Thursday, November 28, 2013

தெய்வத் திருநாமம்

பொருள் மேல் பித்தாகிப்
பொருளில்லா ஒரு பெயரைத் தன் பிள்ளைக்கு இட்டு
பின் புலம்பும் பேதை மனிதர்களே,
கேசவா’ என்று திருநாமமிட்டு அழையுங்கள்.
கெட்ட சொல் ஏதும் சூழாது அவன் காப்பான் நம்பிடுங்கள்;

ஆடைக்கும்
ஆரோ தரும் அணிகலன்களுக்கும் ஆசைப்பட்டு
அவன் நாமம் மறந்து, தன் சிறார்க்குப் பேரிட்டு, பின்னர்
அவதியுறும் அறிஞர்களே,
சிரீதரா’ என்றழைத்துச் சீராட்டுங்கள்.
சிக்கல் ஏதுமண்டாது அவன் காப்பான் நம்பிடுங்கள்;

உயிர் வாழப் பொருள் தருவோர்
உடன் உரைத்த வார்த்தையே பெயராய்ப் பொறித்து
உய்ய எண்ணும் உயர்ந்தோரே,
இறைவன் திருநாமமே
இன்னலைத் தீர்க்கும் என்றேனோ எண்ணாமல்
இன்று வரைத் திரிகிறீர் ?

மனிதனாய்
மண்ணுலகில் வாழ்ந்து
மடியப் பிறந்த மக்களுக்கு,
மனிதப் பெயரிட்டு அழைத்தால்
மறு பிறவியிலும் அவதியுற நேரிடும்.
மாதவா’ என்றே பெயரிட்டழைத்தால்
நாராயணன் நல்வழி நடத்திடுவான் நம்புங்கள்;

அசுத்தம் நிறைந்த
அழுக்கு உடலோடு
அவதரித்து அவதியுறப்போகும் அப்பிள்ளைக்கு,
அசுத்தம் நிறைந்த
அழுக்கு உடலோடு
அவதியுறும் ஒருவர் பெயரிட்டால்
அடுக்குமா ?
அக்குழந்தையை ‘கோவிந்தா’ என்றே திருநாமமிட்டு
அழையுங்கள்;
அனைவரையும் காத்திடுவான்,
அரங்கன் வழி நடந்திடுவான்;

தவம் செய்துப் பெற்ற பிள்ளைக்குத்
தரணி வாழ் தலைவர் பெயரிட்டால்
‘தப்பு செய்தோம்’ என வருந்த நேரிடுமே;
தாமோதரா’ என்றே
திருநாமமிட்டு அழைத்திட்டால், நம்
துயர் எல்லாம் துடைத்திடுவானே;

கண்ணுக்கு கண்ணாய்க் காத்துப் பெற்ற பிள்ளையை
மண்ணுக்குள் போகும் மனிதப் பெயரிட்டால்,
விண்ணைத் தாண்டிப் போகாது, மண்ணுள் மீண்டும் பிறப்பரே;
அதை விடுத்து, கார்முகில் வண்ணன் 'கண்ணன்' பெயரிட்டால்,
முன்னால் நின்றுக் காத்திடுவான், இது நிஜம்தானே;

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் எரியட்டுமே
காரிருள் எல்லாம் மறையட்டுமே
அண்ணாமலையார் அருள் கிடைக்கட்டுமே
ஆனந்த வாழ்வு நிலைக்கட்டுமே.

