Monday, July 11, 2011

திருவெம்பாவை - மாணிக்க வாசகர் 2/3

"முத்துப் போன்ற
பல்லுடையவளே,
இன்னும் நீ விழிக்காது
இருப்பதேனோ ?"
"கிளியாய்க்
கொஞ்சிப் பேசும்
எம் தோழியர்
எல்லாரும் வந்தாச்சோ ?"
"எண்ணிச் சொல்வோம் இக்கணமே,
எனினும் அதுவரையில் நீ
கண் மூடிக் கிடந்து
காலம் போக்குவது வீணே,
தேவர்கட்கு
ஒப்பில்லா அமுதம் தந்தவனை,
எல்லா வேதத்திற்கும் விழுதானவனைக்,
கண்ணுக்கு இனியக்
காட்சி தருபவனைப்
புகழ்ந்துப் பாடிக்
கசிந்துருகையில்
வேறேதும் பேசமாட்டோம்,
நீயே வந்து
எண்ணிக்கொள்வாய்,
எண்ணிக்கை குறைவெனில்
மீண்டும் உறங்கச் செல்வாய்".

திருமாலும்
நான்முகனும்
அறியமுடியா
திருமுடியையும்,
திருவடியையுமுடைய
அண்ணாமலையானை
நானறிவேனென்று
தேன்போல் பொய்பேசும்
வாயுடைய வஞ்சகியே,
வாயிற்கதவு திறவாயோ ?
இவ் உலகத்தினரும்,
வானுலகத்தினரும்
அறிவதற்கு அருமையான
அவனது அழகை,
நம் குற்றங்களை மன்னித்து
நமக்கு அருளளிக்கும் அவன்
பெருங்குணத்தைப் பாடி
சிவனே சிவனே என்று
அவனையே சிந்தித்திருப்பவர்களை
நீ அறியாயோ ?
துயில் நீங்காதிருக்காயே
இன்னும்,
இதுதானா நீண்ட கூந்தலுடைய
பெண்ணே உன் தன்மை ?
சொல்வாய்.

No comments:

Post a Comment