Wednesday, July 20, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 6,7,8

   மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
   முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்,
   மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து, என்னைக்
   கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

மங்கள வாத்தியங்கள்
ஒலி எழுப்ப,
சங்கு முழங்க,
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட
பந்தல் கீழ்,
மதுசூதனன் என்
உள்ளங்கை பற்றக்
கனாக் கண்டேன் தோழி.

   வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
   பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்துக்,
   காய்சின மாகளி றன்னானென்கைப் பற்றித்,
   தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்.

நன்மக்கள் மந்திரம்
நயமுடன் சொல்ல,
நன்றாய் அக்னியை வளர்க்க
மரக்கட்டைகளை
அதன் மேல் வைப்பதாயும்,
கண்ணன் கோபக் கொண்ட
களிறு போலருகே வந்து, என்
கை பற்றி தீயை வலம் வருவதாயும்,
கனாக் கண்டேன் தோழி.


   இம்மைக்கும் மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
   நம்மை யுடையவன் நாரய ணன்நம்பி,
   செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
   அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

இந்தப் பிறவியிலும்,
இனி எல்லாப் பிறவியிலும்,
நமைக் காக்கும்
நம் நாராயணன் தன்
சிவந்தத் திருக்கரத்தால்
என் கால் பற்றி
அம்மி மேல் வைக்கக்
கனாக் கண்டேன் தோழி.

No comments:

Post a Comment