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, November 15, 2013

சந்திரசேகராஷ்டகம்



சந்திரசேகரா, உன்னைச்
சரணடைந்தேன்;

சந்திரனைத் தலையிலும்,
செந்தழலைக் கையிலும் கொண்டவனே,
சொக்கத் தங்கம் போல்
ஜொலிக்கும் கைலாய மலையில் காட்சித் தருபவனே,
சங்கடம் அழித்து
சந்தோஷம் அளிக்கும்
சங்கரனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

தாமரை மலர் போன்ற
பாதங்களை உடையவனே,
வாசனை நிரம்பிய மலர்களைக் கொண்டு
பூஜிக்கப்படுபவனே,
நெற்றிக் கண்ணால் காமனை எறித்தவனே,
சாம்பலைத் தன் உடலெங்கும் பூசிக்கொள்பவனே,
அழிவில்லாதவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

பாகன் எனும் அரக்கனின்
பார்வையைப் பறித்தவனே,
பாம்புகளையே நகைகளாய் தரித்தவனே,
பார்வதி தேவி வலது பக்கம் அலங்கரிக்க அர்தநாரியாய் அருள்பவனே, பாயசமாய் விடத்தைப் பருகியவனே, தன்
பக்கத்தில் திருசூலத்தைச் சொருகியவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

நாரதராலும் மற்ற முனிவர்களாலும் புகலப்படுபவனே,
மூவுலகையும் காப்பவனே,
அந்தகாசுரனை அழித்தவனே,
அடியவர் கேட்பதை அளித்து
ஆனந்தத்தில் ஆள்த்துபவனே,
எமனை ஏதும் செய்ய முடியாது செய்தவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

கவலைகளைக் களைபவனே,
ஆபத்துச் சமயத்தில் அபயம் அளிப்பவனே,
ஆணவத்தால் ஆடிய தக்ஷனை
அழித்தவனே,
பாவங்கள் பற்றாது பார்த்துக்கொள்பவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

பக்தர்களின் புதையலே,
எல்லாவற்றிலும் முதலே,
அடையமுடியாதவைகளுக்கும் அப்பாற்ப்பட்டவனே,
எப்பாடுபட்டும் எவராலும்
புரிந்துகொள்ள முடியாப் புதிராய் நிற்பவனே,
புனிதமே,
ஐம்பூதங்களும் அடிபணியும் ஐயனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

மூவுலகையும் படைத்துக் காத்து, அழித்தாள்பவனே,
எல்லாவற்றிலும் எல்லாக் காலமும் நின்று ஆட்டிவைப்பவனே,
எதற்கும் மூலமானவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

Sunday, September 29, 2013

பரவால்லே ...

எட்டாம்பு படிக்கும் போது
எனக்கெட்டா சுவத்துல
எக்கி எக்கி ஒன்னப் பாத்த
என்னைப் பாத்து சிரிச்சே,

மறந்திருப்பே பரவால்லே;

பத்தாவது பரீட்சை
பாத்து எழுது, யாரையு
பாக்காம எழுதுன்னு ரைமிங்கா பேசுனே,

அத விடு;

பதினொன்னு இந்தப்
பள்ளின்னு சேதி சொல்லி அனுப்புனே,
இப்போ இல்லேன்னு சொல்லுவே,

பரவால்லே புள்ளே;

பன்னண்டாவது
பரீட்சைக்கு முன்னே நம்ப
பட்டாளமே படத்துக்குப் போனோ, அப்போ
எம்பக்கம் வந்து உக்காந்தே,
என் கைய எடுத்து
உன் கை மேல வெச்சிக்கிட்டே,
தெரியாம நீ வெச்சிருப்பென்னு
சும்மா இருந்திருப்பேன்னு இப்போ சொல்லுவே,

பரவால்லே, விட்டுத் தள்ளு;

ஒங்கக்கா கல்யாணத்துக்கு வந்த என்னை
கவனி கவனின்னு கவனிச்சே,
கல்யானத்துக் வந்தவங்கள அப்படித்தா கவனிக்கனும்னு
இப்போ சொல்லுவே,

பரவால்லே;

வேலை விசயமா
வெளியூரு போறேன்னு சொன்னப்போ,
கண்ணு கலங்க ‘எப்போ வருவே’ன்னு கேட்டே,
வெங்காயம் நறுக்குனே, கண்ணுல தண்ணின்னு இப்போ
வெட்டி விளக்கம் சொல்லுவே,

இட்ஸ் ஓகே;

உன் கல்யாணப் பத்திரிகை
ஊருக்கெல்லா குடுக்குப்போது
எனக்கு குடுத்திருக்கலாமே,
தனியா சந்திச்சி
தர்றது ஏன்னு மட்டு சொல்லிட்டு
தாலி கட்டிக்கோ, யாருக்கு வேன்னாலு
தாரமாகி நின்னுக்கோ.

