3065.
'ஆக்கினேன் மனத்து ஆசை; அவ்
ஆசை என்
மூக்கினோடு முடிய,
முடிந்த திலேன்
வாக்கினால், உங்கள்
வாழ்வையும் நாளையும்
போக்கினேன்; கொடியேன்'
என்று போயினாள்.
'என் மனத்துள் ஆசை வளர்த்தேன்;
அந்த ஆசையானது என் மூக்கு
அறுபட்டதோடு அகல,
இன்னும் நான் இறக்கவில்லை,
கண்டபடி பழி சொல்லி, உங்கள்
வாழ்க்கையை, வாழ்நாளை நாசமாக்குவேன்.
அத்தகைய கொடிய நெஞ்சம் படைத்தவள் நான்'
என்று சூளுரைத்துவிட்ட அங்கிருந்து கிளம்பினாள்
சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
3090.
தங்கையும், அவ் வழி,
தலையில் தாங்கிய
செங் கையள் சோரியின்
தாரை சேந்து இழி
கொங்கையள், முக்கிலள்,
குழையின் காதிலள்,
மங்குலின் ஒலி படத்
திறந்த வாளினள்.
(இராவணன் அமர்ந்திருந்த அரசவையில்)
அவ்விடத்தில் அவன் தங்கை
தன் செங்கையைத் தலை மேல் குவித்து
இரத்த வெள்ளத்தில்,
மார்பு வெட்டப்பட்ட நிலையில்,
மூக்கு அறுபட்ட நிலையில்,
குழையணிந்த காதுகள் இல்லாது,
இடி முழக்கம் தோற்கும்படி,
ஓலமிட்ட திறந்த வாயுடன் நுழைந்தாள்.
3115.
மடித்த பில வாய்கள்தொறும்
வந்து புகை முந்த
துடித்த தொடர் மீசைகள்
சுறுக்கொள உயிர்ப்ப
கடித்த கதிர் வாள் எயிறு
மின் கஞல, மேகத்து
இடித்த உரும் ஒத்து உரறி
'யாவர் செயல்?' என்றான்.
உதடு மடித்து, சினத்தால்
வாய்களிலெல்லாம் புகை எழ,
அடர்ந்த மீசைகள் துடிதுடிக்க
பொசுங்கிப்போகும்படி பெருமூச்சு வெளிபட,
இறுக மென்ற கூரிய வெண் பற்கள்
மின்னல் போல் ஒளி வீச,
மேகங்கள் இடித்து எழும் ஓசை போல
'இது யாருடைய செயல்?' என்று கர்ஜித்தான்.
3132.
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
துன்பம் மாறி
தீயிடை உகுத்த நெய்யின்
சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
நின்னை, இன்னே
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
அவர் கொய்ய?' என்றான்.
(சூர்ப்பணகை சொன்னதைக் கேட்டதும்)
அவ்வமயம்
சீற்றத்தால் எழுந்த துயரம் குறைந்தது,
நெருப்பிலே இட்ட நெய் போல,
கோபத்தின் வலிமை கூடியது,
'நீ என்ன தவறு செய்தாய்,
அவர் உன்னை இங்ஙனம் மூக்கும் காதும்
அறுத்திட்டார் ?' என்று கேட்டான்.
3147.
'அன்னவள் தன்னை நின்பால்
உய்ப்பல் என்று எடுக்கலுற்ற
என்னை, அவ் இராமன் தம்பி
இடைப் புகுந்து இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது
என் வாழ்வும்; உன்னின்
சொன்னபின் உயிரை நிப்பான் துணிந்தனென்'
என்னச் சொன்னாள்.
(சீதையின் அழகைப் புகழ்ந்து)
'அப்படிப்பட்ட அழகிய பெண்ணை
உன்னிடம் சேர்க்க, எடுத்துவர முயற்சித்தேன்.
அந்த இராமன் தம்பி இடையில் நுழைந்து
ஒளி வீசும் தன் வாளால் என் மூக்கு அறுத்தான்,
என் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
உன்னிடம் இதை சொன்ன பிறகு
உயிர் மாய்த்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன்'
என்று சொன்னாள் சூர்ப்பணகை.
3149.
கரனையும் மறந்தான்; தங்கை
மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும்
மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட
மங்கையை மறந்திலாதான்;
இராவணன்,
கரன் இறந்துப் போனதை மறந்துபோனான்,
தங்கையைக் காயம் செய்தவன் வீரம் மறந்துபோனான்;
அதனால் தனக்கு நேர்ந்த பழியை மறந்துபோனான்;
முன்பு தான் பெற்ற வரத்தை மறந்துபோனான்;
சிவபெருமானையும் வெற்றி கண்ட
மன்மதனின் மலரம்பினால்
காதால் கேட்ட மங்கையை மட்டும்
மறுக்கமுடியாதுத் தவித்தான்.
( தொடரும் )
No comments:
Post a Comment