Saturday, September 10, 2011

ஆடை அபகரணம் - 6

அவ்வமயம்
ஆண்டாள்
மெல்லப் பேசினாள்,
"கண்ணா நீ அந்த
கோதண்ட ராமனல்லவோ,
இல்லத்தரசியை மீட்க
இலங்கையை
வில் கொண்டு
வீழ்த்தியவனல்லவோ நீ,
பெண்ணைக் காக்க
போரிட்டவன் சிறு
பிள்ளைகளான எங்களைக்
குளத்தின் கரையில்
குழந்தைத்தனமாய்
அம்மனமாய் நிறுத்தி
அழ வைத்து
அவமானப்படுத்தலாமா ?
ஆடை தந்துவிடு
அனந்த கிருஷ்ணா,
அமுத வாய் திறந்து,
முகுந்தா, நீ
மொழிவது எல்லாம்
முனைந்து செய்வோம்
நாங்கள் எல்லாம்,
பிறர் பார்க்குமுன்
போய்விட விழைகிறோம்,
பரந்தாமா ஆடை தா" என்றே
பேசினாள்.

பேதையரை
பயமுறுத்த எண்ணினான்
பரந்தாமன்.
நாலு பக்கமும்
திருதிருவென
திரும்பிப் பார்த்து
"யாரோ வருகிறார்கள்" என்றுரைத்து
மரத்தின் இலைகளிடையில் தன்னை
மறைத்துக்கொள்ள
முற்பட்டான்.
தன் உடலையும்
சுருக்கிக் கொள்வதாய்
நடித்தான்.
ஏற்கனவே
அழுதுகொண்டிருக்கும்
அனைவரும் மேலும்
அச்சமுற்றனர்;

குரங்கு போல்
கிளைக்கு கிளை
தாவிக் கண்ணன் அவர்களுக்கு
ஆட்டம் காண்பித்தான்.

ஆண்டாள் மீண்டும்
ஆயர்பாடிக் கண்ணனிடம்
அன்பு மாறாதுப் பேசினாள்
"இலங்கையை அழித்த
இராமா,
குளம் நோக்கி
குளிக்க பலர்
கூடும் நேரமிது;
எங்களை இக்கோலத்தில்
கண்டால்
ஏளனமாய்
எண்ணுவர். அதையும் தவிர
எங்கள்
தாய்வசம் சொல்லுவர்.
தயை காட்டாயோ
தாமோதரா ?
கண்ணிலிருந்து நீர்
குறையாது
கொட்டிக்
கெஞ்சுகிறோம்;
மரம் விட்டு
மரம் தாவும்
மந்திகளுக்கெல்லாம்
மன்னா,
போதும் உன் விளையாட்டு,
எமது ஆடைகளை
எம்மிடம் தந்துவிடு;"

                                                                        ( லீலை தொடரும் )

No comments:

Post a Comment