3929.
'கொடுந் தொழில் வாலியைக்
கொன்று, கோமகன்
கடுங் கதிரோன் மகன்
ஆக்கி, கை வளர்
நெடும் படை கூட்டினால்
அன்றி, நேட அரிது
அடும் படை அரக்கர்தம்
இருக்கை - ஆணையாய்!'
'வலிமை நிறைய உடைய வாலியைக் கொல்லணும்,
சூரியன் மகன் சுக்ரீவனை அரசனாக்கவேணும்,
செயல் திறம் மிக்க பெரிய படையினை
ஒன்றுசேர்க்க வேணும், அவ்வாறில்லாது
அழிக்கும் தன்மை உடைய அரக்கர்கள்
இருக்கும் இடம் நுழைவது கடினம்'
என்று அனுமான் சொன்னான்.
வாலி வதைப் படலம்
3946.
இடித்து உரப்பி 'வந்து போர்
எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று
அடித்தளங்கள் கொட்டி, வாய் மடித்து
அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல்
புக்கது என்ப - மிக்கு இடம்
துடிப்ப, அங்கு உறங்கு வாலி
திண் செவித் துளைக்கணே.
சத்தமாய்க் கத்தினான்.
'போர் புரிய வா' என்று ஓலமிட்டான்.
'உன்னைக் கொல்வேன்' என்று சூளுரைத்தான்.
கால்களால் தரையில் மிதித்தான்.
உதடு கடித்தான். தோள்களைத் தட்டினான்.
வலிய போருக்கு அழைத்த
சுக்ரீவன் செய்த ஆரவாரம், கிட்கிந்தையில்
இடது கண், இடது தோள் துடிக்க^,
உறங்கிக்கொண்டிருந்த வாலியின் காதில் விழுந்தது.
^ - கெட்ட சகுனம்
3958.
'கொற்றவ! நின் பெருங்
குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள்
ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந் திறல்;
பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது நெடுந் துணை
உடைமையால்' என்றாள்.
'அரசே, உன் வலிமைக்கு முன்
வெல்ல முடியாது முன்னர் ஓடியவன், அந்த சுக்ரீவன்.
அதன்பின் பெரிய ஆற்றல் ஏதும் பெறவில்லை அவன்.
இன்று வலிய வந்து போருக்கு அழைக்கிறான் எனில்,
ஏதோ பெரிய வலிமைத் துணையோடு வந்திருக்கிறான்'
என்று தாரை வாலியிடம் சொன்னாள்.
3966.
'இருமையும் நோக்குறும்
இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில்
பெறுவது என்கொலோ ?
அருமையின் நின்று, உயிர்
அளிக்கும் ஆறுடைத்
தருமமே தவிர்க்குமோ
தன்னைத் தான்அரோ?
(துணைக்கு இராமன் என்பவன் வந்திருக்கிறான்
என்று சொன்ன தாரையிடம்)
'இம்மை மறுமை இரண்டையும் எண்ணி செயல்படும்
இராமனுக்கு பெருமையாகுமா நீ சொன்னது ?
அவ்வாறு சுக்ரீவனுக்கு துணை புரிவதால்
அவன் என்ன பெறப்போகிறான் ?
உலக உயிர்களைப் பாதுகாக்கும்
தருமமே, தன்னை அழித்துக்கொள்ளுமோ ?'
என்று பதில் சொன்னான் வாலி.
3969.
'தம்பியர் அல்லது தனக்கு
வேறு உயிர்
இம்பரின் இலது என
எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று
எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ
அருளின் ஆழியான்?
'தம்பியரே தன் உயிர்,
தனியாக உயிர் என்று வேறேதும் தனக்கில்லை
இவ்வுலகில் என்று எண்ணி வாழ்பவன்,
என் தம்பியும் நானும் போர் புரிய
இடையில் புகுந்து அம்பைத் தொடுப்பானா
என்ன, கருணைக் கடலான இராமன்'
என்று கேட்டான் வாலி.
3976.
ஆற்றாது பின்னும் பகர்வான்
'அறத்தாறு அழுங்கத்
தேற்றாது செய்வார்களைத் தேறுதல்
செவ்விது அன்றால்;
மாற்றான் எனத் தம்முனைக்
கொல்லிய வந்து நின்றான்,
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம்
என்? வீர!' என்றான்.
தன் மனதில் தோன்றியதை மறைக்காது,
'தரும நெறி கெடுமாறு, தெளிவு இன்றித்
தீயச் செயல்கள் செய்பவர்களை நம்புதல்
நன்மை தராது;
'பகைவன்' என்று தன் தமையனையே கொல்ல,
உறவினர் அல்லாத நம்மோடு வந்திருக்கிறான்,
இவன் நல்ல துணையாதல் எவ்வாறு? வீரா'
என்று கேட்டான் இலக்குவன், இராமனிடம்.
( தொடரும் )
No comments:
Post a Comment