Saturday, March 14, 2020

கம்பராமாயணம் 64




சம்பாதிப் படலம்

4649.
'விரிந்து, நீர், எண்
   திசை மேவி,நாடினீர்,
பொருந்துதிர் மயேந்திரத்து'
   என்று போக்கிய
அருந் துணைக் கவிகள்
   ஆம் அளவு இல்சேனையும்
பெருந் திரைக் கடல்
   எனப் பெரிது கூடிற்றே.

'நீங்களனைவரும் பிரிந்து
எட்டு திக்குகளுக்கும் செல்லுங்கள்.
செல்லுமிடங்களிலெல்லாம் சீதையைத் தேடுங்கள்.
பின்னர் மகேந்திர மலைக்கு வந்து சேருங்கள்'
என்று முன்னம் அங்கதன் உரைத்தது போல,
இன்னொரு கடல் போன்ற சேனைகள் யாவும்
பெருந்திரளாக வந்து சேர்ந்தனர்
(அனுமான் இருந்த இடத்திற்கு )



4669.
என்றலும் கேட்டனன் எருவை
   வேந்தன், தன்
பின் துணை ஆகிய
   பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினான் என்ற சொல்;
   புலம்பும் நெஞ்சினன்;
குன்று என நடந்து
   அவர்க் குறுகல் மேயினான.

(சீதையைத் தேடுவோம், கிட்டாதுபோயின்
சடாயு போல் உயிர் துறப்போம்)
என்று சொன்னான் அனுமான்.
அச் சொற்களைக் கேட்டுத் துடித்தான்
கழுகின் அரசன், சம்பாதி என்பான்.
எனக்குப் பின் பிறந்தவன்,
சத்தியத்தைத் தவறாது கடைபிடிப்பவன்
இறந்தான் என்ற செய்தி கேட்டுப் புலம்பினான்.
மலை போல் நடந்து வந்து
அந்த வானர வீரர்களை அணுகினான்.



4707.
'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி 
   கடல் இலங்கை; அவ் ஊர் 
பாச வெங்கரத்துக் கூற்றும் 
   கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம் 
   நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள் 
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் 
   பரிசு இயைவது?' என்றான்.

(சடாயு பற்றி அனுமான் உரைத்தான்.
சம்பாதி தன் வரலாறை உரைத்தான்.
சீதையைத் தேடி வந்தது பற்றி 
அனுமான் உரைத்தான்.
இராவணன் அவளைக் கவர்ந்து சென்றதைத் 
தான் கண்டதாய் சம்பாதி உரைத்தான்)

இங்கிருந்து நூறு யோசனை^ தூரம் இருக்கும்.
இலங்கை, ஒலி எழும் கடலால் சூழப்பட்டிருக்கும்.
கொடிய பாசக்கயிறு கொண்டுள்ள யமனுக்கும் 
அந்தப் பக்கம் நோக்க அச்சம்.
அக் கொடிய அரக்கனின் கோபம் 
நெருப்பையும் எரித்திடும்.
நல்ல உள்ளம் கொண்டவர்களே, 
நீங்கள் அங்கே செல்வது எங்ஙனம் ?' 
என்று கேட்டான் சம்பாதி.

^ஒரு யோசனை - 13 KMs


மயேந்திரப் படலம் 

4729.
'ஏகுமின், ஏகி, எம் உயிர் 
   நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் 
   இன்னல் குறைவு இல்லாச் 
சாகரம் முற்றும் தாவிடும் நீர் 
   இக் கடல் தாவும் 
வேகம் அமைந்தீர்!' என்று 
   விரிஞ்சன் மகன் விட்டான்.

'விரைந்து செல்க; அவ்வாறு சென்று, 
எங்களுக்கு உயிர் தந்த பெருமை கொள்க;
நல்ல செய்தியைக் கொண்டு வருக;
உம் தலைவன் இராமனின் 
துன்பம் முழுவதையும் நீக்க வழி செய்க;
இந்தக் கடலைக் கடந்து செல்லும்  
வலிமை பெற்றவரே, கிளம்புக' 
என்று பிரம்மகுமாரன் சாம்பவான் 
அனுமானைத் தூண்டிவிட்டான்.

4739.
மின் நெடுங் கொண்டல் தாளின் 
   வீக்கிய கழலின் ஆர்ப்ப 
தன் நெடுந் தோற்றம் வானோர் 
   கட்புலத்து எல்லை தாவ 
வல் நெடுஞ் சிகர கோடி  
   மயேந்திரம் அண்டம் தாங்கும் 
பொன் நெடுந் தூணின் பாத 
   சிலை என, பொலிந்து நின்றான்.


(இலங்கை செல்ல ஒத்துக்கொண்ட அனுமான்)
மின்னலொடு கூடிய மேகங்கள் 
காலில் கட்டப்பட்ட கழல் போல் ஒலிக்க,
பேருருவம் எடுத்தத் தோற்றம், தேவர்களின் 
பார்வை படும் தூரம் தாண்டிச் செல்ல,
சிகரம் பல உடைய மகேந்திர மலை 
அண்டத்தையே தாங்கி நிற்கும் தூண்களின் 
அடியிலிட்ட கல்லைப் போலத் தெரிய  
மலை உச்சியில் அனுமான் நின்றான்.


கிட்கிந்தா காண்டம் முற்றிற்று

(  தொடரும் )

No comments:

Post a Comment