Monday, September 23, 2013

ஆடை

சிவப்பாடை அணிந்து வந்து எனைச்
சித்ரவதை செய்கிறாள்;

பச்சை ஆடையில் பாவை எனைப்
பார்த்து பரிகசிக்கிறாள்;

நீல நிறத்தில் என் முன் நின்று தன்
நயனங்களால் நலம் கேட்கிறாள்;

கருப்பாடை கன்னியின்
கவர்ச்சியைக் கூட்டுகிறது;

வெள்ளை நிறத்தில் தேவதை ஒன்று
விழியின் முன்னே மிதக்கிறதே;

ஆடை ...
அணிந்தாலும் அவஸ்தை,
அணியாது நின்றாலும் அவஸ்தை;

Saturday, August 31, 2013

எவ்ளோ பண்ணலா ?

தலை வாரிக்கலா,
கூந்தல் கிளீனிங்,
நெயில் பாலிஷ்,
துணி காயப்போடலா,
காஞ்ச துணிய மடிக்கலா,
போன் பேசலா,
அரட்டை அடிக்கலா,
டீ குடிக்கலா,
எவ்ளோ இருக்கு,
இத்தனையு உட்டுட்டு
ஜன்னல் வழியா
நா பாக்கறத பாத்துட்டு
உள்ளே ஓடி கண்ணாடிக் கதவை மூடி
ஸ்க்ரீன் இழுத்து விடறது நல்லாயில்லே
சொல்லிட்டே;

என் தவறா ?

உன் கனவில் நான் வந்தால்
அது என் தவறா ?

உணவில்லாதத் தட்டில் நீ உண்ணத் தொடங்கினால்
அது என் தவறா ?

உறக்கத்தில் என் பெயர் சொல்லி நீ உளறினால்
அது என் தவறா ?

'அவ ... அதானே' என்றுன் தோழி கேட்டால்
அது என் தவறா ?

என் எல்லாமே உனக்குப் பிடித்திருந்தால்
அது என் தவறா ?

Thursday, August 8, 2013

தோழி

மழை தரும் கருமேகம் 
வெயில் வரையும் நிழலோவியம் 
கானமிசைக்கும் கருங்குருவி 
ஆதவன் நுழையா அடவி,
நிலவு வரும் இரவு, 
இரவு தரும் கனவு,
....
எனக்குப் பிடித்த 
இவை எல்லாம் கருப்பு தான் ...
என்னுயிர்த் தோழி, உன்னைப் போலவே;

Saturday, July 13, 2013

ஐயோ ஐயோ

நாங்கள் 500,600 sqft வீடு தேடுகையில்
நீயோ 2500 sqft வீடு கட்டினாய்.

நாங்கள் மதுரை சேலம் கோவை என்று பயணித்தால்
நீயோ கனடா கலிபோர்னியா என்று பயணித்தாய்.

நாங்கள் 10000,12000 சம்பளம் தேட
நீயோ 55000 கையில் பெற்றாய்.

நாங்கள் தலைவலி சளி இருமல் என்று திண்டாட
நீயோ ... ஐயோ ஐயோ;

Thursday, July 4, 2013

ஆண்கள் பலவிதம்

நீ பேசினால் குயில் கூவுகிறதென்பான்.

சிரித்தாலோ மின்னல் என்பான்,
முத்துச் சிதறல் என்பான்.

நடந்தாலே 
நாட்டியம் என்பான்.
நாட்டியமாடினால் 
நவரசம் அற்புதம் என்று புகழுரைப்பான்.

