Thursday, February 13, 2020

கம்பராமாயணம் 36



அகத்தியப் படலம்

2633.
பண்டைய அயன்
   தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும்
   முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை
   தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை
   களிக்கும் சிந்தையார்.

முதன்முதலில் தோன்றிய பிரம்மானது
புதல்வர்கள் பாலகில்லரும்,
தலை முடி மழித்து தவம் செய்பவர்களும்
மௌன விரதம் மேற்கொண்டவர்களும்
அந்த தண்டக்காரணியம் எனும் காட்டில்
வாழ்கின்ற மற்ற முனிவர் அனைவரும்
இராமனைப் வருவதைப் பார்த்ததும்
பரவசமடைந்தார்கள்.


2656.
ஐந்தும் ஐந்தும் அமைதியின்
   ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர்
   வைகினார்; மா தவர்
சிந்தை எண்ணி, 'அகத்தியற் 
   சேர்க' என,
இந்து-நன்னுதல்
   தன்னொடும் ஏகினார்.

(தண்டக வனத்தில்)
பத்து ஆண்டுகள் துன்பமேதுமின்றி
இராம இலக்குமணர் அமைதியாக வாழ்ந்தனர்.
பெரிய தவ சீலர்களாகிய அம் முனிவர்கள்
ஆலோசித்து 'அகத்தியனைக் காண்க'
எனச் சொல்ல,
பிறைமதி போன்ற நெற்றியுடைய
சீதையுடன் புறப்பட்டனர்.



2685.
'விழுமியது சொற்றனை; இவ் வில் இது 
   இவண், மேல்நாள் 
முழுமுதல்வன் வைத்துளது;
   மூஉலகும் யானும் 
வழிபட இருப்பது; இத்தன்னை 
   வடி வாளிக் 
குழு, வழு இல் புட்டிலோடு கோடி'
 என நல்கி,

(தென் திசை நோக்கிச் செல்ல இருப்பதை இராமன் கூற)
நல்லதே  நீ சொன்னது,
இதோ இங்கிருக்கும் இந்த வில்,
முற்காலத்தில் திருமாலிடம் இருந்தது,
மூன்று உலகும் நானும் தினம் வழிபடுவது;
இது இனி, கூர்மையான அம்புகளோடு 
அம்புப் புட்டிலோடு - உன்னிடம் இருக்கவேண்டியது.
என்று அகத்தியர் இராமனுக்குக் கொடுத்தார்.


2687.
ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி,
    மணல் ஓங்கி,
பூங் குலை குலாவு குளிர் சோலை
    புடை விம்மி,
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓரி
    குன்றின்
பாங்கர் உளதால் உறையுள்
    பஞ்சவடி-மஞ்ச !

உயர்ந்து வளர்ந்த மரங்கள் உண்டு,
பெரிய பெரிய மலைகள் உண்டு,
மணற்குன்றுகள் நிறைய உண்டு,
பூக்கொத்துகள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் உண்டு,
குதித்து ஓடும் அலைகள் நிறைந்த ஒரு ஆற்றின் அருகில்,
மலையின் பக்கத்தில்
பஞ்சவடி எனும் உறைவிடம் உண்டு, மகனே;
(இனி அங்கு போய் இரும் என்று அகத்தியர் சொன்னார்)


( தொடரும் )


No comments:

Post a Comment