4021.
'அரக்கர் ஓர் அழிவு செய்து
கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனு நெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால்
புகழை யார் பரிக்கற்பாலார்?'
அரக்கன் ஒருவன் உனக்குத் தீங்கு செய்தான் எனில்,
அதற்கு வேறுபட்ட ஒரு குரங்கு இனத்து அரசனை
கொள்ளவேணும் என்று எந்த நீதி நூலில் படித்தாய்?
உனக்குரிய கருணை குணத்தை எங்கு தொலைத்தாய்?
என்னிடத்தில் என்ன குற்றம் கண்டாய் ?
ஐயா! இப்படி நீயே பழியைச் சுமந்தாயெனில்
கிட்டும் புகழையெல்லாம் கொள்வார் யார் ?
4026.
'வீரம் அன்று; விதி
அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின்
மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று;
பண்பு அழிந்து
ஈரம் இன்றி, இது
என் செய்தவாறுஅரோ ?
( நீ செய்த செயல் )
'வீரத்தைக் காட்டும் செயல் இல்லை,
விதிமுறைகட்கு ஒத்ததும் இல்லை;
உண்மையைச் சார்ந்ததும் இல்லை;
உன் பூமிக்கு என் உடல் சுமையும் இல்லை;
உனக்கு நான் பகைவன் இல்லை;
உன் பெறுமை குன்றுமாறு, இரக்கம் இல்லாது
ஏன் செய்தாய் இச்செயலை ?'
4059.
'முன்பு நின் தம்பி வந்து
சரண் புக, 'முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று
செப்பினன்; செருவில், நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி
"அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல் மறைந்து
நின்று எய்தது' என்றான்.
('மறைந்து நின்று அம்பு விடுத்தது ஏன்?'
என்று கேட்ட வாலிக்கு)
"உன் தம்பி முன்னர் வந்து சரணடைந்தான்.
'முறைதவறிய உன்னை தென்திசையிலுள்ள
யமனுலகு அனுப்புவேன்'
என்று வாக்கு தந்தான், என் அண்ணன்.
போர்க்களத்தில் நீயும் உயிர் மீது பற்று கொண்டு
"நானும் உன் அடைக்கலம்" என்று கேட்டுவிட்டால்
என்ன செய்வது என்பதாலேயே, என் அண்ணன்
மறைந்து நின்று அம்பு எய்தினான்"
என்று பதில் தந்தான் இலக்குவன்.
4068.
'ஓவிய உருவ! நாயேன் உளது
ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி
புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல்
சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல்' என்றான்.
அழகான சித்திரத்தை ஒத்தவனே,
நாய் போன்ற நான், உன்னிடம்
வேண்டிப்பெறுவது ஒன்று உண்டு;
மலர்களிடத்து மதுவை அருந்தி,
புத்தி கேட்டு, தீய செயல்கள் செய்திடினும்
என் தம்பி மீது, கோபம் கொண்டு
அம்பு எய்தி, எனைக் கொன்றது போல்
அவனையும் கொன்றுவிடாதே'
என்று இராமனிடம் வேண்டினான் வாலி.
4089.
'பாலமை தவிர் நீ; என்
சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று
கட்புலக்கு உற்றது அம்மா!
'மால் தரும் பிறவி நோய்க்கு
மருந்து' என, வணங்கு மைந்த!'
'சிறுபிள்ளைத்தனமாய் அழுவதை நிறுத்து;
நான் சொல்வதை உறுதியாகப் பற்றிடு;
தனக்கு மேல் ஒரு பொருள்
இல்லாப் பரம்பொருள்,
கையில் வில்லை ஏந்திக் கொண்டு,
திருவடி மண்ணில் படும்படி,
நான் கண்ணால் காணும் வண்ணம் நிற்கிறது;
மயக்கத்தைத் தரும் பிறவி நோய்க்கு மருந்து இது,
வணங்கு, மகனே'
என்று வாலி தன் மகன் அங்கதனுக்கு உரைத்தான்.
4093.
தன் அடி தாழ்தலோடும்
தாமரைத் தடங் கணானும்
பொன் உடைவாளை நீட்டி, 'நீ
இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
ஏத்தின; இறந்து வாலி
அந் நிலை துறந்து வானுக்கு
அப் புறத்து உலகன் ஆனான்.
அங்கதன் இராமனை வணங்கினான்;
தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்
தன் உடைவாளை நீட்டி
'இதைப் பெற்றுக்கொள்' என்று சொன்னான்.
அவ்வாறு சொன்ன பொழுது ஏழு உலகங்களும்
இராமனை துதித்தன;
வாலி தன் உடலைத் துறந்து,
வானுலகிற்கு அப்பாற்பட்ட
உயர்த்த இடத்தைப் பெற்றான்.
( தொடரும் )
No comments:
Post a Comment