Saturday, February 22, 2020

கம்பராமாயணம் 44


3155.
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு
   பேர் அமளிப் பங்கர்
தேவிமார் குழுவும் நீங்கச்
   சேர்ந்தனன்; சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும்
   குயமும், புக்குப்
பாவியா கொடுத்த வெம்மை
   பயப்பயப் பரந்தது அன்றே.

மனைவியரை விட்டகன்று
மலர்களைப் பரப்பி அமைக்கப்பட்ட
மஞ்சத்தில் வந்தமர்ந்தான் இராவணன்.
அவ்வாறு அமர்ந்ததும்
நறுமணம் வீசும் கூந்தலையுடைய,
மான் போன்ற சீதையின்
கண்களும் மார்புகளும்
மனதுள் புகுந்து பல்வேறு எண்ணங்களை எழுப்பக் கண்டான்.
அந்த எண்ணங்கள்  தந்த வெப்பம்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகுவதை உணர்ந்தான்.



3167.
மாதிரத்து இறுதிகாறும் தன் மனத்து 
   எழுந்த மையல் 
வேதனை வெப்பம் செய்ய வேனிலும் 
   வெதுப்பும் காலை 
'யாது இது இங்கு? இதனின் முன்னைச் 
   சீதம் நன்று; இதனை நீக்கி 
கூதிர்ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் 
   விரைவின்' என்றான்.


மனதுள் எழுந்த காமம்
எல்லா திசைகளின் எல்லைகளையும் எட்ட,
அவ் வேதனை தந்த துன்பம் அதிகரிக்க 
வேனிற் காலமும் அவனைச் சுட, 
'என்ன பருவம் இது? 
இதற்கு முன்னிருந்த குளிர்காலமே தேவலையே;
இவ் வேனிற் காலத்தை நீக்கிவிட்டு 
*கூதிர்கால தட்பவெப்பநிலை நிலவட்டும், சீக்கிரம்'
என்று ஆணை பிறப்பித்தான்.


கூதிர்கால - autumn


3236.
வந்த மந்திரிகளோடு மாசு அற 
   மனத்தின் எண்ணி,
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் 
    தெளிவு இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் 
   விமானத்தில் ஆரும் இன்றி 
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் 
   இருக்கை சேர்ந்தான்.


இராவணனின் கட்டளைப்படி 
அவன் இருப்பிடம் வந்தனர் அமைச்சர்கள்;
குற்றம் குறைகள் இன்றி ஆலோசனை செய்தனர்;
தெளிவு ஏதும் பிறக்காத காரணத்தால் 
தான் எண்ணியதையே செய்யும் கொள்கை உடைய 
இராவணன்,
விண்ணில் பறந்து செல்லும் விமானத்தில் ஏறி 
புலன்களை அடக்கி தவம் புரியும் மாரீசன் 
இருப்பிடம் போய்ச் சேர்ந்தான்.


மாரீசன் வதைப் படலம் 

3242.
'வெப்பு அழியாது என் நெஞ்சும் 
   உலர்ந்தேன், விளிகின்றேன் 
ஒப்பு இலர் என்றே, போர் செயல் 
   ஒல்லேன்; உடன் வாழும் 
துப்புஅழி செவ் வாய் வஞ்சியை 
   வௌவ துணை கொண்டிட்டு 
இப் பழி நின்னால் தீரிய வந்தேன் 
   இவண்' என்றான்.


'நெஞ்சின் வெப்பம் நீங்காது 
வாடி வதங்குகின்றேன்;
எனக்கு சமம் இல்லை என்பதால் 
போரைத் தவிர்க்கிறேன்;
அவர்களுடன் வாழும் 
பவளம் போன்ற சிவந்த வாயுடைய 
வஞ்சியை தூக்கிக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன்;
எனக்கு நேர்ந்த அவமானத்தை 
தீர்த்துக்கொள்ள எண்ணுகின்றேன்;
அதற்கு உன் துணை நாடி வந்திருக்கின்றேன்'
என்றான் இராவணன்.



( தொடரும் )

No comments:

Post a Comment