சுந்தர காண்டம்
கடல் தாவு படலம்
4756.
வால்விசைத்து எடுத்து, வன்தாள்
மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோள் விசைத் துணைகள் பொங்கக்
கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால்விசைத் தடக்கை நீட்டி
கண்புலம் கதுவா வண்ணம்
மேல்விசைத்து எழுந்தான், உச்சி
விரிஞ்சன்நாடு உறிஞ்ச - வீரன்.
வாலை வேகமாக உயர்த்தினான்.
வலிமையான திருவடிகளை மடக்கினான்.
மார்பைச் சுருக்கினான்.
பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற
இரண்டு புஜங்கள் பூரிக்க நின்றான்.
கழுத்தை ஒடுக்கி,
தூண்டும் காற்றைப் போன்று கைகளை நீட்டி,
கண் பார்வை காண முடியாதபடி,
தலை பிரம்ம லோகத்தை உராயுமாறு
விண்ணில் வேகமாக எழும்பினான், வீர அனுமான்.
4765.
விண்ணவர் ஏத்த, வேத
முனிவரர் வியந்து வாழ்த்த,
மன்னவர் இறைஞ்ச செல்லும்
மாருதி மரம்உள் கூர
'அண்ணல் வாள்அரக்கன் தன்னை
அமுக்குவென்' இன்னம் என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும்
கைலைஅம் கிரியும் ஒத்தான்.
தேவர்கள் போற்றினர்,
வேதமறிந்த முனிவர்கள் வியந்து வாழ்த்தினர்.
மண்ணுலகத்தவர் வணங்கினர்,
அனுமன், உள்ளத்தே கோபத்தோடு
'கொடிய அரக்கன் தன்னை இன்னொருமுறை
அழுத்துவேன்' என்று எண்ணியபடி
சிவபெருமான் இல்லாது தனியே பறக்கும்
கைலை மலையை ஒத்திருந்தான்.
4795.
அன்னான் அருங்காதலன் ஆதலின்
அன்பு தூண்ட
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு
உரித்தாயது இன்மை
பொன்னார் சிகரத்து இறை ஆறினை
போதி என்னா
உன்னா உயர்ந்தேன் - உயர்விற்கும்
உயர்ந்த தோளாய்!
(வாயுதேவனால் முன்னம் ஒருமுறை காக்கப்பட்ட
மைந்நாகமலை ...)
'உயர்ந்த அனைத்தையும் விட உயர்ந்தவனே,
வாயுதேவனின் மைந்தனே,
அவன்பால் நான் அன்பு கொண்டிருப்பதால்,
என்னால் உனக்கு செய்யக்கூடிய உபகாரம்
வேறு ஒன்றும் இல்லை எனினும்
பொன் போன்ற சிகரத்தில்
கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டுச் செல்,
அதன்பொருட்டே நான்
நீரிலிருந்து மேலெழும்பி வந்தது;
என்றுரைத்தான்.
4801.
ஈண்டே கடிது ஏகி இலங்கை
விலங்கள் எய்தி
ஆண்டான் அடிமைத் தொழில்
ஆற்றலின் ஆற்றல் உண்டே?
மீண்டால் நுகர்வென் நல் விருந்தென
வேண்டி மெய்ம்மை
பூண்டானவன் கட்புலம் பிற்பட
முன்பு போனான்.
இப்பொழுதே வேகமாகச் செல்வேன்.
இலங்கைத் தீவை விரைவாய் அடைவேன்.
இராமபிரான் இட்ட பணியை
இனிதே முடிக்கும் ஆற்றல் கொண்டேன்.
திரும்ப வந்தபிற்பாடு, நீ
தரும் விருந்தை ஏற்பேன் என்றான்,
மைநாக மலையின் பார்வை பின் தொடர
முன்னே சென்றான், உண்மையையே
ஆபரணமாய் அணிந்திருந்த அனுமான்.
4805.
மூன்றுற்ற தலத்திடை முற்றிய
துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை
உணர்த்து நீ என்று
ஆன்றுற்ற வானோர் குறை நேர
அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள் சுரசைப் பெயர்ச்
சிந்தை தூயாள்.
மூன்று உலகத்தின் துயர் யாவும் துடைப்பேன்
என்று ஏற்றுக்கொண்டு வந்துள்ள அனுமான்
வீரம் கண்டு எங்கட்கு உணர்த்து என்று
தேவர்கள் வேண்ட,
சுரசை என்ற பெயர் கொண்டவள்,
நல்லவள்,
அரக்கி வடிவில் நின்றாள்
அனுமான் வழி மறித்தாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment