Monday, March 30, 2020

கம்பராமாயணம் 80



5980.
நீரை வற்றிடப் பருகி, மா நெடு
   நிலம் தடவி,
தாருவைச் சுட்டு, மலைகளைத்
   தழல் செய்து, தனி மா
மேருவைப் பற்றி எரிகின்ற கால
   வெங் கனல் போல்,
ஊரை முற்றுவித்து, இராவணன்
   மனை புக்கது உயர் தீ.

நீர் நிலைகளை வற்றிப் போகும்படி உறிஞ்சி,
பெரிய நீண்ட நிலம் முழுவதும் பரவி அழித்து
மரங்களை எரித்து, மலைகள் யாவையும்
தணல் போல் எரிய வைத்து,
மா மேரு பற்றி எறிவது போன்று 
இலங்கை நகர் முழுவதையும் எரித்து,
இராவணனுடைய அரண்மனையுள் புகுந்தது,
அனுமான் இட்ட அந்தத் தீ.



5987.
கரங்கள் கூப்பினர், தம் கிளை 
   திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது 
   இயம்பின்; ‘இறையோய் !
தரங்க வேலையின் நெடிய தன் 
   வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது ஈது’ என்றலும், 
   இராவணன் கொதித்தான்.

(தீ ஏற்பட்ட காரணத்தை இராவணன் வினவ)
சுற்றத்தாரையும் செல்வத்தையும் இழந்து,
ஏங்கிக்கொண்டிருக்கின்ற அரக்கர் கரம் கூப்பினர்,
பின்வரும் செய்தியைக் கூறினர்,
'அரசே - கடலினும் நீண்ட வாலிலே 
நாம் வைத்த நெருப்பாலே 
அக் குரங்கு எரித்தது இது' என்றனர்,
அதைக் கேட்டதும் 
இராவணன் கோபம் கொண்டான். 



6004.
வந்தவர்சொல்ல மகிழ்ந்தான்;                    
வெந் திறல்வீரன் வியந்தான்;
‘உய்ந்தனென்’என்ன, உயர்ந்தான்,
பைந்தொடிதாள்கள் பணிந்தான்.

(அனுமன் வைத்த தீ, அசோகவனத்தைத் 
சேதப்படுத்தவில்லை என்று)

வானவர் சொன்னர், அதனை
வாயு புத்திரன் கேட்டு மகிழ்ந்தான்,
ஆண்மை மிக்க வீரன் வியந்தான்,
தீயவினையிலிருந்து தப்பினேன் 
என்று எண்ணினான்.
உடன் அவ்விடம் விட்டு எழுந்து, 
சீதா பிராட்டியின் திருவடி பணிந்து 
விடை பெற்றுச் சென்றான்.


திருவடி தொழுத படலம்


6010.
அழுதனர் சிலவர்; முன் நின்று 
   ஆர்த்தனர் சிலவர்; அண்மித்
தொழுதனர் சிலவர்; ஆடித் 
   துள்ளினர் சிலவர்; அள்ளி
முழுதுற விழுங்குவார் போல் 
   மொய்த்தனர் சிலவர்; முற்றும்
தழுவினர் சிலவர்; கொண்டு 
   சுமந்தனர் சிலவர், தாங்கி.

(அனுமனைக் கண்ட அவ்வானர வீரர்களுள்)
சிலர் மகிழ்ச்சியினால் அழுதார்கள்; 
சிலர் முன் நின்று ஆரவாரித்தார்கள்; 
சிலர் நெருங்கி வந்து வணங்கினார்கள்; 
சிலர் குதித்துக் கூத்தாடினார்கள்; 
சிலர் அனுமனை விழுங்குபவர் போன்று 
அவனை நெருங்கிச் சூழ்ந்து  கொண்டனர்; 
சிலர் அனுமனைஆலிங்கனஞ் செய்தார்கள்;
சிலர் தூக்கிச் சுமந்து கொண்டார்கள். 


6017.
‘யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது
                          இறையும் இல்லை;
சேவகன்தேவி தன்னைக் கண்டமை விரைவின்
                          செப்பி,
ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர்
                             ஆற்றலே ஆம்;
போவது புலமை’ என்னா, பொருக்கென எழுந்து
                             போனார்.

இனி வேறெதையும் 
எண்ணிப் பார்க்கத் தேவையில்லை;
நாம் செய்யத்தக்கது, தேவியைப்  
பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; 
அண்ணல் மனத்தில் உள்ள துன்பத்தைத் 
தணியச் செய்தலே ஆகும்;
எனவே இனி இராமபிரானிடம் செல்வதே 
அறிவுள்ள செயலாகும் என்று அனைவரும் 
கருதி, விரைந்து கிளம்பினர்.

( தொடரும் )

No comments:

Post a Comment