கவிதை சொல்லவா என்பான் 
உன்பெயர் மட்டும் சொல்லி 
எப்படி இருந்ததென்பான்?

அழகான ஆடை தேர்ந்தெடுத்து 
அணிகிறாயா இல்லை நீ 
அணிவதால் எல்லா 
ஆடையும் 
அழகாய் இருக்கிறதா என ஒன்றும் 
அறியாதவன் போல் கேட்பான்.

கண்ணாலே பேசும் உனக்கு 
வாய் எதற்கு என்பான்.

கர்ணப் பரம்பரை போல் நீ 
காணும் பொழுது மட்டும் 
தானம் தருமம் செய்வான்.
கண்ணைக் கொஞ்சம் நீ திருப்பினால் 
தான் தந்ததையும் சேர்த்துப்  
பிடுங்கிக் கொள்வான்.

அருகிலிருக்கும்போதே கண்களை 
அலைபாயவிடுவான்.
அதற்குக் காரணம் கேட்டால் உன்னைவிட 
அழகு யாரேனும் இருக்கிறார்களா என்று 
ஆராய்ந்ததாய் 
அளப்பான்

கோவிலில் இருந்து வந்தேன் என்பான்.
அங்கே தேங்காய் பொறுக்கியதைச்  
சொல்லாமல் விட்டுவிடுவான்.

உன் மொக்கைப் பேச்சுக்கெல்லாம் 
தொப்பை குலுங்கச் சிரிப்பான்.

சீண்டுவான் சிரிக்கவைப்பான்
நோண்டுவான் நெளியவைப்பான் 

ஆண்கள் பலவிதம்.
அவர்களுள் ஒருவன் உன்னிடம்.

Wednesday, June 19, 2013

திருவாசகம் - ஆசை பத்து

திருவடி காட்டி எனை ஆட்கொண்டத்
தலைவா,
அறியாமை அகற்றி
வா என்றெனை
உன்னோடழைத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன், இறைவா.
      நரம்பு மூளை தோல் இவற்றாலான
இவ்வுடம்பை விட்டு விலகி, ஐயனே
என்னைத் தங்களோடழைத்துக்கொள்ள
தயை புரிய வேணும் என்று
ஆசைப்பட்டேன், ஹரனே


சீல் வழிய, ஆசை ஈக்கள் மொய்த்து
அழியும் இவ்வுடல் நீங்கி, சங்கரா
'ஐயோ' என்று நீ இரங்கி
அன்போடென்னை உன்னோடு
அழைத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன், சர்வேஸ்வரா.
      உடம்பும் என்னோடு தொடர்ந்து
வருகுதே, எனை
உன்னோடு இணைய விடாது
தடுக்குதே
உமைபாகா,
உன்னை வணங்குகிறேன்,
மனமுருக வேண்டுகிறேன்;
உன் திருவடி அடையவே
ஆசைப்பட்டேன், உருத்ராட்சா;


உடம்போடு ஒட்டாது
தனித்திருந்தேன், உமையோனே
உன்னால் ஆட்கொள்ளத்
தகுந்தவன் என்று
கண்டோர் எல்லாம் சொல்ல
ஆசைப்பட்டேன், சடையோனே.
      இளைத்தேன், இனி
இங்கிருக்க விரும்பிலேன்;
இந்தப் பொய்யான வாழ்க்கையிலிருந்து
என்னை விடுவிக்க வேண்டும், அத்தா;
உன் முக ஒளியையும்
திருப் புன்னகையையும் காண
ஆசைப்பட்டேன், முத்தா;


மண்ணுலகத்தாரும்
விண்ணுலகத்தாரும்
வழிபட்டுப் போற்றும் வரதா,
முக்தி அளித்து
ஆட்கொள்ளும் விஸ்வேஸ்வரா,
உன் திருப்பெயர் அனைத்தும்
உச்சரித்து வழிபட
ஆசைப்பட்டேன், விருடவாகனா;
      ஆராவமுதா,
உன் திருவடிகளைக்
கையால் தடவி,
தலையில் ஏந்தி
உன் புகழ் பாடி
தீயைச் சேர்ந்த மெழுகாய் உருக
ஆசைப்பட்டேன்,
ஆலகண்டா;

