சடாயு உயிர் நீத்த படலம்
3403.
என்னும் அவ்வேலையின்கண், 'எங்கு
அடா போவது?' என்னா
'நில் நில்' என்று, இடித்த சொல்லன்
நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்;
மின் என விளங்கும் வீரத்
துண்டத்தன்; மேரு என்னும்
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே
பொருவும் மெய்யான்;
இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு
பறக்கும் அவ்வேளையில்,
சீதை உதவி கேட்டு ஓலமிட்ட அவ்வேளையில்,
'அடேய், எங்கு போகிறாய்?' என்று கேட்டபடி,
'நில் நில்' என்று சத்தமாய்க் கத்தியபடி,
கண்ணில் கனல் பறக்க,
மின்னலைப் போன்று,
வலிமையான அலகை உடைய,
மேரு மலை போன்ற குன்று
வானில் பறந்து வருவது போன்ற உடலை உடைய
சடாயு அங்கு தோன்றினான்.
3411.
'பேதாய்! பிழை செய்தனை;
பேர் உலகின்
மாதா அனையானை
மனக்கொடு, நீ
யாது ஆகா நினைத்தனை?
எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி
யார் உளரோ?'
முட்டாளே, தவறு செய்கிறாய்
இவ் உலகத்து உயிர்கட்கெல்லாம்
தாய் போன்றவளை
யார் என்று நீ மனதில் எண்ணியிருக்கிறாய்.
சிந்தனை சரியில்லை உனக்கு ?
பாவம் செய்யும் உனக்கு, இனி
பக்க பலமாய் யாரிருப்பார்?
3420.
'வரும் புண்டரம்! வாளி
உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவாவகை
பேருதி நீ;
இரும்பு உண்ட நீர்
மீளினும், என்னுழையின்
கரும்பு உண்ட சொல்
மீள்கிலள்; காணுதியால்'
'என் பாதையில் குறுக்கிடும் கழுகே
உன் மார்பினை என் அம்பு ஊடுருவி
பெரிய புண்ணாகிப் போகும் முன், நீ
இவ்விடம் விட்டு விலகு;
காய்ச்சிய இரும்பில் பட்ட தண்ணீர் கூட மீளலாம்,
கரும்பு போன்ற இனிய சொற்களைப் பேசக்கூடிய
இவள் என்னிடமிருந்து மீள முடியாது;
பார்க்கிறாயா ?'
என்றுரைத்தான் இராவணன்.
3423.
இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ்
சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டு,
முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன், காண்தரும்
நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து, உயர்
வானவர் ஆசி கொண்டான்.
சடாயு -
இடி போன்ற ஓசை எழுப்பினான்.
தன் இரு பெரும் சிறகுகளை வீசி அடித்தான்.
இராவணனின் கிரீடங்களை தரையில் தள்ளினான்.
அவன் தலையை தன் வலிய அலகால்
துண்டாக்க எண்ணி வேகமாய்ப் பறந்து வந்தவன்,
தேரின் மேலிருந்த வீணைக் கொடியைப் பற்றி ஒடித்தான்.
தேவர்களின் வாழ்த்தைப் பெற்றான்.
3444.
வலியின்தலை தோற்றிலன்; மாற்ற
அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும்
வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது; ஆகலின்,
விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஓர்
குன்றின் வீழ்ந்தான்.
இதுவரை யாரிடமும் தோற்காத சடாயு,
வயது முதிர்ந்து இறுதிக் காலம் வந்துவிட்டதால்,
தடுப்பதற்கு அரிய தெய்வம் தந்த வாளை,
எதிரியின் தலை தவறாது அழிக்கும் வாளை,
வேந்தன் இராவணன் அவ்வச்சிர வாளை வீசி
சிறகை வெட்ட, மலை போல் வீழ்ந்தான் சடாயு.
3448.
'அல்லல் உற்றேனை, வந்து 'அஞ்சேல்'
என்ற இந்
நல்லவன் தோற்பதே ?
நரகன் வெல்வதே?
வெல்வதும் பாவமோ?
வேதம் பொய்க்குமோ ?
இல்லையோ அறம்?' என
இரங்கி ஏங்கினாள்.
துன்பத்தில் துவண்டிருந்தவளை
'கலங்க வேண்டாம்' என்று ஆறுதல் சொன்ன
நல்லவன் சடாயு தோற்பதா ?
நரகம் சேரப்போகும் இவ்வரக்கன் வெல்வதா?
பாவம் வெல்லுமா ?
வேதம் சொல்லும் அறம் தோற்குமா ?
இவ்வுலகில் தருமம் இல்லையோ ?
என்று மனம் கலங்கிப் புலம்பினாள் சீதை.
( தொடரும் )
No comments:
Post a Comment