5261.
‘புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள்,
பொதிந்து தூசில்
குன்றின் எம்மருங்கின் இட்ட அணிகலக்
குறியினாலே,
வென்றியான்அடியேன்தன்னை வேறு கொண்டு
இருந்து கூறி,
“தென் திசைச்சேறி” என்றான்; அவன் அருள்
சிதைவது ஆமோ ?
அற்பத் தொழில் செய்த இராவணன், உன்னை
அபகரித்துக் கொண்டு செல்கையில்
ஆபரணங்களை அவிழ்த்து எங்கள் மலையருகில்
ஆடையில் கட்டி வீசினாயே, நாயகன் இராமன்
அதையே அடையாளமாகக் கொண்டு,
அடியவன் எனை தனியே அழைத்து, சில
அடையாளங்களை உரைத்து,
'அனும! நீ தென் திசை சென்று தேடு' என்றுரைத்தார்.
அவர் அருள் செய்து உரைத்தது பிழையாகுமோ ?
(அனுமன், இராமனின் குணாதிசயங்களையும்
சீதையிடம் சொல்லச் சொன்னவைகளையும்
ஒவ்வொன்றாய்ச் சொன்னான்)
5290.
‘ “மீட்டும் உரை வேண்டுவன இல்லை”
என, “மெய்ப் பேர்
தீட்டியது; தீட்டஅரிய செய்கையது;
செவ்வே,
நீட்டு இது” என,நேர்ந்தனன்’ எனா,
நெடிய கையால்,
காட்டினன் ஓர்ஆழி; அது வாள்
நுதலி கண்டாள்.
'இன்னும் நான் என்ன சொல்வது,
இராமன் நாமம் தீட்டியது, யாராலும்
மீண்டும் செய்ய முடியாத அரியவேலைப்பாடு
நிறைந்தது, உங்களிடம் தரச்சொல்லி,
இராமன் என்னிடம் தந்தது'
என்று சொன்னான்,
தன் நீண்ட கையால் அந்த மோதிரத்தைக்
காண்பித்தான்,
சீதை தன் கூரிய கண்களைத் திறந்து
அதைக் கண்டாள்.
5299.
‘பாழிய பணைத் தோள் வீர !
துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே ! யான் மறு
இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும்,
இன்று என இருத்தி’ என்றாள்.
'பருத்த மூங்கில் போன்ற தோள்களையுடைய
வீரனே!
துணையின்றித் தவித்த என் துயர் தீர்த்த
கொடையாளனே, நீ வாழ்க !
நான் களங்கமற்ற மனதுடையவள் என்பது
உண்மையெனின்,
ஒரு யுகத்தை ஒரு பகல் என்று கருதும்
பதினான்கு உலகங்களும் அழியும்
பிரளய காலத்திலும்
இன்று போல் நீ என்றும் இருப்பாயாக'
என்று ஆசி வழங்கினாள்.
5326.
சுட்டினன், நின்றனன் - தொழுத கையினன்;
விட்டு உயர்தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடுமுகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று,உருவொடு வளைந்த மூர்த்தியான்.
('நீ எப்படி கடல் கடந்தாய்?' என்று சீதை கேட்க)
தன் வடிவத்தை சீதைக்கு சுட்டிக் காட்டினான்,
கூப்பிய கைகளோடு நின்றான்,
தன் சுயஉருவை மாற்றினான்,
உயர்ந்த தோள்களோடு, ஆகாயத்துக்கும்
மேலே வளர்ந்து நின்றான்.
அணுக முடியாத அண்ட முகம் இடிக்கும்
என்பதால் வளைந்து,
தலையைத் தாழ்த்தி நின்றான்.
சூடாமணிப் படலம்
5347.
‘பொன் திணி பொலங்கொடி !
என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க;
துயர் விட்டாய்,
இன் துயில்விளைக்க; ஓர் இமைப்பின்,
இறை வைகும்
குன்றிடை, உனைக்கொடு குதிப்பென்;
இடை கொள்ளேன்.
'நிறைந்த அழகுடைய தங்கக்கொடி போன்றவளே,
மென்மையான முடி படர்ந்த என் தோள்களில்
அமைதியாக நீ அமர்ந்திருக்க,
துன்பத்தை மறக்க, நிம்மதியாய் உறங்க,
உன்னைத் சுமந்து கொண்டு பறப்பேன்,
இராமன் தங்கியிருக்கும் மலையில் குதிப்பேன்,
நடுவில் தாமதம் செய்யேன்'
என்று அனுமன் கூறினான்.
5358.
‘அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என் ? பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை,நீயும் நினைத்தியோ ?
அதுமட்டுமன்றி இன்னொரு காரணமும் உண்டு.
(நீ எனைத் தூக்கிக்கொண்டு சென்றால்)
இராமனின் வெற்றி வில் களங்கம் அடையும்.
சோற்றை ஏமாற்றி உண்ணும் நாய்களைப் போல,
எனை வஞ்சித்துக் கவர்ந்த அரக்கனிடமிருந்து
நீ எனை, வஞ்சித்து கவர்ந்துபோக வேண்டும் என்று
ஏன் எண்ணுகிறாய் ?'
என்று சொல்லி, அனுமன் கருத்தை மறுத்தாள் சீதை.
( தொடரும் )
No comments:
Post a Comment