Sunday, February 23, 2020

கம்பராமாயணம் 45



3253.
'எம்பிக்கும் என் அன்னைதனக்கும்
   இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லி தனக்கும்
   அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை
   தவிர்ந்தே தளர்வுற்றேன்;
கம்பிக்கும் என் நெஞ்சு அவன்
   என்றே; கவல்கின்றேன்';

'என் தம்பி சுபாகுவும் 
என் அன்னை தாடகையும்
இறக்கக் காரணம் அந்த இராம பானம் தான்.
போர் புரியும் பேராற்றல் படைத்த அவன்,
அவன் தம்பி இலக்குவன் இருவருக்கும் முன்
நான் வீரம் இல்லாதவன்;
அவனே உன் எதிரி என்பதைக் கேட்டதும் 
அச்சம் கொள்கின்றேன், கவலைப்படுகின்றேன்'
என்றான் மாரீசன்.



3259.
'யாதும் அறியாய்; உரை கொளாய்;
   இகல் இராமன்
கோதை புனையாமுன் உயிர்
   கொள்ளைபடும் அன்றே;
பேதை மதியால், 'இஃது ஓர் பெண்
   உருவம்' என்றாய்;
சீதை உருவோ? நிருதர் தீவினை
   அது அன்றோ?'

'நீ இராமனைப் பற்றி முழுதும் அறியாதவன்;
எடுத்துச் சொன்னாலும் உணர மறுப்பவன்;
இராமன் மாலை சூடி போருக்குக் கிளம்புமுன்
பகைவர் ரை சூறையாடுபவன்;
அறிவின்மையால் நீ சீதையை
பெண் என்று சொல்லிவிட்டாய்;
அவள் என்ன வெறும் பெண்ணுருவமா ?
அரக்கர்கள் இழைத்த பாவத்தின் உருவம் அன்றோ?'
 என்றான் மாரீசன்.


3266.
'மறுத்தனை எனப் பெறினும்,
   நின்னை வடி வாளால்
ஒறுத்து, மனம் உற்றது
   முடிப்பென்; ஒழிகல்லென்;
வெறுப்பான கிளத்தலுறும் இத்
   தொழிலை விட்டு என்
குறிப்பின்வழி நிற்றி, உயிர்கொண்டு
   உழலின்' என்றான்.

'நான் சொல்வதை செய்ய மறுத்தால்
என் கூர்மையான வாளால் உனை வெட்டி,
பின் நான் நினைப்பதை செய்து முடிப்பேன்.
எடுத்த முடிவை திருத்த மாட்டேன்;
நான் வெறுக்கும் அறிவுரைகளை உரைப்பதை நிறுத்து;
என் எண்ணத்தின் வழி நின்று செயல்படு;
அதுவே நீ உயிர்பிழைக்க ஏற்றது'
என்று இராவணன் உரைத்தான்.




3275.
'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது?
   இயம்புக' என்றான்,
'பொன்னின் மான் ஆகிப் புக்கு,
   பொன்னை மால் புணர்த்துக' என்ன,
'அன்னது செய்வென்' என்னா,
   மாரீசன் அமைந்து போனான்;
மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு
   ஒரு நெறியில் போனான்.

'என்ன மாயம் நான் செய்யட்டும்,
அதையும் நீயே சொல்லணும்' என்றான் மாரீசன்.
'பொன் மானாய் உருமாறி  காட்டினுள் நுழை,
பொன் போன்ற சீதை பார்க்கும்படி
உன்மேல் ஆசை கொள்ளும்படி திரி'
என்று திட்டம் தீட்டித் தந்தான் இராவணன்.
'அவ்வாறே செய்கிறேன்' என்றான் மாரிசன்.
ஒளிவீசும் வேலேந்திய இராவணன்
அங்கிருந்து அகன்று தன்வழி சென்றான்.



3284.
நெற்றிப் பிறையாள் 
   முனம் நின்றிடலும் 
முற்றிப் பொழி 
   காதலின் முந்துறுவாள் 
'பற்றித் தருக என்பென்'
   எனப் பதையா 
வெற்றிச் சிலை 
   வீரனை மேவினனால்.

இளம் பிறை போன்ற நெற்றி உடைய சீதை முன் 
பொய் பொன் மான் வந்து நின்றது.
அந்த மானைக் கண்டதும் சீதையின் நெஞ்சில் 
ஆசை வந்தது;
'இம் மானைப் பிடித்துத் தர வேண்டும்' என்று 
இராமனைக் கேட்கலாம் என்ற எண்ணம் உதித்தது.
ஆசை அவளை உந்தி,
வெற்றி வில்லை ஏந்தி நிற்கும் 
வீரன் இராமன் அருகில் கொண்டு போய் நிறுத்தியது.

( தொடரும் )

No comments:

Post a Comment