3347.
சேயிதழ்த் தாமரைச் சேக்கை
தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற
மேனி காணுதற்கு
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு
இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை!' என்று
அல்லல் எய்தினான்.
'சிவந்த இதழுடைய தாமரை மலரின்
இருக்கையை விட்டு,
இங்கு வந்துலவும் திருமகள் சீதையின்
இரத்தினம் போன்ற சிவந்த மேனியழகைக்
கண்டு ரசிக்க
இருபது கண்கள் எப்படிப் போதும்?
இமைக்காத கண்கள் ஆயிரம் அல்லவா வேணும்!
என்று எண்ணி வருந்தினான் இராவணன்.
3357.
'அனக மா நெறி படர்
அடிகள்! நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு
இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள்; பெயர்
சனகி; காகுந்தன்
மனைவி யான்' என்றனள்,
மறு இல் கற்பினாள்.
'குற்றமில்லாத சிறந்த அறவழியில் செல்லும்
பெரியவரே,
உம்மைப் போன்றவரை அல்லாது வேறு யாரையும்
தெய்வமெனத் தொழாத,
ஜனகனின் பெண் நான்,
பெயர் ஜானகி யாம்.
காகுந்தன் குலத்திலுதித்த இராமனின் மனைவி'
என்றாள் குற்றமற்ற கற்புடைய சீதை.
3378.
'மேருவைப் பறிக்க வேண்டின்,
விண்ணினை இடிக்க வேண்டின்,
நீரினைக் கலக்க வேண்டின்,
நெருப்பினை அவிக்க வேண்டின்,
பாரினை எடுக்க வேண்டின்,
பல வினை, சில சொல் ஏழாய்
யார் எனக் கருதிச் சொன்னாய்?
இராவணற்கு அரிது என்?' என்றான்.
'மேரு மலையைப் பெயர்த்தெடுக்க வேண்டுமென்றாலும்,
வானை இடிக்க விரும்பினாலும்,
கடல் நீரைக் கலக்க வேண்டுமென்றாலும்,
நெருப்பினை பொசுக்க நினைத்தாலும்
உலகத்தையே தூக்க விரும்பினாலும்
இது போல் பல செயல்களை செய்ய வல்லவனை
சிறுமைப்படுத்துகிறாயே பேதைப் பெண்ணே,
யார் என்று எண்ணுகிறாய் இராவணனை,
அவனால் செய்ய முடியாதது எது ?'
என்று வினவினான்.
3390.
ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
கீண்டான் நிலம்; யோசனை கீழோடு மேல்.
அப்பொழுது அவ்விடத்தில் அத்தீயவன்
பிரம்மன் முன்னம் தந்த சாபத்தை நினைவில் கொண்டு
அணிகலன்கள் அணிந்த சீதையைத் தொடாது,
கல்தூண்கள் போன்ற அவன் தோள் வலிமையால்
சீதையிருந்த அந்நிலத்தை, ஒரு யோஜனை^ தூரம்
கீழ் பக்கமும், அருகிலிருந்தும் பெயர்த்தெடுத்தான்.
^ ஒரு யோஜனை - 14 KMs
( தொடரும் )
No comments:
Post a Comment