Tuesday, March 17, 2020

கம்பராமாயணம் 67




4899.
மடங்கல் அரியேறும், மதமால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி, நனிமூதூர்
அடங்குஅரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந்திசையின் வாய்அனைய வாயில் எதிர்கண்டான்.

ஆண் சிங்கமும், மதங்கொண்ட யானையும்
வெட்கமடையும்படி
தனி ஆளாய் பழைய இலங்கையினுள்
பாதம் வைத்தான் அனுமான்.
பிறருக்கு அடங்கா சேனையையும்,
சூலாயுதத்தையும் ஏந்தி,
யமனின் கட்டளைகளை முடிக்கும் தென் திசையின்
கொடுமையான வாய் போன்ற
நுழைவாயிலைக் கண்ணெதிரில் கண்டான்.





4915.
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகழ்மூதூர்
நல்லாள்; அவ்ஊர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்;
'நில்லாய்! நில்லாய்! என்று உரை நேரா நினையாமுன்
வல்லே சென்றாள்; மாருதி கண்டான்; வருகஎன்றான்.


எல்லா உயிர்க்கூட்டங்களும் பயந்து நடுங்கிட,
இலங்கையின் பழைய நகரைக் காவல் காப்பவள்,
(இலங்கை மாதேவி என்றழைக்கப்படுபவள்)
பெரிய கண்களை உடையவள்,
அனுமான் உள்நுழைவதைக் கண்டாள்.
'நில்! நில்!' என்று இரைந்தாள்.
அனுமானின் முன் சென்று நின்றாள்.
அனுமனும் அவளைக் கண்டான், வரவேற்றான்.



('ஓடிப்போ' என்று மிரட்டியும், 
விலகாது நிற்கிறானே, 'இவன் யாரோ ?' 
என்று எண்ணத் தொடங்கினாள் இலங்கா தேவி)

4921.
கொல்வாம்; அன்றேல் கோளுறும் இவ்ஊர் எனல் கொண்டாள்;
'வெல்வாய், நீயேல் வேறி' என, தன் விழிதோறும் 
வல்வாய் தோறும், வெங்கனல் பொங்க, மதிவானில் 
'செல்வாய்' என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள்.

கொல்வோம் இவனை, இல்லையேல் 
இலங்கைக்கு இடர் வரும் என்றுணர்ந்தாள்.
'முடிந்தால் எனை வெற்றி கொள்' என்று சொன்னாள்.
கண்கள் மற்றும் வாயிலிருந்து கொடிய நெருப்பு 
எழுப்பினாள்.
சந்திரன் ஒளிரும் வானின் வழியே செல்வாய் 
என்று சொல்லி, 
தன் சூலாயுதத்தை அனுமன் மேல் வீசினாள்.



(அனுமன் அவளை எதிர்கொண்டான்,
தன் கையால் ஒரு அடி அடித்தான்,
மலைபோல் பூமியில் சரிந்தாள்)


4929.
அன்னதே முடிந்தது ஐய!
   'அறம் வெல்லும் பாவம் தோற்கும்'
என்னும் ஈது இயம்ப வேண்டும் 
   தகையதோ? இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம் முற்றும்,
   உனக்கு முற்றாதது உண்டோ?
பொன்நகர் புகுதி என்னாப் புகழ்ந்து 
   அவள் இறைஞ்சிப் போனாள்.

ஐயனே, பிரம்மன் முன்னர் சொன்னதுபோலவே 
நடந்தது,
அறம் வெல்லுது, பாவம் தோற்குது,
இதை நான் சொல்லவும் வேண்டுமா ?
இனி நீ எண்ணும் எல்லாம் ஈடேறும், 
உன்னால் முடியாதது என்று 
எதுவும் இல்லாது போகும்,
என்று சொல்லிப் புகழ்ந்தாள், 
இலங்கையினுள் செல் என்றும் சொன்னாள்,
அனுமானை வணங்கித் தன் வழி சென்றாள்.


( தொடரும் )

No comments:

Post a Comment