Tuesday, March 24, 2020

கம்பராமாயணம் 74




5361.
‘பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரைஆகிலதேஎனின்,
இற் பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் ?

பொன் மலை போன்ற இலங்கை மாநகரம்
அரக்கர்களின் எலும்பு மலையாக வேணாமா ?
அவ்வாறு ஆகாது போனால், என் பிறப்பையும்
ஒழுக்கத்தையும், சிதைவு இல்லா கற்பையும்
உலக மக்கட்கு நான் எங்ஙனம் தெரிவிப்பேன்?


5366.
‘அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
மின்னும்மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
கன்னி, என்வயின் வைத்த கருணையாள்,
சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான்.

(விரும்பாத பெண்ணைத் தொட்டால் 
தலை சிதறும் என்ற ... )
அந்த சாபம் இராவணனுக்கு உண்டு என்று,
ஆண்மை நிறைந்த, 
ஒளிவீசும் முடியை அணிந்த,
உண்மையையே பேசும் வீடணனின் பெண் 
என் மேல் இரக்கம் கொண்டு, 
சொன்னது உண்டு,
என் நடுக்கம் குறைப்பதற்கென்று'
என்று சீதை அனுமனிடம் சொன்னாள்.



5373.
‘இன்னும்,ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னைநோக்கிப் பகர்ந்தது, நீதியோய் !
பின்னை ஆவிபிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை;இதனை மனக் கொள் நீ.


இன்னும் ஒரு மாதம் தான் நான் காத்திருப்பேன் 
நீதிமானே, உன்னிடம் சொல்லிவிட்டேன்;
(ஒரு மாதத்திற்குள் இராமன் வராவிட்டால்)
அதன்பின் என் ஆவியை பிடித்து வைத்திருக்க
முடியாதவளாவேன்; 
அந்த மன்னன் மேல் ஆணை; 
நினைவில் கொள்ள வேண்டும் நீ இதனை.
(என்று சொல்லி அனுப்பினாள் சீதை)



5421.
‘நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய்.

'முன்னம் ஒரு நாள், 
வானளவு வளர்ந்த சித்திரக்கூட மலையில்,
காகம் ஒன்று வந்தது, தன் கூரான நகத்தினால் 
என் உடலைக் கீறியது.
இராமன் கோபம் கொண்டான். 
கல்லின் பக்கத்தில் இருந்த புல்லை எடுத்தான்.
அதையே பிரம்மாஸ்த்திரமாய்க் கொண்டு 
எறிந்தான்.
இந்த செய்தியை மெல்லச் சொல்வாய்'
என்று சொல்லி அனுப்பினாள் சீதை. 



5422.
‘ “என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு 
     யார் பெயர் ஈகேன் ?
மன்ன !”என்றலும், “மாசு அறு 
     கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர்ஆக” என 
   அன்பினொடு, அந் நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-
   மெய்ம்மை தொடர்ந்தோய் !

'நான் அன்போடு வளர்த்து வரும் இக் கிளிக்கு 
என்ன பெயர் வைத்து அழைக்கட்டும், அரசே?'
என்று ஒருமுறை கேட்டேன்.
'குற்றமற்ற, என் தாய்,  கேகேயன் புதல்வி, 
கைகேயி பெயரையே வை' என்று சொன்னான்.
அந்த மெய்யான வார்த்தைகளைச் சொல்லிடு,
உண்மை நெறியில் இயங்கும் அனுமனே!'
என்றும் சொன்னாள்.




5427.
‘சூடையின்மணி கண் மணி ஒப்பது, 
   தொல் நாள்
ஆடையின்கண்இருந்தது, பேர் 
   அடையாளம்;
நாடி வந்து எனதுஇன் உயிர் நல்கினை, 
   நல்லோய் !
கோடி’ என்றுகொடுத்தனள், 
   மெய்ப் புகழ் கொண்டாள். 
 
'சூடாமணி இது,
என்னுடைய கண்ணின் மணி போன்றது,
இத்தனை நாள், என் ஆடையிலேயே 
முடிந்து வைக்கப்பட்டிருந்தது.
பெரிய அடையாளமாய் நான் தருவது,
விரும்பி வந்தாய், என் உயிர் காத்தாய்.
இதனைக் கொள்வாய்' என்று கூறி 
அதனைத் தந்தாள்,
உண்மையான புகழைக் கொண்டாள்.


( தொடரும் )



No comments:

Post a Comment