அரசியல் படலம்
4116.
அது காலத்தில், அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் -
'கதிரோன் மைந்தனை, ஐய! கைகளால்,
விதியால் மௌலி மிலைச்சுவாய்' எனா,
அப்பொழுது, கருணைக் கடல் இராமன்,
அறிவு நிறைந்த தம்பியை நோக்கி,
'சூரியனின் புதல்வன் சுக்ரீவனுக்கு,
ஐயா ! உன் கரங்களால் விதிமுறைப்படி
முடிசூட்டு, விரைந்து' என்று கட்டளையிட்டான்.
4128.
" 'நாயகன் அல்லன்; நம்மை நனி
பயந்து எடுத்து நல்கும்
தாய்' என இனிது
பேணி தாங்குதி தாங்குவாரை;
ஆயது தன்மையேனும், அற
வரம்பு இகவாவண்ணம்
தீயன வந்தபோது
சுடுதியால் தீமையோரை".
"அரசன் அல்ல,
நம்மை பெற்றெடுத்துக் காக்கும் தாய்"
என்று மக்கள் கொண்டாடுமாறு
காக்கவேண்டியவர்களைக் காத்திடு;
அதுவே அரசின் இயல்பு எனினும்,
தீமை நேருமாயின்,
அத் தீயச் செயலைச் செய்வாரை,
அறநெறி உரைக்கும் வரம்புக்குள் தண்டித்திடு"
என்று இராமன் சுக்ரீவனுக்கு அறிவுறுத்தினான்.
4138.
'அரசியற்கு உரிய யாவும்
ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
திரை செயற்கு உரிய சேனைக்
கடலோடும், திங்கள் நான்கின்
விரசுக என்பால்; நின்னை வேண்டினென்
வீர!' என்றான்
உரை செயற்கு எளிதும் ஆகி
அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான்.
"அரசாட்சிக்கு உரியவற்றை
செய்யவேண்டிய முறைப்படி செய்;
பெரிய அலைகள் எழும்பும்
கடல் போன்ற சேனையைத் திரட்டு;
நான்கு மாதங்கள் கழிந்த பின்,
என்னை வந்துப் பார்;
இதுவே உன்னை நான் கேட்பது, வீரனே"
என்றான்,
சொல்வதற்கு எளிதான
கடைபிடிப்பதற்கு அரிதான ஒழுக்க நெறியைத்
தவறாது பின்பற்றும் இராமபிரான்.
கார்காலப் படலம்
4151.
நஞ்சினின், நளிர் நெடுங் கடலின், நங்கையர்
அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின்,
வஞ்சனை அரக்கர் தம் வடிவின், செய்கையின்,
நெஞ்சினின், இருண்டது - நீல வானமே.
விடத்தைப் போன்று கறுத்தது.
குளிர்ந்த பெரிய கடல் போன்று,
மை பூசிய பெண்களின் கண்களைப் போன்று,
பரந்து விரிந்த கூந்தல் போன்று கறுத்தது.
கொடுமை செய்யும் அரக்கர்கள் போன்று,
அவர்களின் கொடுஞ்செயல் போன்று,
அரக்கர்களின் இரக்கமில்லா நெஞ்சம் போன்று
இருண்டுபோனது, நீல வானம்.
'காலம் நீளிது, காரும் மாரியும்
வந்தது என்ற கவற்சியோ ?
நீலமேனி அரக்கர் வீரம்
நினைந்து அழுங்கிய நீர்மையோ ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்
நாட வாரல் இலாமையோ ?
சாலும் நூல் உணர் கேள்வி வீர!
தளர்ந்தது என்னை? - தவத்தினோய்!
'கார்காலம் இன்னும் நீள்கிறது,
மழையும் வருகிறது என்ற கவலையோ?
கருநீல மேனியாராகிய அரக்கர்களின்
வீரம் பற்றி எண்ணி வருந்துகிறாயோ ?
சீதையைச் தேடுவதற்கு, வாலியின் சேனை
இன்னும் வந்தபாடில்லை என்பதனாலா ?
நல்ல நூல்களைக் கற்றும், கேள்வி அறிவும்
நிறைந்த வீரனே, தவநெறியில் சிறந்தவனே,
நீ தளர்ந்திருப்பது ஏனோ?'
என்று வினவினான் இலக்குவன்.
( தொடரும் )
No comments:
Post a Comment