குறை பல நிறைந்த
இவ்வுடலை விடுத்து, சிவனே,
உன் இடம் சேர,
உன் பார்வை ஒளியில் பரவசமடைய,
உன் அடியார் கூட்டத்துள் இணைய
ஆசைப்பட்டேன், சங்கரனே;
      மாதரது
மாய வலையில்
மாட்டி நான் அவதியுற்றேன்,
மகேஸ்வரா, உன் திருவாய்
மலர்ந்து 'அஞ்சேல்' என்று கூற
ஆசைப்பட்டேன், மகாதேவா.

Wednesday, June 12, 2013

சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம்



      நாகங்களே நகையாய்,
நெற்றியில் ஒரு கண்ணோடு,
உடலெங்கும் திருநீறு பூசி
எல்லோரையும் ஆள்பவனாய்
என்றும் எளியவனாய்
எங்கட்கு அருள்பாலிக்கும் பரமேஸ்வரா
உன் பாதம் பணிகிறேன்;

      மந்தாகினி நீரினால் அபிஷேகம், ஆராதனை,
மந்தாரை மலரால் ஆனந்த அர்ச்சனை
சந்தனப் பூச்சு இவற்றால் ஜொலிக்கும் எங்கள் தேவா,
நந்தி தேவர் மற்றும் பலருக்குத் தலைவா,
உன் பாதம் பணிகிறேன்;

சி       சிவந்த ரூபிணி பார்வதியின் பதியே,
தக்ஷனின் கர்வம் அழித்த மகாநிதியே,
நல்லோரைக் காக்க நஞ்சுண்ட
நீலகண்டா,
விடையே கொடியாய்க் கொண்ட
விருடவாகனா,
உன் பாதம் பணிகிறேன்;

வா       வசிட்டர் அகத்தியர் ஆகியோர்
வணங்கிய தேவா,
தேவர்கள் வணங்கும்
திருலோச்சனா,
சூரிய சந்திர நெருப்பை
முக்கண்ணாய்க் கொண்ட
முக்கண்ணா,
உன் பாதம் பணிகிறேன்;

      யக்ஷ சொருபனாய்*,
ஜடாமுடி தரித்தவனாய்
பினாக வில்லை ஏந்தியவனாய்
என்றும் எங்களைக் காப்பவனாய் விளங்கும்
திகம்பரா
உன் பாதம் பணிகிறேன்;

-------------------------------------------------------------------------
* - மரம் செடி கொடி இடையே வாழ்பவர்

Friday, June 7, 2013

லிங்காஷ்டகம்

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிகிறேன்.
தேவர்களின் தேவனே,
புனிதங்களின் புனிதனே,
பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே,
பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே,
உன்னை வணங்குகிறேன்.

     
      முனிவர்களால்
முக்காலமும் பூஜிக்கப்படுபவனே,
காமனை எரித்தவனே - ராவணனின்
கர்வம் அழித்தவனே,
துன்பம் நேர்கையிலெல்லாம்
துணை நின்று
துயர் துடைப்பவனே,
தூயவனே உன்னை வணங்குகிறேன்.

வாசம் மிக்க மலர்களால்
நேசம் கொண்டு அர்ச்சிக்கப்படுவோனே,
நாடி வந்தோரின்
வாழ்வு கூட வைப்போனே,
சித்தர்களும் அசுரர்களும்
சிரம் தாழ்த்தி வணங்கப்படுவோனே,
சங்கரனே உன்னை வணங்குகிறேன்.

     
      உயர்ந்த பல ஆபரணங்களால்
அலங்கரிக்கப் படினும்,
நாகங்களை நகையாய்
அணிந்திருப்போனே,
தக்ஷனின் யாகம் அழித்தோனே,
தயாளனே உன்னை வணங்குகிறேன்.

