Wednesday, February 19, 2020

கம்பராமாயணம் 42




2969.
அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர்,
   அழித்தார் சிலர், கழிந்தார்;
உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர்,
   உருண்டார் சிலர், புரண்டார்;
குழைத் தாழ் திரைக்கு குருதிக் கடல்
   குளித்தார் சிலர், கொலை வாய்
மழைத் தாரைகள் படப் பாரிடை
   மடிந்தார் சிலர், உடைந்தார்.

'ஐயோ அம்மா' என்று அலறினர் சிலர்;
சோர்ந்து போனர் சிலர்;
செத்து ஒழிந்தனர் சிலர்;
ஓடித் தப்பித்தனர் சிலர்;
வருந்தி அழுதனர் சிலர்;
பெருமூச்சு விட்டனர் சிலர்;
தரையில் உருண்டு, புரண்டனர் சிலர்;
ஆறாய் ஓடும் குருதிக் கடலில்
சேறாய் மூழ்கிப் போனர் சிலர்;
பகைவரைக் கொல்லும் நோக்குடன்
எய்திய இராமனின் கணைகள்
மழைத் துளிகள் போல் பாய
தரையிலேயே விழுந்து உயிர்விட்டனர் சிலர்;
மன உறுதி அகல, ஓடினர் சிலர்;



3010.
திரிசிரா எனும் சிகரம் மண் 
   சேர்தலும், செறிந்த 
நிருதர் ஓடினர், தூடணன் 
   விலக்கவும் நில்லார்;
பருதி வாளினர், கேடகத் தடக் 
   கையர், பரந்த 
குருதி நீரிடை, வார் கழல் 
   கொழுங் குடர் தொடக்க.


கரனின் படைத்தலைவன் திரிசிரன், 
தோற்று மண்ணில் சரியவும்
இன்னொரு சேனைத்தலைவன் தூடணன் 
தடுத்தும் நில்லாது
முன்பு நெருங்கி நின்றிருந்த அரக்க வீரர்கள், விலகி ஓடினர்;
கதிரவன் போன்று ஒளிவீசும் வாள் படையினர்,
கேடயங்களை ஏந்திய வலிய கையினர்,
பரந்த இரத்த வெள்ளத்தில் மிதக்கும் கொழுத்த குடல்கள் இடர
ஓடினர்;


3035.
தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள்
   திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல்
   முழக்கு என ஒங்க,
'கா அடா இது, வல்லையேல், நீ'
   என கணை ஒன்று
ஏவினான்; அவன் எயிறுடை
   நெடுந் தலை இழந்தான்.


தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்ய,
முனிவர்கள் எல்லா திக்குகளிலும் நின்று
வாழ்த்தும் ஒலி, கடலலை போல் ஓசையெழுப்ப
'நீ அவ்வளவு தைரியம் உடையவன் எனில்,
இந்தக் கணையிலிருந்து உன்னைக் காத்துக்கொள்'
என்று இராமன் ஒரு அம்பு எய்த,
அரக்கன் தூடணன் தன் தலை இழந்தான்.



3052.
கண்டு நின்று கருத்து 
   உணர்ந்தான் என 
அண்டர் நாதன் தடக் 
   கையில் அத் துணை 
பண்டு போர் 
   மழுவாளியைப் பண்பினால் 
கொண்ட வில்லை 
   வருணன் கொடுத்தனன்.


(கரனுடன் சண்டையிடுகையில்)
வான் வழியே 
போரினைக் காண நின்றிருந்தான் (வருணன்),
(இராமன் வில் உடைய)
குறிப்புணர்ந்தான், 
இராமனின் நெடிய கரத்தில்,
அச்சமயத்தில், 
முன்னம் பரசுராமனிடமிருந்து  பெற்று,
பாதுகாத்திடு - என்று தந்த விஷ்ணுதனுசை 
வருணன் இச்சமயத்தில் திருப்பித் தந்தான்.



3058.
விராவரும் சுடு வெள் 
   எயிறு இற்றபின் 
அரா அழன்றது அனைய 
   தன் ஆற்றலால் 
மரா மரம் கையில் வாங்கி 
   வந்து எய்தினான்;
இராமன் அங்கு ஓர் 
   தனிக் கணை ஏவினான். 

விடத்தைக் கொண்ட வெண் பற்களை இழந்த பின்னும் 
சீறிவரும் நாகப்பாம்பு போல,
ஒரு கை இழந்த பின்னும், தனது வல்லமையால்,
ஒரு பெரிய மரத்தையே பெயர்த்துக்கொண்டு 
அருகில் வந்தான், கரன்.
அவனைக் கொல்லும் வலிமையுள்ள 
ஒரு பானத்தை எய்தான், இராமன்.


( தொடரும் )

No comments:

Post a Comment