Tuesday, February 11, 2020

கம்பராமாயணம் 34


2455.
புக்கனன் புனலிடை, முழுகிப் போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான்,
முக்  கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்
ஓக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்.

நதியில் இறங்கி தலை முழுகினான்,
வேதங்களை நன்கு கற்றுணர்ந்த வசிட்டன் சொல்படி,
கையினால் மூன்று முறை நீரை வார்த்தான்,
ஒரே முறையில் எல்லா உயிர்களுக்கும் அருள் புரியும் புரியும்
பரம்பொருளான இராமன்.


2507.
'ஆம் எனில், ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம்
கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி
சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்'.

(நான் வரும்வரை அரசனாயிரு என்று இராமன் சொல்ல)
'அப்படியெனில், ஐயா,
பதினான்கு ஆண்டுகள் கழித்து தாங்கள்
பெரிய அகழியுடைய அயோத்தி நகரம் வந்துவிட வேண்டும்,
நாட்டை ஆளும் பணி ஏற்றுக்கொள்ள வேண்டும்,
அவ்வாறில்லாதுபோனால்
தீயில் விழுந்து நான் சாக நேரும்,
இது சத்தியம் ஆகும்,
உம் மேல் ஆணையாகும்' என்றான் பரதன்.

 
2509.
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், 'அரிது' என எண்ணி, ஏங்குவான்,
'செம்மையின் திருவடித்தலம் தந்தீக' என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அழுதான்,
வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்டான்,
இராமனை பிரிந்திருத்தல் அரிது என்பதையும்  உணர்ந்தான்,
திருவடி நிலைகள் இரண்டையும் எமக்குத் தந்தருளவேண்டும்'
என்று கேட்டான்.
எல்லாவற்றையும் தந்தருளும் இராமன் தன் இரு
திருவடி நிலைகளையும் தந்தருளினான்.


2514.
நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

(அயோத்தியினுள் நுழையாது, எல்லையில்)
நந்திக் கிராமத்தில் இருந்தபடி
இராமனின் பாதுகைகளை முன்வைத்து
செங்கோல் கொண்டு
சிந்தையில் ஐம்பொறிகளையும் அடக்கி
அங்கேயே தங்கியிருந்து ஆட்சி செய்தான்.
இரவும் பகலும் கண்ணில் நீர் வற்றாது - பரதன்.


2515.
'குன்றில் இருந்தனன்' என்னும் கொள்கையால்,
நின்றவர் நலிவரால், நேயத்தால்' எனா,
தன் துணைத் தம்பியும் தானும் தையலும் 
தென் திசை நெறியினைச் சேறல் மேயினான்.


சித்திரக்கூட மலையில் இருப்பதை அறிந்தபடியால்,
அயோத்தி மக்கள் அடிக்கடி வந்து வருந்துவர், அன்பினால்  
என்ற இராமன் கருதி, 
தம்பியோடும், தன் மனைவியோடும் 
தென் திசை நோக்கி நகரத் தொடங்கினான்.



அயோத்தியா காண்டம் முற்றிற்று 

( தொடரும் )

No comments:

Post a Comment