ஆரணிய காண்டம்
விராதன் வதைப் படலம்
2517.
முத்து இருத்தி அவ் இருந்தனைய
மொய்ந் நகையொடும்
சித்திரக் குனி சிலைக் குமரர்
சென்று அணுகினார் -
அத்திரிப் பெயர் அருந்தவன்
இருந்த அமைதி
பத்திரப் பழுமரப் பொழில்
துவன்று பழுவம்.
முத்துக்கள் ஒன்றை ஒன்று நெருங்கி இருப்பது போன்ற
பல்வரிசையுடைய சீதையுடன்
அழகிய வளைந்த வில்லை ஏந்திய
இராம இலக்குமனர்
அடுத்து சென்று சேர்ந்தது,
அத்திரி என்ற பெயருடைய பெரிய தவ முனிவன்
வாழ்ந்து வந்த, இலையும் பழமும் நிறைந்த
சோலை பல நெருங்கியிருக்கும் வனம்.
2534.
சார வந்து அயல் விலங்கினன்
மரங்கள் தரையில்
பேர, வன் கிரி பிளந்து உக
வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர்
விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும்ஏறு அன
கொடுந் தொழிலினான்.
மரங்கள் தரையிலிருந்து பெயர்ந்து விழுமாறு,
பெரிய மலைகள் பிளந்து சிதறுமாறு,
பேருருவம் கொண்டு வளர்ந்து,
கொடிய வீர வில்லை ஏந்திய இராம இலக்குமனர்
முன் வந்து குதித்து வழிமறித்து நின்றான்,
கோரமான உருவம், அச்சமூட்டும் கண்கள்
காண்போரைத் துன்புறுத்தும்
கொடிய தொழில் புரியும்
விராதன் எனும் ஒருவன்.
2537.
'ஆதி நான்முகன் வரத்தின் எனது
ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது'
என்று புகல
நான்முகன் தந்த வரம் உண்டு,
அவ்வரத்தால் என் உயிர் போகாது எனை விட்டு,
எந்த ஆயுதமும் தேவையில்லை எனக்கு,
இந்த உலகே எதிர்த்துப் போரிட வந்தாலும்
எனை வெல்வது முடியாத ஒன்று;
அற்பர்களே, உயிர்ப்பிச்சை தந்தேன் உங்கட்கு;
இப்பெண்ணை மட்டும் இங்கு விட்டுவிட்டு
உடனே போவது உங்கட்கு நல்லது'
என்றான்.
2562.
பொறியின் ஒன்றி, அயல்சென்று
திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற
நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
உடைய பெற்றிதனினும்
அறிவு வந்து உதவ, நம்பனை
அறிந்து,பகர்வான்.
ஐம்பொறிகளின் இடையில் அகப்பட்டு
புறத்தே உள்ள சுகங்களை எண்ணித் திரிந்து
அறிவுக்கெட்டாது அலைந்து திரிந்து,
(இராமன் அருளால்)
நல்வழியில் செல்லும் நிலை உண்டானதால்
பிரிதல் இல்லாத பக்தி, முன் மிகக் கொண்டிருந்ததால்
உண்மையான ஞானம் துணை புரிய
இராமனை உணர்ந்து துதித்து நற்கதி அடைந்தான்
விராடன்.
2584.
திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்!
பொறுத்தி! என்று போயினான்.
என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த தீவினைகளை
அழித்த உன்னை, மூடன் நான்
எதிர்த்துச் செய்தவற்றை பொறுத்தருள்க
என்று சொல்லிவிட்டு, விராடன் வானுலகம் சென்றான்.
( தொடரும் )
No comments:
Post a Comment