சந்தனம் தடவி,
குங்குமம் இட்டு,
தாமரை மலர்களால் மாலை சூட்டி,
எங்கள் பாவங்களைப் போக்கும்
பார்வதி மணாளா,
உன்னை வணங்குகிறேன்.

     
      தேவர்கள்
வாழ்த்தி வணங்கி வழிபட
வரம் பல தரும் விமலா,
ஆயிரம் ஆயிரம்
ஆதவனுக்கு நிகராய்
பேரொளி வீசி
பிரகாசிக்கும் பரமா,
உன்னை வணங்குகிறேன்.

எட்டு மலரிதழ் இடையே அமர்ந்து,
நல்லது நிலைக்கவும்
தீயது அழியவும்
அருள் புரியும் பிரணவா
உன்னை வணங்குகிறேன்.

     
      உன் அடிபணிந்து தேவர்களின் ஆசான் நிற்க
உனை மலர் தூவி மற்றெல்லோரும் அர்ச்சிக்க
உயர்ந்தவனும்,
வலியவனுமான
வரதா
உன்னை வணங்குகிறேன்.

Friday, May 31, 2013

திருவாசகம் - ஆனந்த மாலை

பரமேஸ்வரா - உன்
பாதம் பணிந்தவர் இன்னொரு
பிறவி இல்லாத
பாக்கியம் பெற்றனர்.

பூவால் உனை அர்ச்சித்தோர்
பூலோகம் நீங்கி
தேவலோகத்தில்
தேவர்களோடு தேவர்களாயினர்.

கல் நெஞ்சன் நான்,
செய்ததெல்லாம் பாவம் தான் - உமையோனே
உன் துணை கிட்டினால்
போகும் என் துயரம் தான்.

அரிதர்க்கரிய பிறவி தந்தாய்.
அறியாமல் கெட்டேன் நான், இறைவா .
அடியார் எவரோடும் சேராமல்
ஆளானேன் கொடிய நோய்க் இரையாய்.

ஒழுக்கம் இல்லாமல்
விருப்பம் போல் ஆடிக்கிடந்தேன்.
அன்போடெனைக் காக்கும் எம்பெருமானே,
உன்னடி நான் சேர்வது எந்நாளோ ?

தாயாய் இருந்து எனை வளர்த்தவனே
நாயாய் உன் காலடியில்
நான் கிடக்கேன்,
அடிமையாய் எனைக் கருதாது - உன்
அடியவன் ஆக்கி
அருள்தருவாய், ஐயனே.

கெட்டவன் நான் - நீயும்
கை விட்டால் காப்பது யார் ?
அஞ்சேல் என்றாறுதல்
சொல்வார் யார் ?
எனைக் காப்பதுன் கடமையன்றோ.
காக்க நீ வரணும் இன்றே.

நரியைப் பரியாக்கி
நாடகம்  நடத்திய
நாயகனே, நல்லொளியே,
நான் செய்வதறியாது  திகைக்கிறேன்
நல்வழிப்படுத்திக் காப்பாற்று
நீ.

Saturday, May 11, 2013

திருப்பட்டூர்

தேதி: 6-May -2013


ஸ்தலப் பாடல்

ஆரூர் மூலட்டானம் ஆனை காவும்
   ஆக்கூரில் தான்தோன்றி மாடமாவூர்
பேரூர் பிரம்மபுரம் பேராவூரும்
   பெருந்துறை காம்பிலி திருபீடவூர் பேணும்
 கூரார் குறுக்கை வீரட்டானமும்
   கோட்டூர் குடமுக்கு சோழம்மும்
காரார் கழுக்குன்றும் காணப்பேரும்
   கயிலாய நாதனையே காணலாமே

                                                  - அப்பர்


Seen in the foto below, My kid & my brother's kid.


The beautiful entrance to the Shiva temple.


Another foto of the temple entrance.


This is the Shiva temple at Thiruppattur. There's a Brahma temple which is famous @ Thirupattur. The Ishwar at this temple is called Brahmapureeswar.

