5057.
இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம்
என்னோடும் முடிந்திடுக;
கற்றைப் பூங் குழலாளைச்
சிறைவைத்த கண்டகனை
முற்றாய் போர் முடித்தது ஒரு
குரங்கு என்றால், முனைவீரன்
கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக்
குறைவு உண்டாம்! எனக் குறைந்தான்.
இன்றே இவனோடு போர் புரியவேண்டும்
என்ற கோபம் என்னுள்ளேயே அடங்கட்டும்.
மலரணிந்த அடர்ந்த கூந்தலையுடைய
சீதையை சிறைபிடித்த, முள் போன்றவனை
ஒரு குரங்கு சண்டையில் வென்றது
என்று சொல்லப்பட்டால்,
இராமனின் வில்லிற்கு களங்கம் உண்டாகும்
என்பதனாலே, தன் கோபத்தைக்
கட்டுப்படுத்திக் கொண்டான், அனுமான்.
5068.
எள் உறையும் ஒழியாமல்
யாண்டையுளும் உளனாய்த்தான்
உள்உறையும் ஒருவனைப் போல்
எம்மருங்கும் உலாவுவான்
புள் உறையும் மானத்தை
உறநோக்கி அயல் போவான்
கள் உறையும் மலர்ச்சோலை
அயல் ஒன்று கண்ணுற்றான்.
எள் கிடக்கும் சிற்றிடத்தையும் விடாது,
ஆராய்ந்தான் அனுமான்.
தன் இதயத்தில் இருக்கும் இராமனைப் போல்
எல்லா இடத்திலும் உலாவித் தேடினான்.
பறவைகள் சுற்றித்திரியும் வானத்தைப்
பார்த்தபடி, அரண்மனையிலிருந்து வெளியேறினான்.
தேன் நிறம்பிய மலர்கள் பூத்த
சோலை ஒன்றை அருகில் கண்டான்.
காட்சிப் படலம்
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென் மருங்குபோல், வேறு உலா அங்கமும் மெலிந்தாள்.
பருத்த இடை உடைய,
கொடிய அரக்கியர் துன்புறுத்த அந்த இடத்தில்,
கல்லின் இடையில் எக்காலத்திலும் ஒரு துளி கூட
நீர் இல்லாது வளர்ந்த மூலிகைச் செடி போல்,
உடலும் உள்ளமும் வாடியவளாய்,
மெலிந்த இடையோடு, உடல் மெலிந்த சீதை,
அங்கு, அந்த இடத்தில் இருந்தாள்.
5073.
விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.
எழுந்தாள், பூமியில் விழுந்தாள்,
தேம்பித் தேம்பி அழுதாள்,
உடல் சூடாவதை உணர்ந்தாள்,
அஞ்சினாள், ஏங்கினாள், வருந்தினாள்,
இராமனை மனதுள் துதித்தாள், தளர்ந்தாள்,
உடல் நடுக்கம் கொண்டாள்,
துன்பத்தால் வருந்தி பெருமூச்சு கொண்டாள்,
புலம்பினாள், இதைத் தவிர
வேறெதையும் அறியாதவளாய் இருந்தாள்.
5077.
'அரிது போகவோ, விதி வலி கடத்தல்?' என்று அஞ்சி
'பரிதிவானவன் குலத்தையும், பழியையும் பாரா,
சுருதி நாயகன், வரும் வரும்' என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அழைக்கின்ற கண்ணாள்.
விதி வலிமையைக் கடந்து, சிறை தப்பிப் செல்லுதல்
முடியாதது என்று அஞ்சினாள்.
சூரிய வம்சத்தின் குலத்தைக் காக்க,
தனக்கு நேர்ந்த நேர்ந்த பழியை நீக்க,
வேதத்தின் நாயகன் வருவான் என்று நம்பினாள்.
அவன் வருகையை எதிர்பார்த்து, எல்லா திசைகளையும்
துழாவும் கண்களையுடையவளானாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment