Wednesday, March 25, 2020

கம்பராமாயணம் 75


பொழில் இறுத்த படலம்


5434.
‘இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்;
   இறுத்தால்,
அப் பெரிய பூசல்செவி சார்தலும்,
   அரக்கர்
வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர்;
   வந்தால்,
துப்பு உறமுருக்கி, உயிர் உண்பல்,
   இது சூதால்.

'இந்தச் சோலையை விரைந்து அழிப்பேன்;
அழிக்கும் ஆரவாரம் அரக்கர் காதில் விழும்.
அவர்கள் உடனே கோபம் கொள்வர்,
என்னை எதிர்த்துப் போர் புரிவர்;
அவ்வமயம் வலிமை கொண்டு போரிடுவேன்,
அவர்களை அழிப்பேன், உயிரை எடுப்பேன்;
இதுவே நான் செய்யத்தக்கது'
என்று எண்ணினான், அனுமான்.



5458.
பறவைஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக்குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்துஎழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும்கைம்மிகப் போயதே.

பெருங்கூச்சலிட்டு பறவைகள் பறக்கும் ஓசையும்,
பலமரங்கள் ஓடிபட, இடி போன்று எழம் ஓசையும்,
அறத்தின் உருவான அனுமன் ஆரவாரித்து,
அதனால் உண்டான ஓசையும்
இவ்வுலக உருண்டை கடந்து வெளியேறிற்று.



5484.
அரி படுசீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின்
                                    வீழ்ந்தார்;
‘கரி படு திசையின் நீண்ட காவலாய் ! காவல்
                                  ஆற்றோம் !
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை
                                 கிழித்து வீச,
எரி படுதுகிலின், நொய்தின் இற்றது கடி கா’
                                  என்றார்.

கோபமான சிங்கம் போன்ற இராவணன் 
அருகில் சென்றான் அரண்மனைக் காவலன்.
பாதத்தில் பணிந்தான்,
'எல்லா திசைகளிலும் நீண்டு பரந்த 
ஆட்சியை உடையவனே' என்று புகழ்ந்தான்.
'சோலையைப் பாதுகாக்கத் தவறினோம்' 
என்று தொடர்ந்தான்.
'வலிய தோள்களை உடைய குரங்கு ஒன்று 
சோலையினிடையில் புகுந்தது,
மரங்களை ஒடித்து வீசியது, அதனால் 
அச்சோலை நெருப்புப்பட்ட ஆடை போல, 
விரைந்து அழிந்தது' என்றான்.



கிங்கரர் வதைப் படலம்


5490.
புல்லிய முறுவல் தோன்ற, 
   பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல்ஆற்றல் மாக்கள் 
   எண் இறந்தாரை ஏவி,
‘வல்லையின்அகலா வண்ணம், 
   வானையும் வழியை மாற்றி,
கொல்லலிர்குரங்கை, நொய்தின் பற்றுதிர்,
   கொணர்திர்’ என்றான்.


(இராவணன்) 
அற்பப் புன்னகை புரிந்தான், 
சிறிதளவு பொறாமையும் கொண்டான்,
அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்களை ஏவினான்.
'தப்பித்து செல்ல முடியாதவாறு, 
வான் வழியையும் தடுத்து,
அந்தக் குரங்கைக் கொல்லாது பிடித்து வருக' 
என்று கட்டளையிட்டான்.



5514.
பறை புரைவிழிகள் பறிந்தார்; 
   படியிடை நெடிது படிந்தார்;
பிறை புரை எயிறும் இழந்தார்;
   பிடரொடு தலைகள் பிளந்தார்;
குறை உயிர் சிதறநெரிந்தார்; 
   குடரொடு குருதி குழைந்தார்;
முறை முறை படைகள்எறிந்தார்;
   முடை உடல் மறிய முறிந்தார்.

(அனுமன் மரங்கொண்டு தாக்க) 
அடிபட்டு, தோற்பறை போன்ற 
அகன்ற கண்களை இழந்தனர், சிலர்.
தரையின் மீது நீள விழுந்தனர், சிலர்.
பிறை போன்று வளைந்த பற்களைப் 
பிரிந்தனர் சிலர்; 
பின் கழுத்தும் தலைகளும் பிளக்கப்பட்டு 
இறந்தனர் சிலர்.
உயிர் சிதறும் படி மிதிபட்டு அழிந்தனர் சிலர்.
குடலோடு இரத்தமும் வெளியேற அழிந்தனர் சிலர்.
மீதமிருந்தோர் வரிசையில் நின்று 
ஆயுதங்களை வீசினர்;  
முடை நாற்றமுள்ள உடம்புகள் 
முறிய மரித்தனர்.



5546.
‘சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர்; செருக்களத்து அஞ்சினார் அலர்;
புலம் தெரிபொய்க் கரி புகலும் புன்கணார்
குலங்களின், அவிந்தனர், குரங்கினால்’ என்றார்.

'சினம் மிக்குக் கிங்கரர்கள் வருந்தி ஓடவில்லை;
சண்டையிட முடியாது பயந்து ஓடவில்லை,
அறிவுக்குப் பொய் என்று புரிந்தும், 
போரில் அழிந்து ஒழிந்தனர், 
அந்தக் குரங்கினால்'
என்று காவலர் இராவணனிடம் கூறினார்.

( தொடரும் )

No comments:

Post a Comment