2825.
'ஊக்கித் தாங்கி விண் படர்வென்'
என்று உருத்து எழுவாளை
நூக்கி நொய்தினில், 'வெய்து
இழையேல்' என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண்
முலைக் கண்களும், முறையால
போக்கி, போக்கிய சினத்தோடும்
புரி குழல் விட்டான்.
(சீதையின் பின்னே சூர்ப்பணகை செல்வதைப் பார்த்து,
இலக்குமன் தடுக்க)
'முயற்சித்து இவனையும் பிடித்து வான்வழி போவேன்'
என்று எழுந்த சூர்ப்பனகையை
எளிதில் கீழே தள்ளி,
'கொடுந்தொழிலைச் செய்யாதே' என்று கூறி
அவள் மூக்கையும், காதுகளையும்
வலிய முலைக் காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாய்
தன் உடைவாளால் அறுத்தெறிந்து,
பின்னர் சினம் நீங்கி,
அவள் கூந்தல் பிடி தளர்த்தினான் - இலக்குவன்.
2832.
'நிலை எடுத்து, நெடு நிலத்து
நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது
அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே!
தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே!
இவை காண வாராயோ?
இந்த உலகில் நிலை பெற்று பெரும் புகழ் பெற்ற
நீ இருக்க,
தவம்புரிய வந்தோர் வில் ஏந்தி நடமாடுவது
உனக்கு இழுக்கன்றோ ?
(இவ்வாறு இவர்கள் தைரியமாக நடமாடினால்)
தேவர்கள் எதிர்நின்று தலை குனிந்து
வெட்கி நிற்பது என்பது நடக்குமா ?
கையில் தீயை ஏந்திய சிவனின்
கைலாய மலையைப் பெயர்த்த
மலை போன்றவனே (இராவணா),
எனக்குநேர்ந்த இந்த கொடுமையைக் காண வாராயோ?
2857.
'வான் காப்போர், மண் காப்போர்,
மாநாகர் வாழ் உலகம்
தான் காப்போர், இனி தங்கள் தலை
காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்?
என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ்
இராவணனார் உளர்!' என்றாள்.
(இங்கிருந்து ஓடிவிடு என்று இராமனும் சொல்ல)
'வானுலகைக் காக்கும் தேவர்களும்
மண்ணைக் காக்கும் மன்னர்களும்
நாக லோகத்தைக் காப்போர்களும்
தம்தமது தலையை முதலில் காப்பாற்றிக்கொண்டு
பிறகல்லவா உங்களைக் காப்பாற்ற முடியும்?
என் ஆசையை நிறைவேற்றி என்னுயிர் நீர் காத்தால்,
உங்களை நான் காப்பேன்;
இல்லையெனில் இராவணன் இருக்கிறான்' - என்றாள்.
2874.
'ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும்,
முலை இரண்டும், இழந்தும் வாழ
ஆற்றுவனே?வஞ்சனையால் உமை உள்ள
பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?
காற்றினிலும் கனலினிலும் கடியானை,
கொடியானை, கரனை, உங்கள்
கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்'
என்று சலம்கொண்டு போனாள்.
அழகான நீண்ட என் மூக்கையும், காதுகளையும்
கொங்கைகளையும் இழந்து பின்னும்,
இன்னும் வாழ எண்ணுவேனா நான் ?
வஞ்சனையால், உம் உள்ளத்தில் உள்ள
(அரக்கர்களை அழிக்கவேண்டும் என்ற)
கருத்தை அறிந்துகொண்டேன்.
காற்றையும் தீயையும் விட ஆற்றல் உடையவனை,
கொடியவனை, கரன் என்ற பெயருடையவனை,
உங்கள் யமனை,
இக்கணமே இங்கே அழைத்து வருகிறேன்'
என்று கூறி தணியாத கோபத்துடன் சென்றாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment