Thursday, July 28, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 10 part 1

தந்திரக்காரக் கண்ணன் - part 1

அந்தி வேளையில்,
அழகான முகத்துடன்
அமர்ந்திருக்கும் ராதையிடம்
ஆவலோடு வந்தான்
ஆயர்ப்பாடிக் கண்ணன்.
'என்ன செய்ய நான் இப்போ'
எனக் கண்ணாலே கேட்டாள்,
கோபம் கொஞ்சம் கூடக்
குறையாத
கோதை ராதை, தோழியிடம்;
ராதையின் வேதனை
கலந்த கோபத்தைக்
கண்ட கண்ணன் தன்
ஆவலை அடக்கிக்கொண்டு
அமைதியாய்
இதமாய்ப்
பேசத் தொடங்கினான்;

அன்பே,
தாமரை போன்றுன்
திருமுகத்தைத்
தரிசிக்க எனக்கருள்வாயா ?
செவ்வாய் திறந்து
சொல்லேன் ஏதாவது;
நல்லதோ கெட்டதோ
எதுவாயினும் சரி;
சொல்லிடு சகி;
பிரகாசிக்கும் உன்
பல்லிலிருந்து
புறப்படும் ஒளி
கருத்து இருக்குமென்னைக்
கவர்கிறது;
காதலியே,
குயிலைப் போன்றுன்
குரலைக் கேட்க ஆசை;
அழகான உன் முகத்தில்
அமைந்துள்ள
அதரத்தில்
அமுதருந்த
ஆசை;
அன்பே,
எல்லாவற்றுக்கும் நானே காரணம்
என்ற உன் கோபத்தைத் தூர
எறி;
காதல் நெஞ்சம்
கனலாய்க்
கொதிக்கிறது
காப்பாற்றிடு;

அருகருகே பற்கள்
அழகாய் அமைந்த என்
அன்பே, உன்
கோபம் இன்னும்
குறையாதிருந்திடின்
உன் நீண்ட
விரல் நகங்களால் என்
உடலைக் காயப்படுத்திடு - இல்லை
உன் வளைகரங்கள் கொண்டு எனைக்
கட்டிப்பிடித்திடு;
பல்லால் கடித்துக் கிழி
என்னை, அப்படியுமில்லை எனில்
எப்படிச் செய்தால் மகிழ்ந்து,
எல்லாம் மறந்து,
என்னோடு நீ இணங்கி இருப்பாயோ
அதைச் செய்;
எது எப்படியோ
என் அன்பே,
எல்லாவற்றுக்கும் நானே காரணம்
என்ற உன் கோபத்தைத் தூர
எறி;

No comments:

Post a Comment