Sunday, March 22, 2020

கம்பராமாயணம் 72




5222.
'வையம் தந்த நான்முகன் மைந்தன்,
   மகன் மைந்தன்
ஐயன், வேதம் ஆயிரம் வல்லான்,
   அறிவாளன்,
மெய் உன்பால் வைத்துளது அல்லால்,
   வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்?' என்றார்,
   சிலர் எல்லாம்.

உலகைப் படைத்த பிரம்மன் மகன் (புலத்தியன்)
மகனின் (விச்சிரவசு) மகன் இராவணன்,
அழகன், தன்னிகரற்றத் தலைவன்,
ஆயிரம் வேதங்களை அறிந்தவன்
அறிவு நிறைந்தவன், செய்யும் செயல்
யாவிலும் வெற்றி காண்பவன், உன்னிடம்
உண்மையான அன்பைக் கொண்டவன்,
இழி செயல்  வேறு ஏதும் செய்தானில்லை'
என்று சில அரக்கியர் சீதையிடம் சொன்னர்.


உருக்காட்டுப் படலம்


5241.
' 'பிறன் மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது' என்று, உயிர்க்கு இறைவன் தீர்த்தனன்;
புறன் அலர், அவன் உற, போது போக்கி, யான்,
அறன் அலது இயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன்?'

'இன்னொருவர் வீட்டில் இருந்த பெண்ணை
ஏற்றுக்கொள்ளுதல், ஒழுக்கமற்ற செயல்'
என்று எண்ணியே கைவிட்டுவிட்டான்
என் தலைவன் இராமன், அதனால்
வெளியே அவன் பழிச்சொல் பெற்றிருப்பான்.
அறம் இல்லாத செயலைச் செய்துகொண்டு,
காலம் தாழ்த்தி இன்னும் வாழ்கிறேனே, நான் எதை
ஆதாரமாகக் கொண்டு உயிரை வைத்திருப்பேன் ?'
என்று சீதை எண்ணத்தொடங்கினாள்.



5249.
கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' எனா 
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான்.

அனுமான் சீதையைக் கண்டான்,
அவள் எண்ணத்தையும் அறிந்தான், அதிர்ந்தான்,
அருகில் சென்று நிற்கப் பயந்தான்,
'தேவர் தலைவன் இராமன் திருவருள் பெற்றத் தூதுவன்'
என்று சொல்லிக்கொண்டே,
சிவந்த வாய் உடைய, மயில் போன்ற சீதையின் 
எதிரில் நின்றான், வணங்கினான்.



5255.
என நினைத்து, எய்த நோக்கி,
   'இரங்கும் என் உள்ளம்; கள்ளம் 
மனன் அகத்து உடையர், ஆக 
   வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் 
   நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்' என்னா,
   'வீர! நீ யாவன்?' என்றாள்.

(அரக்கனோ, தேவனோ, 
என் தலைவன் நாமம் சொன்னானே?)
என்று பலவாறு எண்ணினாள்,
வந்தவனை நோக்கினாள்,
'இவனால் என் மனம் அமைதியடைகிறது,
இவன் கபடம் இல்லாதவன், வஞ்சகம் 
செய்பவனில்லை என்றே தெரிகிறது,
மனம் வருந்தி, கண்ணீர் நிலத்தில் சிந்த 
பேசுகின்றான், நம்பத்தகுந்தவனே'
என்று எண்ணினாள்.
'வீரனே, நீ யார்?' என்று வினவினாள்.


5258.
'அன்னவன்தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் 
   ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசு நல்கி, துணை எனப் 
   பிடித்தான் எங்கள் 
மன்னவன்தனக்கு; நாயேன், மந்திரத்து 
   உள்ளேன், வானின் 
நல் நெடுங் காலின் மைந்தன், நாமம் 
   அனுமன் என்பேன்.


வாலியினை, உன் தலைவன் அம்பு ஒன்றை 
எய்தி உயிரை நீக்கினான்.
அதன்பின், வாலியின் தம்பி சுக்ரீவனுக்கு 
அரச பதவி வழங்கினான்.
இராமனைத் தன் தோழனாகவே  
பற்றிக்கொண்டான் எங்கள் அரசன் சுக்ரீவன்.
நான் அவன் ஆலோசனைச் சபையில் இருப்பவன்,
வாயு தேவனின் புதல்வன்,
அனுமன் என்றே அழைக்கப்படுபவன்'
என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.



( தொடரும் )


No comments:

Post a Comment