"கார் மேகக்
கண்ணா
எங்கள் ஆடைகள்
எல்லாவற்றையும் நீ
எடுத்துக் கொண்டதால்
எங்களால்
குளம் விட்டு வெளியேற முடியாது
குளிர்ந்த நீரில்
விடி காலையிலிருந்து
விரைத்துப்போய்க் கிடக்கிறோம்;
குளத்திலிருக்கும் சிறு பெரு
மீன்கள் எங்கள்
கால்களைக்
கடிப்பதால் நிற்பது
கடினமாய் இருக்கிறது;
கண்ணா, எங்கள் ஆடைகளை
எங்கட்கு அளித்து
கடிக்கும் இந்த
மீன்களிடமிருந்து எங்களை
மீட்பாயாக".
இன்னும் தொடர்ந்தனர்.
"அன்றொருநாள்
முதலையின் வாயில்
மாட்டிக்கொண்ட வாரணத்தின் காலை
மீட்க உதவிக்கு வந்தவனன்றோ நீ,
வாரணத்தைக் காத்தவன் இந்த
வஞ்சியரைக் காக்கமாட்டாயா ?
மீனின் கடியில்
மாட்டித் துன்புருகிறோமே;
மாதவா எங்களை இத்துயரத்திலிருந்து
மீட்கமாட்டாயா ?
"அது வேறு, இது வேறு,
அத் துன்பத்திற்கு
ஆரோ காரணம்,
ஆனால் உங்களின் இத் துன்பத்திற்கு
ஆரும் அல்ல, நீங்களே காரணம்"
என்றான் கண்ணன்.
"அண்ணன்கள் இந்த உன் செயல்
அறிந்தாரேயானால்
அவர்கள் உன்னை
அதட்ட தண்டிக்க நேரிடும்; உன் இந்த
குழந்தைத்தனமான
குறும்பினால் எத்தனைக்
குழப்பங்கள், எத்தனைப்
பேருக்கு துன்பங்கள்
நேர்கிறது அறியாயோ நீ ?
எங்கள் ஆடைகளை
எங்கட்கு அளித்துக்
காத்தருள வேண்டுகிறோம்".
"அண்ணன்கள்
அணி திரண்டு எனை
அடிக்க வருவார்களோ ?
வரட்டும், ஒரு கை பார்க்கிறேன்"
என்றே பதிலுரைத்து
கிளையிலிருக்கும்
ஆடைகளில் ஒன்றை
அணிந்துகொண்டான்;
"அழகாயிருக்கிறேனா நானிந்த
ஆடையில் ?
அம்சமாய்ப் பொருந்துகிறதே,
அப்படியே தரச் சொல்லி
அடம்பிடிக்கிறீர்களே
அநியாயமன்றோ இது"
என்றான்.
"அடடா,
அழகாய்ப் பொருந்துகிறதே உனக்கு,
அந்த ஆடை வேண்டுமென்றால் நீயே
வைத்துக்கொள்,
கிளையிலிருக்கும் மற்ற ஆடைகளைக்
கீழே போடேன்"
என்றே கெஞ்சினர் கோபியர்.
( லீலை தொடரும் )
No comments:
Post a Comment