5927.
வேந்தன் கோயில் வாயிலொடு
விரைவில் கடந்து, வெள்ளிடையின்
போந்து, புறம் நின்று இரைக்கின்ற
பொறை தீர் மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடு வால்கிழி சுற்றி, முற்றும்
தோய்த்தார், இழுது எண்ணெய்;
காந்து கடுந்தீக் கொளுத்தினார்;
ஆர்த்தார், அண்டம் கடி கலங்க.
(அனுமனைக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு)
இராவணனது அரண்மனை வாயிலைக் கடந்தனர்,
திறந்த வெட்ட வெளியை அடைந்தனர்,
எல்லாப்பக்கமிருந்தும் அனுமனைச் சுற்றி
நின்று கொண்டனர்.
நீண்ட வாலில் துணி சுற்றி, நெய் எண்ணையில்
தோய்த்தெடுத்தனர். எரியும் தீயை வைத்து,
அண்டம் கலங்கும்படி பெருமுழக்கமிட்டனர்.
5931.
‘தாயே அனைய கருணையான் துணையை,
ஏதும் தகைவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலியக்
கண்டால், நல்காயோ ?
நீயே உலகுக்கு ஒரு சான்று;
நிற்கே தெரியும் கற்பு; அதனில்
தூயேன் என்னின்,தொழுகின்றேன்,
எரியே! அவனைச் சுடல் !’ என்றாள்.
'தாய் போன்று அனைவர்க்கும் அருள் புரியும்
இராமபிரானின் துணைவன் அனுமனை,
சிறிதும் நற்குணம் இல்லாத,
நாய் போல இழிந்த, கொடிய அரக்கர்கள்
துன்புற்றுவதை நீ பார்த்தால்;
அவனுக்கு அருள் செய்ய மாட்டாயோ ?
நீதான், உலகம் அனைத்துக்கும்
ஒப்பற்ற சாட்சியாக விளங்குபவன்;
உனக்கு எனது கற்பு நிலை தெரியும்;
அந்தக் கற்புத் திறத்தில் நான்
தூய்மை உடையவள்
என்பது உண்மையானால்,
உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்;
அந்த அனுமனை நீ சுடாதே'
என்று சீதை பிரார்த்தித்தாள்.
5937.
முழுவதும் தெரிய நோக்கி, முற்றும்
ஊர் முடிவில் சென்றான்,
‘வழு உறு காலம் ஈது’ என்று எண்ணினன்,
வலிதின் பற்றித்
தழுவினன், இரண்டு நூறாயிரம் புயத்
தடக் கை தாம்போடு
எழு என நால,விண்மேல் எழுந்தனன்;
விழுந்த எல்லாம்.
(அரக்கர்களோடு)
இலங்கை நகர் முழுவதையும்
நோட்டம் விட்டுக் கொண்டே நடந்தான்,
நகர் முழுவதும் சுற்றி எல்லை வந்து சேர்ந்தனர்;
தப்பிப் போவதற்கு இதுதான் ஏற்ற சமயம்
என்று எண்ணினான் அனுமான்.
(இரு புறத்துக் கயிறுகளையும்)
வலியப் பிடித்து இடுக்கிக் கொண்டு
இரண்டு இலட்சம் தோள்களும் பெரிய கைகளும்
இரு புறத்துக் கயிற்றுடனே தூண் போலத் தொங்க
வானின் மேல் உயர எழும்பினான்,
அவ்வரக்கர் கூட்டம் எல்லாம் கீழே விழுந்தனர்.
5939.
துன்னலர் புரத்தை முற்றும் சுடு தொழில்
தொல்லையோனும்,
பன்னின பொருளும், நாண, ‘பாதகர்
இருக்கை பற்ற,
மன்னனை வாழ்த்தி, பின்னை வயங்கு எரி
மடுப்பென்’ என்னா,
பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப்
போக விட்டான்.
அனுமான்,
திரிபுரத்தை எரித்த முன்னோன் சிவபெருமானும்
வெட்கப்படும்படி
பாவிகளின் இருப்பிடமாகிய இலங்கை நகர் முழுதும்
தீப்பற்றி எரியுமாறு,
இராமபிரானைத் துதித்து, பிறகு,
நெருப்பை மூட்டுவேன் என்று தீர்மானித்தான்.
தனது நீண்ட வாலை
பொன்மயமான இலங்கை நகரின் மீது
படரவிட்டான்.
இலங்கை எரியூட்டு படலம்
5949.
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய், அடித்
தாய் அளந்து, உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்த கரியவன் மேனியின்,
போய் எழுந்து பரந்தது-வெம் புகை.
அக்காலத்தில்
வாமன வடிவாகச் சென்று,
(மாவலி) மூன்றடி தர சம்மதிக்க,
மூவுலகங்களையும் தாவி அளக்கும் பொருட்டு
மேலோங்கி வளர்ந்த கருநிறம் உடைய திருமாலின்
திரு மேனியைப் போல, வெப்பமான புகை,
மேல் எழும்பி எங்கும் பரந்தது.
( தொடரும் )
No comments:
Post a Comment