Friday, March 27, 2020

கம்பராமாயணம் 77


5728.
ஆயினும், ஐய ! நொய்தின்,
   ஆண் தொழில் குரங்கை, யானே,
“ஏ” எனும்அளவில் பற்றித் தருகுவென்;
   இடர் என்று ஒன்றும்
நீ இனிஉழக்கற்பாலை அல்லை;
   நீடு இருத்தி’ என்னா,
போயினன்-அமரர்கோவைப்
   புகழொடு கொண்டு போந்தான்.

(யாரிடமும் எதையும் கலந்தாலோசிப்பதில்லை
என்று சினந்து, பின் மேகநாதன்)

எனினும், ஐயனே!
வீரச் செயல் புரியும் அந்தக் குரங்கை
மிகச் சிறிய காலத்தில், எளிதில் பிடிப்பேன்
உன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்,
நீ துன்பப்பட்டு வருந்தவேண்டியதில்லை;
நீண்ட காலம் இருந்து ஆட்சி செய்' என்றான்,
தேவர்க்கரசனான இந்திரனை, அவன் பெற்றிருந்த
புகழ்களோடு சிறைப்பற்றிக் கொண்டு போனவன்.


5795.
ஏறு தேர்இலன்; எதிர் நிற்கும் உரன் 
   இலன்; எரியின்,
சீறு வெஞ் சினம் திருகினன், 
   அந்தரம் திரிவான்,
வேறு செய்வது ஓர்வினை பிறிது 
   இன்மையின், விரிஞ்சன்
மாறு இலாப்பெரும் படைக்கலம் 
   தொடுப்பதே மதித்தான்.


(அனுமான், போரில் படைகள் அனைத்தையும் 
தோற்கடித்தான், இந்திரஜித்தின் தேரை 
பொடிப்பொடி ஆக்கினான்)

ஏறி நின்று போர் புரிய 
இன்னொரு தேர் இல்லாதவனானான்.
அனுமனின் எதிரே நின்று போர் புரிய 
வலிமை அற்றவன் ஆனான்.
தீப் போலச் சீறுகின்ற கொடிய சினம் 
தலைக்கேறி நின்றான். 
வானில் சஞ்சரித்தான். அடுத்தென்ன செய்வது 
என்று தெரியாது முழித்தான்.
பிரம்மாத்திரத்தை ஏவுவதே சரி 
என்ற முடிவுக்கு வந்தான்.



5800.
சாய்ந்தமாருதி, சதுமுகன் படை 
   எனும் தன்மை
ஆய்ந்து, ‘மற்றுஇதன் ஆணையை 
   அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று’ என எண்ணினன், 
   கண் முகிழ்த்து இருந்தான்;
‘ஓய்ந்தது ஆம்இவன் வலி’ என, 
   அரக்கன் வந்துற்றான்.

மேகநாதன் எய்திய அம்பு தாக்க,
கீழே விழுந்தான் அனுமன்; 
தன் மேற் செலுத்தப்பட்டது பிரம்மாத்திரம் 
என்னும்உண்மையை உணர்ந்து கொண்டான்.
பிரம்மாத்திரத்தின் வலிமையை இகழ்வது
முறையன்று என்று என்றெண்ணினான்.
கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் 
கட்டுப்பட்டவன் போல் கிடந்தான்; 
அரக்கன் மேகநாதன், அனுமனின் வலிமை 
ஒழிந்தது என்று எண்ணினான்.
அருகில் வந்து நின்றான்.



பிணி வீட்டு படலம்

5805.
‘எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்;
கொய்யுமின்குடரினை; கூறு கூறுகள்
செய்யுமின்;மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்;
உய்யுமேல்,இல்லை நம் உயிர்’ என்று ஓடுவார்.

(இந்தக்கொடிய குரங்கை) 
'அம்பு கொண்டு எய்யுங்கள்;
வாள் கொண்டு வெட்டுங்கள்; 
ஈட்டியால் குத்துங்கள்;
கோடாலியால் பிளவுங்கள்; 
இதன் குடலைப் பறித்திடுங்கள்; 
இதனைத் துண்டு துண்டுகளாக செய்யுங்கள்; 
தரையில் தேய்த்து அழியுங்கள்; 
இதன் உடல் தசையைத் தின்னுங்கள்; 
இது பிழைத்துப் போகுமானால், 
நாம் பிழைக்கமாட்டோம்'
என்று கத்தியபடியே ஓடி வந்தார்கள். 



5832.
எல்லை இல்உவகையால் இவர்ந்த 
   தோளினன்,
புல்லுற மலர்ந்தகண் குமுதப் 
   பூவினன்,
‘ஓல்லையின் ஓடி, நீர் உரைத்து, 
   என் ஆணையால்,
“கொல்லலை தருக”எனக் கூறுவீர்’ 
   என்றான்.

(குரங்கு அகப்பட்ட செய்தி வந்ததும்)
அளவற்றமகிழ்ச்சி கொண்டான்,
பூரித்த தோள்களை உடையவனானான்,
நான்றாக கண்களை விரித்துத் திறந்து,
'நீங்கள் விரைவாக ஓடிச் சென்று, 
அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் 
கொண்டு வருக, 
இது எனது கட்டளை என்று 
இந்திரசித்துவிடம் சொல்லிடுக'
என்று கூறினான் இராவணன்,

( தொடரும் )


No comments:

Post a Comment