4935.
ஆத்துறு சாலை தோறும்,
ஆனையின் கூடம் தோறும்,
மாத்துறு மாடம் தோறும்,
வாசியின் பந்தி தோறும்,
காத்துறு சோலை தோறும்,
கருங்கடல் கடந்த தாளன்,
பூத்தொறும் வாவிச் செல்லும்
பொறிவரி வண்டின் போனான்.
பசுக்கள் கட்டப்பட்டிருந்த இடங்களைப்
பார்த்தான்.
யானைக் கொட்டாரங்களைக் கண்டபடிக்
கடந்தான்.
பலவகை விலங்குகளின் இடங்களை
வியந்து நோக்கியபடி நகர்ந்தான்.
குதிரைச் சாலைகள் வழியே,
பாதுகாப்பு நிறைந்த சோலைகளை ரசித்தபடி
கடலையே தாண்டிய அனுமான்,
பூக்கள் தோறும் பறந்துத் திரியும்
புள்ளிகளும் வரிகளும் கொண்ட
வண்டினைப் போலச் சென்றான்.
(இலங்கையில், ஒவ்வொரு இடமாக
பார்த்துக்கொண்டே வந்த அனுமான்,
கும்பகர்ணனின் அரண்மனையை அடைந்தான்)
4965.
குறுகி, நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும் குறித்த
இறுகு திண்புயம் இருபதும், 'இவற்குஇலை' என்னா,
மறுகி ஏறியமுனிவு எனும் வடவைவெங் கனலை
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால், அவித்தான்.
அரக்கனை நெருங்கி நோட்டம் விட்டான்.
இராவணனுக்கு அடையாளமான
பத்துத் தலையும், இருபது தோள்களும்
இவனுக்கு இல்லை என்பதைக் கண்டு கொண்டான்.
உள்ளம் கலங்க, கோபத் தீ வளர,
(அக் கோபத்தால் வந்த காரியம்
கெட்டுவிடும் என்பதால்)
அறிவை நீராக்கி கோபத்தீயை அணைத்தான்.
4971.
உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்
'குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான்
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறைச் சென்றான்
பொற்றை மாடங்கள் கோடிஓர் நொடியிடைப் புக்கான்.
(அடுத்து, வீடணன் வாயிலை அடைந்தான்)
இவன் யாராயிருக்கும் என்று உற்று நோக்கினான்.
உறக்கத்தில் இருப்பவன் உள்ளுணர்வை ஆராய்ந்தான்.
'இவன் குற்றமற்றவன்' என்று அறிந்துகொண்டான்.
பகையுணர்ச்சி கொள்ளாது, அனுமான்,
வேறொரு வழியில் தன் வேலையைத் தொடர்ந்தான்.
மலை போன்ற மாடங்கள் பலவற்றை
ஒரு நொடிப்பொழுதில் புகுந்து வெளிப்பட்டான்.
4975.
வளையும் வாள்எயிற்று அரக்கனோ?
கணிச்சியான் மகனோ?
அளையில் வாள்அரி அனையவன்
யாவனோ? அறிவேன்;
இளைய வீரனும், ஏந்தலும்,
இருவரும் பலநாள்
உளைய உள்ள போர் இவனோடும்
உளது என உணர்ந்தான்.
வளைந்த பற்களுடைய அரக்க இனத்தவனோ?
மழுப்படை ஏந்திய சிவன் மகன் முருகனோ ?
குகையில் உறங்கும் சிங்கம் போன்று இருக்கானே,
இவன் எவனோ ? தெரியவில்லையே;
இலக்குவனும், இராமனும், மன உளைச்சலடைய
பல நாள் போர் புரியக் கூடியவன் இவன்,
என்று மனதுள் குறித்துக்கொண்டான்.
5040.
நூல் பெருங்கடல் நுணங்கிய கேள்வியன்
நோக்கினன்; மறம் கூரும்
வேல் பெருங்கடல் புடைபரந்து ஈண்டிய
வெள்ளிடை வியன்கோயில்
பால் பெருங்கடல் பல்மணிப் பல்தலைப்
பாப்புடைப் படர்வேலை
மால் பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர்
வனப்பினன் துயில்வானை.
பல நூல்களைப் படித்தும், நுட்பமான
கேள்வி அறிவும் நிறைந்த அனுமான்,
பெரிய அரண்மனையில்
வீரம் நிறைந்த, கையில் வேலேந்திய
கடல் போன்ற வீரர்களின் காவலினிடையில்,
பாற்கடலில்,
பாம்பு மெத்தையில்
பள்ளி கொண்ட திருமாலைப் போன்று,
அழகான இராவணன் உறங்குவதைப் பார்த்தான்.
( தொடரும் )
No comments:
Post a Comment