Wednesday, July 20, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 3,4,5

   இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
   வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து
   மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை,
   அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீநான்

இந்திரனும் மற்ற தேவர்களும்
வந்திருந்து என்னை
நாராயணனுக்கு
மணமுடிக்கப் பேசுவதாயும்,
மறைவாய் நடக்கும்
பேச்சு வார்த்தைகள்
நடப்பதாயும்,
கிருஷ்ணனின் தங்கை
துர்க்கை
எனக்கு
கூரைப் புடவை உடுத்த
உதவி செய்வதாயும்,
வாச மலர்கள் பல
மாலையாகச் சூட்டி
என்னை
அலங்கரிப்பதாயும்
கனாக் கண்டேன் தோழி.


   நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கிப்,
   பார்ப்பனச் சிட்டர்கள் பல்லா ரெடுத்தேத்திப்
   பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னைக்,
   காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

எல்லாத் திசைகளிலுமிருந்து
புனித நீர் கொணர்ந்திருப்பதாயும்,
பெரியோர்கள் மந்திரம் சொல்லி அதையென்
தலையில் தெளித்து ஆசிர்வதிப்பதாயும்,
அழகான மாலை
அணிந்து
அரங்கநாதன் - என்
அருகில் புனிதனாய் மடியோடு நிற்பதாயும்,
எங்கள் கரங்களில் காப்பு கட்டப்பட்டு
இருப்பதாயும்
கனாக் கண்டேன் தோழி.


   கதிரொளி தீபம் கலச முடனேந்திச்,
   சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர் கொள்ள,
   மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
   அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான்

இள மங்கையர்
பலர்
பகலவன் ஒளியாய்ப்
பிரகாசிக்கும் தீமமேந்தி,
தங்கக் கலசமேந்தி
வருவதாயும்,
மதுரை ஆள்
மன்னன் அடிதொட்டு
வணங்கி வரவேற்பதாயும்,
புவி அதிர
அவன் உள்புகுவதாயும்
கனாக் கண்டேன் தோழி.

No comments:

Post a Comment