Thursday, March 26, 2020

கம்பராமாயணம் 76


சம்புமாலி வதைப் படலம்

5550.
கூம்பினகையன், நின்ற குன்று எனக்
   குவவுத் திண் தோள்,
பாம்பு இவர்தறுகண், சம்புமாலி
   என்பவனைப் பாரா,
‘வாம் பரித்தானையோடு வளைத்து,
   அதன் மறனை மாற்றி,
தாம்பினின்பற்றி, தந்து, என் மனச்
   சினம் தணித்தி’ என்றான்.

கைகளைக் குவித்து வணங்கியவனாய்
மலை போல் திரண்ட வலிய
தோள்களை உடையவனாய்
பாம்பைப் போன்று அஞ்சாதவனாய்
சம்புமாலி என்னும் அரக்கன் வந்து நின்றான்.
'தாவிச் செல்லும் குதிரைகளோடு செல்,
அந்தக் குரங்கை வளைத்துப் பிடி,
அதன் வலிமையை அடக்கு,
கயிற்றினால் கட்டு, என்னிடம் கொண்டு வா,
என் கோபத்தை ஆற்று, போ'
என்று இராவணன் கூறினான். 



5569.
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு 
   அணி வகுத்து, அனிகம்தன்னை 
மூண்டு இரு புடையும் முன்னும் 
   முறை முறை முடுக ஏவி 
தூண்டினன் தானும் திண் தேர்;
   தோரணத்து இருந்த தோன்றல்,
வேண்டியது எதிர்ந்தான் என்ன, 
   வீங்கினான், விசயத் திண் தோள்.


சம்புமாலி தனது சேனையை வெவ்வேறு 
அணிகளாகப் பிரித்தான்
அனுமனது இரண்டு பக்கங்களிலும் எதிரிலும் 
விரைய ஆணையிட்டான்.
அவனும் தனது தேரில் ஏறிப் புறப்பட்டான்.
அனுமான் அவ்வமயம் தோரணத்தின் மீது 
அமர்ந்திருந்தான்.
அரக்கர் வருகையை எதிர்நோக்கியிருந்தான்.
தான் எண்ணியது வருகின்றது என்று 
தோள்கள் புடைக்க நின்றான்.



5573.
இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், 
   உயர்ந்தான் 
திரிந்தனன், புரிந்தனன், என நனி 
   தெரியார்;
விரிந்தவர், குவிந்தவர், விலங்கினர், 
   கலந்தார்,
பொருந்தினர், நெருங்கினர், களம் படப் 
   புடைத்தான்.

தோரண வளைவில் அமர்ந்திருந்தவன்
எழுந்தான், இறங்கினான். நிமிர்ந்தான்,
யார் என்ன என்றேதும் பார்க்காது 
பரவி நின்றவரையும், 
நெருங்கி நின்றவரையும்  
விலகிச் சென்றவரையும், ஒன்றுபடக் 
கலந்து நின்றவரையும்,
போர்க்களத்தில் வந்த அனைவரையும் 
அழிந்து போகும்படி, ஒரு சேர 
அடித்துக்கொன்றான் 


5596.
சலித்தான் ஐயன்; கையால் எய்யும் 
   சாரத்தை உகச் சாடி 
ஒலித் தார் அமரர் கண்டார் ஆர்ப்ப,
   தேரினுள் புக்கு,
கலித்தான் சிலையைக் கையால் வாங்கி,
   கழுத்தினிடை இட்டு,
வலித்தான், பகு வாய் மடித்து மலைபோல் 
   தலை மண்ணிடை வீழ.

( அயராது போரிடும் சம்புமாலியால் )
சலித்துப் போனான் அனுமான்,
கையாலேயே அவன் எய்தும் அம்புகளைத் 
தடுத்தான்,
மாலை அணிந்த தேவர்கள் ஆர்ப்பரிக்க 
சம்புமாலியின் தேரினுள் பாய்ந்தான்.
வில்லைக் கையினாலேயே பற்றினான்.
தன் திறந்த வாயை மடித்து 
மலை போன்ற அவன் தலை மண்ணில் விழ,
அவ்வில்லை அவன் கழுத்தில் மாட்டி இழுத்தான்.



பாசப் படலம்

5717.
அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை 
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் 
எவ் வழி உலகமும் குலைய, இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்.

(அனுமனோடு நடந்த போரில் 
சேனாபதிகள் தோற்று இறக்க, 
அக்ககுமரன் இறக்க)

அந்த சமயத்தில், 
அங்கு நடந்த போர்ச் செய்திகளைக் கேட்ட
ஆண்மை மிகுந்த, மேகநாதன்,
கண்களிலிருந்து கனல் தெறிக்கக் 
உலகம் யாவும் நடுங்கிட 
இந்திரனின் சேனையை அழித்து 
வெற்றி கொண்டவன்,   
கோபம் மிக்கவனானான்.

( தொடரும் )


No comments:

Post a Comment