Monday, March 16, 2020

கம்பராமாயணம் 66



4807.
தீயே எனல்ஆய பசிப்பிணி
   தீர்த்தல் செய்தாய்
ஆயே விரைவிற் றெனை அண்மினை
   வண்மை யாள!
நீயே இனி வந்துஎன் நிணம்கொள்
   பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழிமற்றிலை
   வானின் என்றாள்.

'கொடைப்பண்புடையோனே,
பசி நெருப்பு நிறைந்திருக்கும்
என் வயிற்றை நிரப்பிடி;
விரைவாய் என்னருகில் வந்திடு;
நீயாகவே, கூராயிருக்கும்
என் பற்களினிடையில் நுழைந்திடு;
வானில் வேறு வழியில்லை என்பதை
உணர்ந்திடு' என்றாள்.







4811.
நீண்டான் உடனே சுருங்கா
   நிமிர்வாள் வயிற்றின்
ஊண்தான் என உற்று ஓர் உயிர்ப்பு
   உயிராத முன்னர்
மீண்டான் அது கண்டனர் விண்உறை
   வோர்கள் எம்மை
ஆண்டான் வலன்என்றுஅலர் தூஉய் நெடிது
   ஆசி சொன்னார்.


உயர்ந்து வளர்ந்து நின்றான் அனுமான்.
(தன் வாயை அகன்று திறந்தாள் சுரசை)
சடக்கென தன்னைச் சுருக்கிக் கொண்டான்.
ஓங்கி வளர்ந்த சுரசையின் வயிற்றில்
உணவு போன்று விரைந்தான்.
அவள் ஒரு மூச்சு விடும்முன் வெளிப்பட்டான்.
தேவர்கள் அனுமனின் சாதுரியத்தை கண்டனர்.
உள்ளம் மகிழ்ந்தனர்.
நம்மைக் காக்க வந்தவன் வல்லமை உடையவன்
என்று புரிந்துகொண்டனர்.
மலர் தூவி ஆசி வழங்கினர்.



4829.
தகம்புடைக் கனக நாஞ்சில் 
   கடிமதில் தணித்து நோக்கா 
அசும்புடைப் பிரசத்  தெய்வக் 
   கற்பக நாட்டை அண்மி 
விசும்பிடைச் செல்லும் வீரன் 
   விலங்கி வேறு இலங்கை மூதூர்ப் 
பசும்சுடர்ச் சோலைத்து ஆங்கோர் 
   பவளமால் வரையில் பாய்ந்தான்.
 
ஆகாயமார்க்கமாய்ச் செல்லும் அனுமன்,
வேகம் குறைத்து,
இலங்கையின் பழைய ஊரான,
குடம்குடமாய்த் தேன் கசியும்,
தேவலோகத்தை எட்டும் அளவு உயர்ந்து,
கற்பக மரங்கள் வளர்ந்த,
பசுமை நிறைந்த சோலையின்,
ஒரு பக்கத்தில் அமைந்த  
பவளமலையில் குதித்தான்.



ஊர் தேடு படலம் 


4835.
பொன்கொண்டு இழைத்த? 
   மணியைக் கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? 
   வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய 
   எனத்தெளிவு இலாத 
வன்கொண்டல் விட்டுமதி 
   முட்டுவன மாடம்.

பொன்னால் செய்யப்பட்டனவா ? 
மாணிக்கங்களால் மூடப்பட்டனவோ ?
மின்னலைக் கொண்டு செய்திருப்பார்களோ ?
வெயிலால் முலாம் பூசியிருப்பார்களோ ?
எதைக் கொண்டு இதை இப்படி செய்திருப்பார்கள் 
என்ற முடிவுக்கு வர முடியாது, உயர்ந்து  நிற்கும்  
மேகமண்டலங்களைப் பின்னே தள்ளிவிட்டு
நிலவை முட்டும் மாடிவீடுகள்' 
என்று அனுமான்  எண்ணத் தொடங்கினான்.


4869.
காயத்தால் பெரியர்; வீரம் 
   கணக்கு இலர்; உலகம் கல்லும் 
ஆயத்தார்; வரத்தின் தன்மை 
   அளவற்றார்; அறிதல் தேற்றா 
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் 
   வரம்பும்உண் டாமோ? மற்று ஓர் 
தேயத்தார் தேயம் சேறல் 
   தெருவிலோர் தெருவில் சேறல்.


பெரிய உடம்பு கொண்டவர்கள்,
அளக்கமுடியாத வீரம் உள்ளவர்கள்,
உலகத்தைத் தோண்டியெடுக்கும் 
வல்லமை உள்ள சேனை உடையவர்கள்,
அவர் பெற்ற வரத்தின் தன்மை 
அளக்க முடியாதவர்கள்.
பிறரால் அறிந்துகொள்ள முடியாதவர்கள்;
மாயை நிறைந்தவர்கள்,
இப்படிப்பட்டவர்கட்கு எல்லை என்று 
ஏதேனும் இருக்கமுடியுமா?
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு 
செல்வது போன்றது, 
அவர் வாழும் ஒரு தெருவிலிருந்து 
அடுத்த தெருவிற்குப் போவது.


( தொடரும் )



No comments:

Post a Comment