இராவணன் சூழ்ச்சிப் படலம்
3322.
'குற்றம் வீந்த குணத்தின்
எம் கோமகன்
மற்று அவ் வாள் அரக்கன்
புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும்
என் அயல்
நிற்றியோ, இளையோய் ! ஒரு
நீ?' என்றாள்.
'குற்றம் இல்லாத நற்பண்புகளையே உடையவன்
என் தலைவன்
அவ்வாறில்லாத அந்த அரக்கன் என்னோவோ
மாயம் செய்ய
அதனால் உயிரற்று வீழ்ந்தான்,
அவன் குரல் கேட்டபின்னும்
இன்னும் இங்கேயே என் அருகில் நிற்கின்றாயே,
அவன் தம்பியா நீ?'
என்று சீதை இலக்குவனைப் பார்த்துச் சொன்னாள்.
3325.
'பார் என, புனல் என,
பவன, வான், கனல்,
பேர் எனைத்து அவை அவன்
முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக்
கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ்
இடரின் ஆழ்கின்றீர்?'
'பூமி நீர் காற்று வான் நெருப்பு இன்னும்
பெயருள்ள எத்தனைப் பொருட்கள் உள்ளனவோ
அவை யாவும்,
இராமன் சினத்து நோக்கினால் நிலை மாறும்.
மேகம் போன்று கருநிறத்தவனை
தாமரைக் கண்கள் கொண்டவனை
யார் என்று எண்ணி
இத்துன்பக் கடலில் கிடக்கின்றீர்?'
என்று சீதைக்கு ஆறுதல் சொன்னான் இலக்குவன்.
3230.
என்று அவன் இயம்பலும்
எடுத்த சீற்றத்தள்,
கொன்றன இன்னலள்,
கொதிக்கும் உள்ளத்தள்,
'நின்ற நின் நிலை, இது நெறியிற்று
அன்று' எனா,
வன் தறுகண்ணினள்
வயிர்த்துக் கூறுவாள்;
இலக்குவன் இவ்வாறு இயம்பியதும்
கோபம் கொண்டாள்; தன்னையே
கொன்றது போல் துடிதுடித்தாள்;
கொதிக்கும் மனமுடையவள் ஆனாள்;
'நீ இங்கு இவ்வாறு நின்றிருக்கும் நிலை
சரியன்று' என்று
அஞ்சா நெஞ்சினாள் சீதை
இலக்குவனிடம் சண்டையிட்டாள்.
3338.
இளையவன் ஏகலும்
இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன்
வஞ்சம் முற்றுவான்
முளை வரித் தண்டு ஒரு
மூன்றும் முப் பகைத்
தளை அரி தவத்தவர்
வடிவம் தங்கினான்.
இலக்குவன் இராமனைத் தேடிச் சென்றான்.
அதற்காகவே காத்திருந்த,
வளைந்த பற்களையுடைய இராவணன்
அங்கே தோன்றினான்.
தான் எண்ணியிருந்த வஞ்சகச் செயலை
செய்து முடிக்க தீர்மானித்தான்.
கையில் மூன்று மூங்கில் தண்டுகளை
எடுத்துக்கொண்டான்.
தவ வேடம் தரித்துக் கொண்டான்.
3343.
தோகையும் அவ்வழி, 'தோம்
இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர்'
என்னும் சிந்தையால்.
பாகு இயல் கிளவியாள், பவளக்
கொம்பர் போன்று
'ஏகுமின் ஈண்டு' என
எதிர்வந்து எய்தினாள்.
சீதையும் அவ்விடத்தில்
'குற்றமற்ற மனத்தை,
குற்றமற்ற விரதத்தை ஏற்றவர்' என்றெண்ணி,
பாகு போன்ற சொற்களைப் பேசுபவள்
பவளக் கொம்பு போன்று அழகானவள்,
'இங்கு எழுந்தருள்க' என்று எதிர்நின்று வரவேற்றாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment