சொற்களையே பேசினாள்,
மற்ற, சுற்றியிருந்த பேராற்றல் நிறைந்த,
கொடிய அரக்கியர் அனைவரும்,
இரவு நடுசாமத்தை எட்டிய பொழுதில்,
கள்ளின் மயக்கத்தில்,
உறக்கத்தில் ஐக்கியமாக,
(திரிசடை மட்டும்
சீதையின் மன வருத்தத்தை தணித்தாள்)



5113.
'திரியுமால், இலங்கையும் மதிலும்; திக்கு எலாம் 
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும் 
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின 
விரியுமால்; விளக்கினை விழுங்குமால், இருள்;

(திரிசடை தான் கண்ட கனவை, 
சீதைக்கு உரைத்தல்)

இலங்கை மாநகரும் மதில்களும் சுழன்றன,
எல்லா திசைகளிலும் தீ படர்ந்தன,
கந்தர்வ நகரம் எல்லா இடத்திலும்^ காட்சி தந்தன,
மங்கள கலசங்கள் விழுந்து சிதைந்தன,
ஒளியை விழுங்கும் இருள் எல்லாவிடத்திலும் படர்ந்தன;

^ - empty sky; bad sign to the empire;





5122.
இவ் இடை, அண்ணல் அவ் இராமன் ஏவிய 
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்,
அவ் இடை எய்தினன், அரிதின் நோக்குவான்,
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான்.


இதற்கிடையில், இதே சமயத்தில் 
இராமனால் அனுப்பப்பட்டவன்,
ஆற்றல் மிக்கக் காளை போன்றவன்,
போர் வீரம் நிறைந்தவன், தூதுவன்,
சீதை இருந்த இடத்தை அடைந்தான்.
அடர்ந்த சோலையினிடையில் 
கூர்ந்து கவனித்தான்.
வருந்தும் இடையை உடைய சீதை,
அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.


5135.
'வீடினது அன்று அறன்; யானும் வீகலேன்;
தேடினென் கண்டனென்; தேவியே !' எனா 
ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து 
ஓடினன்; உலாவினன்; உவகைத் தேன் உண்டான்.

'தருமம் தோற்காது, நானும் தோற்கமாட்டேன்;
தேடிக் கண்டுகொண்டேன், தேவியை' 
என்று தன்னுள் கூறினான்.
ஆடினான், பாடினான்,
இங்கும் அங்கும் பாய்ந்து ஓடி உலாவினான் 
மகிழ்ச்சியில் தேன் குடித்தான் - அனுமான்.

( தொடரும் )

No comments:

Post a Comment