1488. 'இரு வரத்தினில், ஒன்றினால்
அரசு கொண்டு, இராமன்
பெரு வனத்திடை ஏழ் - இரு
பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி, ஒன்றினால்;
செழு நிலம் எல்லாம்
ஒருவழிப்படும் உன் மகற்கு
உபாயம் ஈது' என்றாள்.
(சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தில்
தசரதனுக்கு தேரோட்டி அவனைக் காத்ததால்
இரண்டு வரம் தந்தானல்லவா)
'அந்த இரண்டு வரங்களைக் கேள்,
அவற்றை இப்போது தரச் சொல்,
ஒரு வரத்தால், அரசுரிமை கொள்,
பரதனை சிம்மாசனத்தில் அமர்த்து.
இன்னொரு வரத்தால் இராமனை
ஏழு இரண்டு வருடங்கள் காட்டுக்கு அனுப்பு.
இங்கிருந்து கிள ப்பி எங்கோ திரியச் செய்.
அதற்குள் இந்த செழிப்பான நிலமெல்லாம்
உன் மகன் வசப்படும்,
இதுவே உபாயம்' என்றாள் கூனி.
கைகேயி சூழ்வினைப் படலம்
1493. தா இல் மா மணிக் கலன் மற்றும்
தனித் தனி சிதறி,
நாவி ஓதியை நானிலம்
தைவரப் பரப்பி
காவி உண் கண் அஞ்சனம்
கான்றிடக் கலுழா
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப்
புவிமிசைப் புரண்டாள்.
நல்ல தரமான மணிகளால் ஆன அணிகலன்களை
வேறு வேறாக பிய்த்து சிதைத்து எறிந்தாள்.
நல்ல நெய் பூசி அலங்கரிக்கப்பட்ட கூந்தலை
விரித்து தரையில் புரளுமாறு பரப்பிக்கொண்டாள்.
நீலமலர் போன்ற வசீகரிக்கும் கண்களிலிருந்து
மை கரையும்படி சிந்தும்படி அழுதபடிக் கிடந்தாள்.
மலர்களை எல்லாம் இழந்துவிட்ட ஒரு குச்சி போல்
தரையில் விழுந்து புரண்டாள்.
1498. நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி
மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;
ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.
மணம் கமழும் மலர்மாலை அணிந்த மன்னவனின்
உயிருக்கு உயிரான கைகேயி,
தன் எண்ணத்தில் உறுதியாய் இருந்தாள்.
தொட நெருங்கிய கையைத் தடுத்தாள்.
மின்னற்கொடி துவண்டு வீழ்தல் போல் தரையில் வீழ்ந்தாள்.
வேறெதுவும் சொல்லாது, பெருமூச்சு விடத் தொடங்கினாள்.
1505. நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.
பாம்பு போன்ற கைகேயி நாக்கிலிருந்து வந்த
விடம் போன்ற வரங்கள் தனைப் பற்றிக்கொள்ள
உடல் நடுங்கி, வெந்து சோர்ந்து
நஞ்சுடைய நாகம் கடித்த யானை போல
தரையில் விழுந்தான்.
( தொடரும் )