கரன் வதைப் படலம்
2878.
இருவர் மானிடர்;
தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்;
மன்மதன் மேனியர்;
தரும நீரா;
தயரதன் காதலர்;
செருவில் நேரும்
நிருதரைத் தேடுவார்;
(கரனிடம் வந்தாள், தனக்கு நேர்ந்ததைச் சொன்னாள்)
இரண்டு மனிதர்கள்,
தவ வேடத்தில் இருப்பவர்கள்;
கையில் வில்லையும் வாளையும் உடையவர்கள்;
அழகாய் இருக்கின்றார்கள்;
தருமநெறியைக் கடைபிடிப்பவர்கள்;
தயாரதனின் குமாரர்கள்;
எதிர்ப்படும் அரக்கர்களுடன் போரில் ஈடுபடுபவர்கள்
என்றாள் சூர்ப்பணகை.
2884.
'வருக தேர்!' எனும்
மாத்திரை, மாடுளோர்
இரு கை மால் வரை
ஏழினொடு ஏழ் அனார்,
ஒரு கையால் உலகு
ஏந்தும் உரத்தினார்
'தருக இப் பணி எம்வயின்
தான்' என்றார்.
'தேர் வரட்டும்' என்று கரன் சொன்னவுடன்,
அவனருகில் இருந்த,
இரண்டு கைகளுடைய பதினான்கு மலைகளைப் போன்ற,
ஒரு கையாலேயே உலகம் முழுவதையும் தாங்கும் வலிமையுடைய,
படைத் தலைவர் பதினான்கு பேரும்
'(இராம இலக்குமன ரோடு போர் புரியும்)
இப் பணியை எங்கட்குத் தந்தருளவேணும்' என்றனர்.
2894.
மரங்கள்போல் நெடு
வாளொடு தோள் விழ
உரங்களான் அடர்ந்தார்
உரவோன் விடும்
சரங்கள் ஓடின
தைக்க, அரக்கர்தம்
சிரங்கள் ஓடின;
தீயவள் ஓடினாள்;
வெட்டப்பட்ட மரங்கள் போல,
வாளோடு பெரிய தோள்களுடைய அரக்கர்கள் விழ,
மார்பின் வலிமை கொண்டு தொடர்ந்து போர் புரிய
அவ்வரக்கர்கள் எழ,
வலிமையான இராமன் எய்திய அம்புகள்
அவர்தம் தலைகளை வெட்டி வீழ்த்த,
கொடியவள் (சூர்ப்பணகை) மீண்டும் அஞ்சி ஓடினாள்.
2931.
தூரியக் குரலின், வானின்
முகிற் கணம் துணுக்கம்கொள்ள;
வார் சிலை ஒலியின் அஞ்சி
உரும் எலாம் மறுக்கம்கொள்ள;
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி
அசைவுற; அரக்கர் சேனை
போர் வனத்து இருந்த வீரர்
உறைவிடம் புக்கது அன்றே.
வாத்தியங்களின் முழக்க ஒலியில்
ஆகாயத்தின் மேகக் கூட்டம் அஞ்சி நடுங்க,
நீண்ட வில் பல எழுப்பிய நாணொலியால்
இடிகள் எல்லாம் பயந்து கலங்க,
வீரர்களின் ஆரவாரத்தால்
அலை கடல்களுக்கும் உதறல் எடுக்க,
கரனின் அரக்க சேனை,
காட்டில், போரில் வல்ல வீரர்கள்
தங்கியிருந்த இருப்பிடம் வந்தடைந்தது.
2941.
கண்டனன், கனகத் தேர்மேல்
கதிரவன் கலங்கி நீங்க
விண்டனன் நின்ற வென்றிக்
கரன் எனும் விலங்கல் தோளான்;
'மண்டு அமர் யானே செய்து, இம்
மானிடன் வலியை நீக்கி,
கொண்டனென் வாகை' என்று
படைஞரைக் குறித்துச் சொன்னான்.
பார்த்தான்,
தன் பொன்மயமான தேரின் மீதிருந்து,
கதிரவன் கலங்கி நிற்க, பகைத்து நின்று
வெற்றியையே இதுவரை பார்த்திருந்த,
மலை போன்ற தோளை உடைய
வீரன் கரன், இராமனைப் பார்த்தான்.
'நான் ஒருவனே இந்தப் போர் புரிந்து
இந்த மானிடன் வீரத்தை அழித்து
வெற்றிவாகை சூடுவேன்' என்று
தன் படைவீரர்களை நோக்கிச் சொன்னான்.
( தொடரும் )
No comments:
Post a Comment