Friday, March 13, 2020

கம்பராமாயணம் 63



தானை காண் படலம்

4426.
கை அஞ்சு ஆயுதம் உடைய
   அக் கடவுளைக் கண்டும்
மெய் அஞ்சாதவன், மாதிரம்
   சிறிது என விரிந்த
வையம் சாய்வரத் திரிதரு
   வானர சேனை
ஐ-அஞ்சு ஆயிரகோடி கொண்டு
   அனுமன் வந்து அடைந்தான்.

சுட்டெரிக்கும் வெயிலை ஆயுதமாகக் கொண்டு
உலவும் சூரியனைக் கண்டு அஞ்சாதவன்,
திசைகள் அளவில் சிறியதாகுமாறு
நிலம் கணம் தாங்காது சாய்ந்து விடுமாறு
இருபத்தைந்தாயிரம் கோடி வானர சேனைகளை
வழிநடத்தியபடி அனுமன் வந்து சேர்ந்தான்.



4431. 
ஒடிக்குமேல், வட மேருவை 
   வேரோடும் ஓடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக 
   முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல், பெருங் காற்றையும் 
   கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் 
   குடங்கையின் குடிக்கும்;

வானரப் படை -
ஒடிக்கச் சொன்னால்,
வடக்கிலுள்ள மேரு மலையை 
வேரோடு ஒடிக்கும் வல்லமை பொருந்தியது.
இடிக்கச் சொன்னால்,
பரந்து விரிந்த ஆகாயத்தையும் 
இடித்துத் தகர்க்கும் வல்லமை பொருந்தியது.
பிடிக்கச் சொன்னால்,
காற்றையும், எமனையும் கூட   
பிடித்துவிடும் வல்லமை பொருந்தியது.
குடிக்கச் சொன்னால்,
ஏழு கடலையும் உள்ளங்கையில் அள்ளிக் 
குடித்துவிடும் வல்லமை பொருந்தியது.



நாட விட்ட படலம்


4453.
'தென் திசைக்கண் 
   இராவணன் சேண் நகர் 
என்று இசைக்கின்றது, என் 
   அறிவு, இன்னணம் 
வன் திசைக்கு இனி 
   மாருதி நீ அலால் 
வென்று இசைக்கு உரியார் 
   பிறர்  வேண்டுமோ ?'

'இராவணனின் நீண்ட பெரிய நகரம் 
தெற்கு திசையில் உள்ளதாக 
என் அறிவு உணர்த்துகின்றது.
இப்பொழுது அந்தப் பக்கம்,
மாருதி உன்னையல்லால் வேறு யார் 
செல்ல முடியும் என்று தோன்றுகிறது.
அங்ஙனம் சென்று, வென்று புகழ் பெற 
நீ ஒருவனே போதும், 
வேறாரும் வேண்டுமா என்ன ?' 
என்று சொன்னான் சுக்ரீவன்.



4519.
இனைய ஆறு உரைசெயா 
   'இனிதின் ஏகுதி' எனா,
வனையும் மா மணி நல் 
   மோதிரம் அளித்து, 'அறிஞ! நின் 
வினை எலாம் முடிக!' எனா 
   விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான் 
   அருளொடும், போயினான்.

இவ்விதம் இராமன் அனுமானிடம், சீதையின் 
அங்கஅடையாளங்களை உரைத்தான்,
சீதைக்கும் தனக்குமிடைய நடந்த 
சில உரையாடல்களை எடுத்துரைத்தான்,
'இனிதாகச் செல்வாய்' என்று வாழ்த்தினான்.
தன் இரத்தின மோதிரத்தைத் தந்தான்.
'அறிஞனே, நீ மேற்கொண்ட செயல் 
இனிதே முடியட்டும்' என்று விடைகொடுத்தான்.
நீண்ட வீரக் கழல் அணிந்த அனுமான் 
அக்கணமே அங்கிருந்துக் கிளம்பினான்.



( தொடரும் )

No comments:

Post a Comment