3978.
'வில் தாங்கு வெற்பு அன்ன
விலங்கு எழில் தோள! "மெய்ம்மை
உற்றார் சிலர்; அல்லவரே
பலர்" என்பது உண்மை.
பெற்றாருழைப் பெற்ற பயன்
பெறும் பெற்றி அல்லால்,
அற்றார் நாவை என்றலுக்கு
ஆகுநர், ஆர்கொல்?" என்றான்.
வில்லைத் தாங்கிய, மலையை ஒத்த
அழகிய தோள்களை உடையவனே,
இவ்வுலகில் தவறில்லாத ஒழுக்கம் நிறைந்தவர்
ஒருசிலரே; அவ்வாறில்லாதவர் பலர்;
இதுதான் உண்மை;
நம்மைப் பெற்றவரிடம் உள்ள
நற்குணங்களின் பயனை
நாட வேண்டுமே தவிர,
அவர் குற்றமற்றவர் என்று சொல்வதற்குரியவர்
யாருளர் ?' என்று பதிலுரைத்தான் இராமன்.
3989.
உரத்தினால் மடுத்து உந்துவர்;
பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசைத்து எற்றுவர்;
கடிப்பர்; நின்று இடிப்பர்;
மரத்தினால் அடித்து உரப்புவர்;
பொருப்புஇனம் வாங்கிச்
சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்;
தெழிப்பர்; தீ விழிப்பர்;
இருவரும் ஒருவரை ஒருவர்
மார்பினால் தாக்கித் தள்ளினர் ;
கால்களால் உதைத்துக்கொண்டனர்;
கைகளால் தாங்கினர்;
கடித்தும், இடித்துக்கொண்டனர்;
மரங்களைப் பெயர்த்தெடுத்து
அடித்துக்கொண்டு, அதட்டினர்;
மலைகளைத் தூக்கி
தலைமேல் வீசி தாக்கிக்கொண்டனர்;
ஆரவாரித்து,
தீ பறக்க சினத்து நோக்கிக் கொண்டனர்.
3995.
மலைந்தபோது இனைந்து இரவி சேய்
ஐயன்மாடு அணுகி
உலைந்த சிந்தையோடு உணங்கினன்,
வணங்கிட, 'உள்ளம்
குலைந்திடேல்; உமை வேற்றுமை
தெரிந்திலம்; கொடிப் பூ
மிலைந்து செல்க; என விடுத்தனன்;
எதிர்த்தனன் மீட்டும்;
வாலி கடுமையாகத் தாக்கினான்,
நிறைய அடிவாங்கிய சூரியனின் மைந்தன்
இராமனிடம் ஓடி வந்தான்,
வருந்தி நின்றான், வாட்டமுற்றான்,
பணிந்து வணங்கினான்,
'உள்ளம் வருந்தாதே, உனக்கும் அவனுக்கு
வேற்றுமை காண முடியவில்லை,
நீ கழுத்தில் இந்த கொடிப்பூ சுடிக் கொள்,
போருக்கு மீண்டும் செல்'
என்று சொல்லி அனுப்பினான் இராமன்.
சண்டையிட திரும்பிச் சென்றான் சுக்ரீவன்.
3999.
'எடுத்துப் பாரிடை எற்றுவென்
பற்றி' என்று இளவல்
கடித்தலத்தினும் கழுத்தினும் தன்
இரு கரங்கள்
மடுத்து மீக் கொண்ட வாலிமேல்
கோல் ஒன்று வாங்கி
தொடுத்து நாணொடு தோள்
உறுத்து இராகவன் துரந்தான்.
'இவனைப் பிடித்து எடுத்துத் தூக்கி
தரையில் அடிப்பேன்' என்று எண்ணினான்,
தன் தம்பியின் இடையிலும் கழுத்திலும்
தன் இரு கரங்களால் மேலே தூக்கினான்.
அவ்வமயம்
ஒரு அம்மை எடுத்து, வில்லில் பூட்டி,
தன் தோள் வரை நாணை இழுத்து
வாலிமேல் செலுத்தினான் இராகவன்.
4013.
மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
பெரும் பாதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்.
(யாருடைய அம்பு? என்று வாலி
அந்த அம்பை உருவிப் பார்க்க)
மூன்று உலகு^க்கும் பொருந்தும்
மூல மந்திரத்தை,
முழுவதும் தம்மையே அர்ப்பணித்து
வழிபடும் அடியார் உச்சரிக்கும் சொல்லை,
இந்தப் பிறவியிலேயே, ஏழுவகைப் பிறப்பு
நோய் வராது தடுக்கும் மருந்தை,
'இராமன்' என்னும் சிறந்த திருநாமத்தை,
தன் கண்களால் கண்டான்.
^ - இப்பிறவி, முற்பிறவி, இனி வரும் பிறவி
( தொடரும் )
No comments:
Post a Comment