Saturday, February 15, 2020

கம்பராமாயணம் 38



சூர்ப்பணகைப் படலம்

2741.
வெய்யது ஒர் காரணம்
   உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ்
   வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம்
   நுழையும் நோன்மையாள்
எய்தினள், இராகவன்
   இருந்த சூழல்வாய்.

கொடியதான ஒரு காரணத்தை உள்ளத்துள் கொண்டிருந்தாள்.
அக்காட்டினில் தனியே வாழ்ந்து வந்தாள்.
உலகெங்கும் விரைவாகப் புகுந்து செல்லும் ஆற்றல் கொண்டவள்.
இராமன் தங்கியிருந்த பூஞ்சோலை பக்கம் வந்தாள்
(சூர்ப்பணகை).


2749.
'எவன் செய்ய, இனிய இவ்
   அழகை எய்தினோன்?
அவன் செயத் திரு உடம்பு
   அலச நோற்கின்றான்;
நவம் செயத்தகைய இந்
   நளின நாட்டத்தான்
தவம் செய, தவம் செய்த தவம்
  என்?' என்கின்றாள்.

'எதைப் பெறுவதற்காக,
இத்தனை அழகை அடைந்த இவன்,
வீணாக, தன் உடலை வருத்தித் தவம் செய்கின்றான்?
புதுமை பல புரியக்கூடிய
தாமரை மலர் போன்ற கண்களை உடைய இவன்,
தவம் செய்ய,
அந்தத் தவம், முன்னம் என்ன தவம் செய்திருக்குமோ?'
என்று எண்ணி வியந்தாள்.



2760.
' "எயிறுடை அரக்கி, எவ் 
      உயிரும் இட்டது ஓர் 
   வயிறுடையாள்" என  
      மறுக்கும்; ஆதலால் 
   குயில் தொடர் குதலை, ஒர் 
      கொவ்வை வாய், இள 
   மயில் தொடர் இயலி ஆய், மருவல்
    நன்று' எனா,


'கோரப்பற்களை உடைய அரக்கி,
எல்லா உயிரையும் தன் வயிற்றிலிட்டு நிரப்பிக்கொள்ளும் ஒருத்தி"
எனச் சொல்லி தனை வெறுக்கலாம் என்று எண்ணி,
'குயிலைப் போன்று கொஞ்சிப் பேசுபவளாய்,
கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயுடையவளாய்,
இளம் மயில் போன்ற உருவம் கொண்டவளாய் 
தனை வடிவமைத்துக் கொள்வது நன்று' என்று எண்ணினாள்.



2769.
'தீது இவ் வரவு ஆக, திரு! நின் 
   வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் 
   புண்ணியம்அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
   உறவு?' என்றான்.
வேத முதல்; பேதை அவள் தன் 
   நிலை விரிப்பாள்;

'உன் வருகை நல்வருகை ஆகட்டும்,
திருமகள் போன்றவளே,
செந்நிறமுடையவளே,
நீ இங்கு வந்தது ஒரு புண்ணியம் அல்லவா?
எது உன் ஊர் ? என்ன உன் பெயர்?
யார் உன் உறவினர்?' என்று கேட்டான்,
வேதங்களுக்கெல்லாம் மூலமான இராமன்,
பெண் தன் தன்மையை விளக்கிச் சொல்லலானாள்.


( தொடரும் )

No comments:

Post a Comment