Thursday, March 7, 2013

Happy International women's day


................
ஆமா புஷ் ன்னா புல் லுவோ
புல் லுனா புஷ் சுவோ
................
சாவி  போடாம வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோ
நீங்க டெக்னாலஜி யா இம்ப்ருவ் பண்ணணு சார்
................
அவசரம் டிவி ஆன் பண்ணாம ரிமோட் வொர்க் பண்ணலேன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவோ
நீங்க  டிவி ஆன் பண்ணிட்டு போங்கப்பா
................
எங்களுக்கு புடிச்ச ட்ரெஸ் போட்டுக்கக் கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லியா,
பின்ன காந்தி எதுக்கு பாதி ஆடை உடுத்திப் பாடுபடனு, சொல்லுங்க
................
தேவைன்னு வாங்குவோ, தேவையில்லாம போகும், என்ன பண்றது ?
ஒங்கள நாங்க தள்ளியா வெச்சிட்டோ ?
................
பேச வைக்கறீங்க சார் பேச வைக்கறீங்க
எங்க உரிமைய நிலை நாட்ட நாங்க கத்த வேண்டியதிருக்கு,
கதற வேண்டியதிருக்கு, கண்ணீர் விட்டு அழ வேண்டியதிருக்கு ....
OK OK madam, Happy International women's day
Thank you;

Wednesday, March 6, 2013

காத்திருக்கே, தனிமையில கெடக்கே





திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனிய
இதுவரைக்கு வரலே ஏன்னு தெரியலே,
நாளைக்கு வரலா இல்லே அடுத்த வாரம் வராலான்னு - இன்னு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.

தபால்காரரு வாராரு போறாரு
தகவல் ஏது சொல்லாம தப்பிக்கராரு
மணியக்காரரு தவறாம நலம் விசாரிக்கராரு
அடிக்கடி பட்டணம் போறாரு
ஆனா ஒன்னப்பத்தி மட்டு பேச மாட்டேங்கறாரு.

கோவில் பூசாரி -
நெலத்த கோவிலுக்குக் குடு ஒ
நெலம மாறு
கவல தீரும்னு சொன்னாரு,
எனக்கு ஒன்னு தெரிலே - அவரு
பொண்ணுக்கு கண்ணாலம் ஆச்சி அசலூருல.

ஆத்துல தண்ணி இல்லே என்
அழுகை ஓயலே;
வாழ்க்கைல நீஞ்சுரே நீஞ்சுரே
கரை எங்கே தெரியலே;
காதலிச்ச ஒனக்கு என்னை
கட்டி வாழத் தெரியலே
பூத்து நின்ன எனக்கு
காதல்னா என்னன்னு புரியலே.

கூட இருந்த கிளி,
ஜோடி ஒன்னு சேத்துக்கிச்சி,
தனியா இருக்கு என்னைப் பாத்து
சவுக்கியமான்னு கேட்டு சிருச்சிகிச்சி;
என் வேதனை அதுக்குப் புரியலே,
நீ தரும் சோதனை எனக்குப் புரியலே;

சட்டுபுட்டுன்னு வந்தா
சடங்கான பொண்ணு
சம்சாரமாவா, இல்லே
சங்கருத்துக்கிட்டு
சாமியாவா, நல்ல
சேதி சொல்லு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.


Wednesday, February 13, 2013

காதலர் தின வாழ்த்துக்கள்


திடீர்னு  வெயில் மழை
பயங்கரமாப் புயல் காற்று
குளிரும் நெருப்பு
காது கிழிய மெல்லிசை
கண்ணுக்கு அழகாய் நீ
சம்பந்தமில்லாக் கவிதை
இந்த வாழ்த்து போல -
   காதலர் தின வாழ்த்துக்கள்

