மார்கழி மாதம்,
பௌர்ணமி புலர்ந்த 
புதிய தினம்.
நீராடச் செல்வோம், வருவீரோ
அணிகலன் பல
அணிந்த,
ஆயர்பாடியில் வாழும் 
அன்புத் தோழியரே ?
கூர்வேல் கொண்டு
தொழில் செய்யுமந்த,
நந்தகோபாலன்
குமரன், 
யசோதையின் 
இளஞ்சிங்கம், 
கருமுகில் நிற
மேனியன், 
அழகான கண்ணுடையவன்,
சூரிய ஒளி போன்று 
பிரகாசிக்கும் 
முகமுடையவன்,
நம் எல்லா விருப்பங்களையும்
நிறைவேற்றும் 
அந்த நாராயணன்
புகழ் பாடியும்
கேட்டும்
நினைத்தும் 
கிடப்போமே,
வாராய் !!!
உலகத்தில் நல்
வாழ்வு வாழ்வோரே, 
எம் இறைவனுக்கு
நாங்கள் செய்யும் 
பணிவிடைகள் 
கேளாய்;
அதிகாலை குளித்து
பாற்கடலில் 
பள்ளி கொண்டுள்ள
பரமனைப் பாடி;
நெய் தொடாது,
பால் பருகாது,
கண்ணில் மை தீட்டாது 
மலர் சூடாது 
செய்யக்கூடாத எதையும்
செய்யாது,
பிறர் மேல் 
பழி சொல்லாது,
தேவையற்ற விவாதம் 
துறந்து,
நாலு பேருக்கு உதவி, 
அன்னமிட்டு
நல்ல வழி
உணர்ந்து
ஆராய்ந்து
வாழ்வோமே, 
வாராய் !!!
உயர்ந்து 
உலகை அளந்த 
உத்தமன் புகழ் பாடி,
நித்தம் நீராடி 
நம் இறைவனை 
துதித்திருந்தால் 
எந்தக் குறையுமின்றி
எல்லா மாதமும் 
மழை பொழிந்து, 
செந்நெல் வயல்கள்
உயர்ந்து வளர,
மீன்கள் துள்ளிக் குதித்து
விளையாட,
மலர்கள் தோறும்
வண்டுகள் தேன் ரசித்துக்
குடித்து பாடி வலம்வர, 
பசுக்களின் காம்புகள் 
பால் நிரம்பி வழிய, 
நீங்கா செல்வம்
நிறைந்திருக்குமே
எந்நாளும்,
இதை எண்ணத்தில்
கொள்வாய் !!!
No comments:
Post a Comment