Saturday, March 21, 2020

கம்பராமாயணம் 71



5169.
அவ் இடத்து அருகு எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்து எனக்கு இன் அருள் ஈவது?
நொவ் இடைக் குயிலே! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான்.

(சீதை இருக்கும்)
அந்த இடத்துக்கு அருகில் வந்தான் அரக்கன்.
'எப்பொழுது எனக்கு அருள் செய்யப்போகிறாய்,
சிறிய இடைபெற்ற குயிலே' என்றான்.
கொடிய நஞ்சினை அமுதம் என்று எண்ணி
வேண்டினான்.



5176.
'ஈண்டு நாளும், இளமையும், மீண்டில;
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய;
வேண்டு நாள் வெறிதே விளிந்தால், இனி 
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ?'

இவ்வுலகத்தில் ஆயுளும் இளமையும் 
திரும்ப வராது,
அழிந்து அழிந்து வேறு இயல்பைப் பெறும் 
தன்மை உடையது.
நான் விரும்பும் உன் இளமையை நீ 
வீணாக அழிக்கிறாய் இப்போது,
எனில் வாழ்க்கை நடத்துவது எப்போது ?
பருவம் கடந்து துன்பத்தால் உழன்று 
வருந்தி அழிவாயே, அப்போது ?
என்று இரைந்தான்.


5189.
'பெற்றுடை வாளும் நாளும்,
   பிறந்துடை உரனும், பின்னும் 
மற்றுடை எவையும் தந்த மலர் 
   அயன் முதலோர் வார்த்தை 
வில் தொடை இராமன் கோத்து 
   விடுதலும், விலக்குண்டு எல்லாம் 
இற்று இடைந்து இருதல் மெய்யே;
   விளக்கின் முன் இருள் உண்டாமோ?

நீ பெற்றுள்ள வாளும், ஆயுட்காலமும் 
பிறப்பினால் அமைந்த வலிமையையும்,
வேறு பல சக்திகளும், மலரின் மேல் 
அமர்ந்திருக்கும் பிரமன் தந்த வரங்களும், 
இராமன் வில்லில் அம்பைத் தொடுத்து விட,
எல்லாம் விலகும்.
உன் அழிவு உண்மையாகும்.
விளக்கின் முன் இருள் எங்ஙனம் நிற்கும்?
என்று பதில் உரைத்தாள் சீதா.


5202.
'உன்னையும் கேட்டு, மற்று உன் ஊற்றமும் 
   உடைய நாளும் 
பின்னை இவ் அரக்கர் சேனைப் பெருமையும் 
   முனிவர் பேணிச் 
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் 
   தோளும் தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை 
   நீ சிந்தியாயோ?


'உன்னைப் பற்றிச் சொன்னர், மற்றும் 
உன் வலிமை பற்றியும் சொன்னர்,
உன் ஆயுள் நீளம் குறித்தும் சொன்னர்,
பின் உன் அரக்கச் சேனை பற்றியும் 
விரிவாய்ச் சொன்னர், பல முனிவர்கள்.
இவை எல்லாம் கேட்டறிந்த பின்னர்,
உன் தங்கை மூக்கையும் 
உன் தம்பியர் தோள், கால் ஆகியவற்றை
சிதைத்த செயலை சிந்தித்து 
நீ செயல்படமாட்டாயோ ?' என்று கேட்டாள்.



5219.
'அஞ்சுவித்தானும் ஒன்றால் 
   அறிவுறுத் தேற்றியானும் 
வஞ்சியின் செவ்வியாளை வசித்து
   என்பால் வருவீர்; அன்றேல் 
நஞ்சு உமக்கு ஆவென்' என்னா 
   நகை இலா முகத்து பேழ் வாய்,
வெஞ்சினத்து அரக்கிமார்க்கு,
   வேறு வேறு உணர்த்திப் போனான்.


'பயமுறுத்துங்கள், இல்லை 
அறிவுறுத்துங்கள்,
வஞ்சிக்கொடி போன்றவளை 
மயக்கி என்னிடம்  அழைத்து வாருங்கள்,
அவ்வாறு செய்யாவிடில் உங்கட்கு 
நானே விடமாவேன், மறவாதீர்கள்' என்று 
சிரிப்பறியாத முகமுடைய
பெரிய வாயுடைய 
கொடுங்கோபம் நிறைந்த 
அரக்கியரிடம் தனித்தனியே 
கட்டளையிட்டு அங்கிருந்து அகன்றான்.


( தொடரும் )

No comments:

Post a Comment