Saturday, March 28, 2020

கம்பராமாயணம் 78




5834.
‘இறுத்தனன்கடி பொழில்,
   எண்ணிலோர் பட
ஒறுத்தனன்’ என்றுகொண்டு
   உவக்கின்றாள், உயிர்
வெறுத்தனள்சோர்வுற,
   வீரற்கு உற்றதை,
கறுத்தல் இல்சிந்தையாள்
   கவன்று கூறினாள்.


அசோகவனத்து மரங்களை ஒடித்தானாம்,
மணம் மிக்க சோலையை அழித்தானாம்,
அளவிறந்த அரக்கர்களைக் கொன்றானாம்,
என்று அவ்வப்போது, களங்கமில்லாத
மனதுடைய திரிசடை சொல்ல,
கேட்டு மகிழ்ந்த சீதை,
வாழ வெறுப்புற்றவளாய்
தளர்ச்சி அடையும்படி;
அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையையும்
மனக்கவலையுடன் சொன்னாள்.


5873.
அன்ன ஓர்வெகுளியன், அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர்துணுக்கம் சுற்றுற,
‘என் இவண் வரவு? நீ யாரை ?’
    என்று, அவன்
தன்மையைவினாயினான்-
   கூற்றின்  தன்மையான்.

கொடுங் கோபம் கொண்டவனானான்
இராவணன்.
தேவர்கள் மற்றும் சூழ்ந்திருந்தவர்கள்
அச்சம் கொள்ளும் விதம் பேசினான்.
'நீ இங்கு வந்து நோக்கம் என்ன?
யார் நீ?' என்று கேட்டான்.
யமன் போன்ற கொடுந்தன்மை
உடையவன் வினவினான்.



5878.
‘சொல்லிய அனைவரும் அல்லென்;
   சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல்
   பூண்டிலேன்;
அல்லி அம்கமலமே அனைய
   செங் கண் ஓர்
வில்லிதன் தூதன்யான்;
   இலங்கை மேயினேன்.

(நீ அவனா ? இல்லை இவனா ? என்று
பலரைக் கூறிக் கேட்ட இராவணனிடம் ...)

'நீ சொன்ன யாரும் இல்லை, உன்னால்
சொல்லப்பட்ட அற்ப வலிமையுள்ளவர்களின்
கட்டளையை ஏற்று வந்தவனும் இல்லை;
அழகிய செந்தாமரை மலர் போன்ற
கண்களை உடைய
ஒப்பற்ற ஒரு வில் வீரனது தூதனாக
நான் இலங்காபுரிக்கு வந்தேன்'
என்றான் அனுமான்.



5886.
‘அன்னவற்கு அடிமை செய்வேன்;
   நாமமும் அனுமன் என்பேன்;
நன்னுதல் தன்னைத்தேடி
   நாற் பெருந் திசையும் போந்த
மன்னரில், தென்பால் வந்த தானைக்கு
   மன்னன், வாலி-
தன் மகன், அவன்தன் தூதன் வந்தனென்,
   தனியேன்’ என்றான்.

'சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரானுக்கு
அடிமைத் தொழில் செய்பவன்;
அனுமன் என்று அழைக்கப்படுபவன்.
நீண்ட நெற்றியை உடைய சீதையைத் தேடி
நான்கு திசைகளிலும் சென்ற தலைவர்களுள்
தென் திசையில் வந்த சேனைக்குத் தலைவன்
வாலியின் மகனாகிய அங்கதன்.
நான் அவனது தூதன்
தனியாளாய் வந்திருக்கிறேன்'
என்று அனுமன் கூறினான்.



5910.
' "ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும்,
ஓது பல் கிளையும், உயிரும் பெற,
சீதையைத் தருக" என்று, எனச் செப்பினான்,
சோதியன் மகன், நிற்கு' எனச் சொல்லினான்.

(அனுமான் பலவேறு அறிவுரைகளைக் கூறி)

' 'எனவே, நீ பெற்ற செல்வத்தையும்,
சொந்த பந்தங்களையும், உயிரையும்
இழக்காதிருக்க
சீதையைத் திருப்பித் தர வேண்டும்'
என்று உன்னிடம் சொல்லச் சொன்னான்,
சூரியன் மைந்தன் சுக்ரீவன்'
என்றான் அனுமான்.


5921.
'நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே 
   செய்தான் ஆனாலும் 
கொல்லல் பழுதே', 'போய் அவரைக் கூறிக் 
   கொணர்தி கடிது' என்னா 
'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு,
   நகரைச் சூழ்போக்கி 
எல்லை கடக்க விடுமின்கள்' என்றான்,
   நின்றார் இரைந்து எழுந்தார்.


('கொல்வேன் இவனை' என்று எழுந்த 
இராவணனை, தடுத்தான் வீடணன்)

'நல்லதே சொன்னாய் தம்பி, 
தவறையே இவன் செய்திருந்தாலும்  
தூதுவனைக் கொல்லுதல் தவறு' என்றான்.
பின் அனுமனை நோக்கி,
'நீ சென்று, அவர்கட்கு எனைப் பற்றிச் சொல்லி,
போருக்கு அழைத்து வா' என்றான்.
அடுத்து அங்கிருந்த அரக்கர்களைப் பார்த்து 
'தொல்லை தரும் இவன் வாலில் தீ வையுங்கள்,
நகரைச் சுற்று இழுத்துச் செல்லுங்கள்,
எல்லை கடந்து போகும்படி துரத்திவிடுங்கள்'
என்று கட்டளையிட்டான்.
அருகே நின்றிருந்தவர்கள் 
ஆரவாரம் செய்தபடி எழுந்தனர்.


( தொடரும் )




No comments:

Post a Comment