Monday, February 24, 2020

கம்பராமாயணம் 46



3288.
'காயம், கனகம்; மணி,
   கால், செவி, வால்;
பாயும் உருவோடு இது
   பண்பு அலவால்;
மாயம் என்னால் அன்றி,
   மனக் கொளவே
ஏயும்? இறை மே அல'
   என்ற அளவே.

'உடலோ பொன்,
காலும் காதும் வாலும் மாணிக்கம்;
வேகமாய்ப் பாய்ந்தோடும் விதத்திலுள்ளது;
இயற்கைப் பண்போடு இல்லை இது;
இது மாயமான் என்று உணருதலே முறை,
வேறெந்த விதத்திலும் எண்ணுவது பிழை;
என் தலைவனே,
எவ்வகையிலும் இது உண்மையானது இலை'
என்று இலக்குவன் உரைக்க ...


3299.
'மாயமேல் மடியும் அன்றே
   வாளியின்; மடிந்தபோது
காய் சினத்தவரைக் கொன்று கடன்
   கழித்தோமும் ஆதும்;
தூயதேல் பற்றிக் கோடும்; சொல்லிய
   இரண்டின் ஒன்று
தீயதே? உரைத்தி' என்றான் தேவரை
   இடுக்கண் தீர்ப்பான்.

மாயமான் என்றால் என் அம்பிற்கு இரையாகும்.
அவ்வாறு மரணமுற்றால் கொடிய அரக்கரைக்
கொல்லும் நம் கடமை நிறைவேற்றியதாகும்;
உண்மையான மான் என்றால்,
பிடித்துக் கொண்டு வருவோம்.
இப்போது சொல்லிய இந்த இரண்டில்
தீயது ஏதும் உண்டோ? சொல்' என்றான்
தேவர்களின் துயர் தீர்க்கும் இராமன்.



3303.
ஆயிடை அன்னம் அன்னாள் 
   அமுது உகுத்தனைய செய்ய 
வாயிடை மழலை இன்சொல் 
   கிளியின் குழறி மாழ்கி 
'நாயக! நீயே பற்றி 
   நல்கலைபோலும்' என்னா 
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு 
   சீறிப் போனாள்.

(சரி மானை நான் கொன்று இல்லை பிடித்து வருகிறேன் 
என்று இலக்குவன் சொல்ல)

பேச்சுக்களின் இடை புகுந்து 
அன்னம் போன்ற சீதை
அமுது சிந்தினாற் போன்ற 
மழலைச் சொற்களால்
கிளி மொழிவது போல், வருத்தத்துடன் 
'தலைவ! நீயே இம் மானைப் பிடித்துத் தரமாட்டாயா?'
என்று சொல்லி,
மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிந்த,
கோபங்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.



3313.
நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப் 
பட்டது; அப்பொழுதே பகு வாயினால் 
அட்ட திக்கினும் அப்புறமும் புக 
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன்.

நெடிய இலை வடிவ அம்பு 
வஞ்சகன் நெஞ்சைத் தாக்கியது;
அக்கணமே தன் வாயினை அகலத்திறந்து 
எட்டு திசைகளும், அதற்கப்பாலும் கேட்கும்படி 
இராமன் குரலில் (சீதா லக்ஷ்மணா என்று) அழைத்து 
குன்று போன்று கீழே விழுந்தான் மாரீசன்.



3318.
'மாள்வதே பொருள் 
   ஆக வந்தான்அலன்;
சூழ்வது ஓர் பொருள் உண்டு;
   இவன் சொல்லினால் 
மூள்வது ஏதம்;
   அது முடியாமுனம் 
மீள்வதே நலன்' என்று 
   அவன் மீண்டனன்.

இறக்கும் எண்ணத்தில் மட்டும்  
இவன் இங்கு வந்தவனாகத் தோன்றவில்லை;
இதற்கு பின் ஏதோ நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது,
இவனின் கூக்குரலின் பின் ஏதோ தீங்கு நிகழப்போகிறது;
அது நடப்பதற்கு முன், நான் பர்ணசாலை அடைவது நல்லது'
என்று எண்ணி இராமன் தன் இருப்பிடம் விரைந்தான்.


( தொடரும் )


No comments:

Post a Comment