Thursday, February 7, 2013

இரயில் பயணம்




'பாத்துப் போடா, போய் சேந்த உடனே போன் பண்ணு '
'இட்லி காலைலேயே சாப்ட்ருங்க, சக்கரை தனியா டப்பால இருக்கு '
'மச்சி நெனச்சது முடிஞ்சதா ?'
'அம்மாவ கேட்டதா சொல்லு  '
'காய் கலோவ் கயு, மறந்துறாதே '
'அப்பா டாட்டா '
'குட்டி போய்டு வரவா'
'பாத்து போடி, வாடகை ஞாபகமிருக்கட்டு '

ம்
எத்தனை உறவுகள்
எத்தனை மனிதர்கள்
எத்தனை எதிர்பார்ப்பு

வழியனுப்ப ஆளில்லாது
வரவேற்கவும் யாருமில்லாது,
தனியே தன்னந்தனியே
நான் மட்டும்.

இரயில் பயணங்கள் பல
சிந்தனை என்றும் ஒன்றே.

Sunday, January 13, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் பொங்கட்டும் பானையில்
மகிழ்ச்சி பொங்கட்டும் மனதில்
கரும்பு இனிக்கட்டும் வாயினில்
கனவுகள் நனவாகட்டும் வாழ்வினில்.

தித்திக்கும் கரும்பு
கூடவே அரிசி பருப்பு வெல்லம்
இவை அனைத்தும் சேர்த்து - இறைவ
உனக்குத் தருவோம்,
எம் கூடவே இருந்து
எமை வழி  நடத்து - இதைத்
தவிர வேறேதும் வேண்டோம்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  

Monday, January 7, 2013

தியானம் - முதல் படி

ஓம் ...... நமசிவாய 
ஓம் ...... நமசிவாய
ஓம் ...... நமசிவாய  
     இன்னிக்கு ஏன் கீதா என்னப்பாத்து சிரிச் ...
முருகா .... முருகா ...
ஓம் ... ஓம் 
     வித்யாவும் நித்யாவும் புடவைல அழகா இருந்தாங்க, பட்  
ஓம் ஓம் ஓம் 
     ஓரப் பார்வை, கொஞ்சம் சிரிப்பு - கீதா 
     என் உயிரே நீதா... 
சிவாய நமக 
சிவாய நமக 
     சிற்றிடை, 2 ஜான் இருக்குமா, அளந்து பாக்...
ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் 
     அவளின்றி அசையாதோ எதுவும் ?
     நடையில் மயில் அசைந்து அசைந்து அசைத்து அசைத்து ... ஐயோ 
     என்னை ஆணாய் அவளைப் பெண்ணாய் படைத்த ஆண்ட...
ஆண்டவா என்னைக் காப்பாற்று 
சிவாய நம ஓம் ... சிவாய நம ஓம் 
சிவாய நம ஓம் ... சிவாய நம ஓம் 
     சிரிக்கும் போது கன்னத்தில் குழி,
     அவள் பேச்சு குயில் மொழி,
     குனிகையில் பதற்றம் - எனைப் 
     பார்க்காது போனாலோ ஏமாற்றம் 
     பாவையர் பலவிதம் - பாவி நான், 
     என் பார்வை ஒரேவிதம் 
ராம கிருஷ்ணா கோவிந்தா 
துணை நீ வா கோபாலா 
கிருஷ்ண கிருஷ்ண கேசவா 
கெட்டது மனது 
பார்த்து பார்த்து ஆனது பழுது 
ஆண்டவன் துணை இனிது 
     ரம்யாவுக்கு மட்டும் என்ன குறை ?
     கொஞ்சம் அலட்டல்,
     மத்தபடி அழகு தான்;
     கன்னத்து குழி ஒன்று போதாதா ...
     சமந்தா மாதிரி வேணும்னு 
     நா ஒன்னு ஆசைப்படலே 
     எனக்குத் தெரியாதா ஆசையே அழிவுக்கு ...
புத்தம் சரணம் கச்சாமி ..
ஓம் ... ஓம் ... ஓம் ...
ஓம் ... ஓம் ... ஓம் ...