3461.
வஞ்சியை அரக்கனும்
வல்லை கொண்டுபோய்,
செஞ்செவே திரு உருத்
தீண்ட அஞ்சுவான்,
நஞ்சு இயல் அரக்கியர்
நடுவண், ஆயிடை,
சிஞ்சுப வனத்திடை
சிறைவைத்தான் அரோ.
சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு
விரைந்து சென்றான்.
எனினும் அவள் திருவுருவை
நேராகத் தீண்ட அஞ்சினான்.
கொடிய அரக்கியர் பலரின் மத்தியில்
அசோகவனத்தினிடையில்
சிறைக் காவலில் வைத்தான்.
(இதற்கிடையில் இராம இலக்குவன் ஒருவரை ஒருவர் காண)
3469.
"'ஏகாது நிற்றிஎனின், யான் நெருப்பினிடை
வீழ்வென்' என்று முடுகா
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம்
அஞ்சி வஞ்ச வினையேன்,
போகாது இருக்கின், இறவாதிருக்கை
புணராள் எனக்கொடு உணரா
ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடு
இவண் வந்தது" என்ன, அமலன்,
( இராமனின் குரல் கேட்கிறது,
என்ன என்று நீ சீக்கிரம் போய் பார் )
'போகாது இங்கேயே நிற்பாயெனில்
நான் தீக்குள் இறங்கி மடிவேன்' என்றும் சொன்னார்கள்.
விரைவாய் கானகத்தினுள் ஓடத் தொடங்கினார்கள்.
நான் பயந்து போனேன்; வஞ்சம் நிறைந்தவன் ஆனேன்;
அங்கிருந்து நகராதிருந்தால், அன்னை தன் முடிவை
மாற்றிக்கொள்ளார் என்று உணர்ந்தேன்;
அவ்வாறு சீதை இறந்தால்
அது அறம் ஆகாது என்பதை அறிவேன்;
அதனாலேயே நான் தங்களைத் தேடி வந்தேன்'
என்று இலக்குவன் இராமனிடம் எடுத்துரைத்தான்.
3478.
'தேரின் ஆழியும் தெரிந்தனம்;
தீண்டுதல் அஞ்சிப்
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும்
பார்த்தனம்; பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பது,
உரன் இலாதவர் போல்;
தூரம் போதல்முன் தொடர்தும்'
என்று இளையவன் தொழலும்
(சீதையைக் காணாது இருவரும் திகைக்க)
'தேரின் சக்கரத் தடம் தெரிகிறது;
அன்னையைத் தீண்ட பயந்து
நிலத்தோடு பெயர்த்தெடுத்த அடையாளம் இருக்கிறது;
வலிமையில்லாதவர் போல், இது எப்படி நடந்தது என்று
எண்ணிக்கொண்டிருப்பதில் பயனில்லை;
அவர்கள் நெடுந்தூரம் போய் விடுவதற்கு முன்
தொடர்ந்திடுவோம்' என்று சொல்லி
வணங்கி நின்றான் இலக்குவன்.
3482.
'ஆகும்; அன்னதே கருமம்'
என்று அத்திசை நோக்கி
ஏகி, யோசனை இரண்டு
சென்றார்; இடை எதிர்ந்தார்,
மாக மால் வரை கால்
பொர மறிந்தது மான
பாக வீணையின் கொடி
ஒன்று கிடந்தது பார்மேல்.
(தேர் சென்ற பாதையில்
தென் திசை நோக்கிச் செல்வோம் என்று
இலக்குவன் சொல்ல)
'ஆம் அவ்வாறே செய்வோம்' என்று
இராமன் ஆமோதித்து,
இருவரும் இரண்டு யோசனை தூரம் சென்றனர்.
கொஞ்ச தூரத்தில்
மலை ஒன்று பெருங்காற்று வீசியதால்
பெயர்ந்து நிலத்தில் விழுந்தது போல்,
வீணைக்கொடி ஒன்று தரையில்,
கிழிந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர்.
( தொடரும் )