Sunday, February 16, 2020

கம்பராமாயணம் 39


2770.
'பூவிலோன் புதல்வன் மைந்தன்
   புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன்
   தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை
   எடுத்து உலகம் மூன்றும் 
காவலோன் பின்னை; காமவல்லி ஆம்
   கன்னி' என்றாள்.

'பிரம்மனின் மகனாம்
புலத்தியரின் மகன் விச்சிரவசுவின் மகள் நான்;
திரிபுரங்களை எரித்த சிவபெருமானின் நண்பன்
சிவந்த கைகளை உடைய குபேரனின் தங்கை நான்;
எட்டுத் திசைகளில் உள்ள யானைகளைத் தோற்கடித்து
கயிலை மலையைப் பெயர்த்தெடுத்து
மூன்று உலகங்களையும் காக்கும் திறம்படைத்த
இராவணன் பின் பிறந்த தங்கை நான்;
காமவல்லி என்னும் பெயருடைய கன்னி நான்'
என்றாள் சூர்ப்பணகை.



2776.
'தாம் உறு காமத் தன்மை தாங்களே 
   உரைப்பது என்பது 
ஆம் எனல் ஆவது அன்றால் அருங் குல 
   மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன் ?
   யாரும் இல்லேன்;
காமன் ஒருவன் செய்யும் வன்மையைக் 
   காத்தி' என்றாள்.

'தாம் கொண்ட காம வேட்கையின் தன்மையை 
தாங்களே வெளிப்படையாகக் கூறுவது 
அரிய குலத்தில் பிறந்த பெண்கட்கு அரிது;
எல்லா இன்பத்தையும் தரக்கூடிய உயிரோடு 
கூடி வாழ முடியாது தினம் வருந்துவேன்;
வேறென்ன செய்ய? துணைக்கு யாருமில்லையே ?
காமனின் கணைகளிலிருந்து எனைக் காத்தருள்'
என்றாள்.




2780.
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்;
   வினை மற்று எண்ணி 
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் 
   மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் 
   துணிவிற்று அன்றால்
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் 
   வந்தேன்' என்றான்.

'எல்லோரும் பழிக்கக்கூடிய அரக்கி இவள்,
நியாய நெறியில் நில்லாதவள் இவள்;
வேறேதோ தீய வேலையாக வந்திருக்கிறாள் இவள்'
என்று எண்ணிய இராமன்,
'அழகிய பெண்ணே! சாதி மரபு முறைக்கு ஏற்றதன்று
தொன்று தொட்ட ஒழுக்க நெறிக்கு புறம்பானது,
அதுமட்டுமன்றி,
நீ அந்தண வம்சம், நான் அரச வம்சம்'
என்றான் இராமன்.




2794.
'வரும் இவள் மாயம் வல்லள்;
   வஞ்சனை அரக்கி; நெஞ்சம் 
தெரிவு இல; தேறும் தன்மை சீரியோய்!
   செவ்விது அன்றால்;
உரு இது மெய்யது அன்றால்; ஊன் 
   நுகர் வாழ்க்கையாளை 
வெருவினென்; எய்திடாமல் விலக்குதி,
   வீர!' என்றாள்.

(இராமன் அருகில் வந்து நின்ற சீதையைப் பார்த்ததும்)
உன்னிடம் வந்து நிற்கும் இப்பெண் மாயம் செய்வதில் 
வல்லவள்;
வஞ்சகத் தன்மை நிறைந்த அரக்கி ஆவாள்;
இவள் எண்ணங்கள் அறியமுடியாதவள்;
இவளை நல்லவள் என நினைப்பது,  நல்லது அன்று,
நற்பண்புகள் நிறைந்தவனே;
இவளின் இந்த உருவம் உண்மையானது அன்று;
உடலை உண்டு வாழும் இவளைக் கண்டு அஞ்சுகிறேன்;
உன்னிடம் நெருங்க விடாது இவளை விலக்கி வை, வீரனே' 
என்றாள் சூர்ப்பணகை.



2821.
விடியலின் காண்டலின், ஈண்டு தன்  
   உயிர் கண்ட வெய்யான் 
'படி இலான் மருங்கு உள்ள அளவு 
   எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து, ஒல்லைக் 
   கரந்து, அவள் காதல் 
விடிவினானுடன் வாழ்வதே 
   மதி' என மதியா,

பொழுது விடிவதைப் பார்த்தாள்,
தனக்கு இன்னும் உயிர் இருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டாள் ;
சீதை இருக்கும்வரை தன்னை இராமன் 
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான் என்று புரிந்து கொண்டாள்.
விரைவாகச் சென்று அவளைக் கடத்தி மறைத்து வைத்து,
பின் அவள் காதலனுடன் (இராமன்)கூடி வாழ்வதே சிறந்தது
என்று எண்ணினாள் - சூர்ப்பணகை.

( தொடரும் )




No comments:

Post a Comment