Friday, February 14, 2020

கம்பராமாயணம் 37


சடாயு காண் படலம்

2690.
நடந்தனர் காவதம் பலவும்;
     நல் நதி
கிடந்தன, நின்றன,
    கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின;
    சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
    கழுகின் வேந்தையே;

(சீதையோடு இராம இலக்குமணன்)
நடந்தனர் பல காத தூரம்,
கடந்தனர் புனித நதிகள் பல,
தொடர்ந்து நின்றிருந்த மலைகள் பலவற்றை
மலைக்காது தொடர்ந்தனர்,
கடந்தனர் அம் மலைகள் சூழ்ந்திருந்த காடுகளை,
அவ்வமயம்
கண்டனர் சாடாயுவை, கழுகின் காவலனை.


2700.
வனை கழல் வரி சிலை 
   மதுகை மைந்தரை,
அனையவன்தானும் கண்டு 
   அயிர்த்து நோக்கினான்,
'வினை அறு நோன்பினர் 
   அல்லர்; வில்லினர்;
புனை சடை முடியினர்;
   புலவரோ ?' எனா 

கட்டிய வீரக்கழல், வில், வலிமை நிறைந்த மக்கள் 
அனைத்தையும் ஜடாயு கண்டான் .
யாராயிருக்கும் என்று ஐயமுற்றான்.
'செய்த வினைகளைப் போக்க விரும்பும் 
தவ முனிவர்கள் அல்லர்;
கையில் வில்லை வைத்திருக்கின்றனர்;
சடைமுடி தரித்திருக்கின்றனர்;
ஒருவேளை ... தேவர்களோ?' என்று எண்ணினான்.



2706.
வினவிய காலையில் 
   மெய்ம்மை அல்லது 
புனை மலர்த்
   தாரவர் புகல்கிலாமையால் 
'கனை கடல் நெடு நிலம் 
   காவல் அழியான் 
வனை கழல் தயரதன் 
   மைந்தர் யாம்' என்றார்.

'யார்?' என ஜடாயு கேட்ட பொழுது 
உண்மையல்லாத எதையும் சொல்லாத,
பூ மாலை அணிந்த இராம இலக்குமணர் 
கடலாற் சூழ்ந்த உலகம் யாவையும் 
காக்கும் வல்லமையுடைய, 
வீரக் கழல்கள் அணிந்த 
தயரதன் மைந்தர் நாங்கள்' என்றனர்.



2714.
'அருணன்தன் புதல்வன்யான்; அவன் படரும் 
   உலகு எல்லாம் படர்வேன்; ஆழி 
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் 
   உயிர்த்த துணைவன்; இமையோரோடும் 
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே 
   வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;
தருணம்கொள் ஒளியீர்!
   சம்பாதிபின் பிறந்த சடாயு' என்றான்.

அருணனது மகன் நான்;
அவன் சொல்லுமிடமெல்லாம் செல்லும் ஆற்றலுடையவன்.
தன் அரசாட்சியில் அனைத்து பகைவர்களையும் அழித்த 
தயரதனின் உற்ற நண்பன்;
தேவர்களோடு மற்ற சாதியினரை வகைப்படுத்துகையில் 
நான் பிறந்தேன்;
கழுகுகளுக்கெல்லாம் அரசன்;
இளமையோடு ஒளி நிறைந்திருப்பவர்களே,
சம்பாதி என்பவனுக்குத் தம்பி, சடாயு!' என்று 
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.



2729.
'பெரிதும் நன்று; அப் பெருந் 
   துறை வைகி, நீர் 
புரிதிர் மா தவம்; போதுமின்;
   யான் அது 
தெரிவுறுத்துவென்' என்று அவர் 
   திண் சிறை 
விரியும் நிழலில் செல்ல,
   விண் சென்றனன்.


(பஞ்சவடி செல்லும் திட்டத்தைக் கேட்டு)
'மிகவும் சரி;
நீங்கள் அங்கே நீர்த்துறையில் தங்கி 
தவம் புரிய ஏற்ற இடம்;
வாருங்கள் போவோம், 
நான் பாதை காட்டுகிறேன்' என்று சொல்லிவிட்டு 
தன் இறக்கைகள் விரித்து,
அந் நிழலில் மூவரும் நடக்க,
வானில் பறந்தான் - ஜடாயு.

( தொடரும் )

No comments:

Post a Comment