திருவடி காட்டி எனை ஆட்கொண்டத் தலைவா, அறியாமை அகற்றி வா என்றெனை உன்னோடழைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன், இறைவா. | நரம்பு மூளை தோல் இவற்றாலான இவ்வுடம்பை விட்டு விலகி, ஐயனே என்னைத் தங்களோடழைத்துக்கொள்ள தயை புரிய வேணும் என்று ஆசைப்பட்டேன், ஹரனே |
சீல் வழிய, ஆசை ஈக்கள் மொய்த்து அழியும் இவ்வுடல் நீங்கி, சங்கரா 'ஐயோ' என்று நீ இரங்கி அன்போடென்னை உன்னோடு அழைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன், சர்வேஸ்வரா. | உடம்பும் என்னோடு தொடர்ந்து வருகுதே, எனை உன்னோடு இணைய விடாது தடுக்குதே உமைபாகா, உன்னை வணங்குகிறேன், மனமுருக வேண்டுகிறேன்; உன் திருவடி அடையவே ஆசைப்பட்டேன், உருத்ராட்சா; |
உடம்போடு ஒட்டாது தனித்திருந்தேன், உமையோனே உன்னால் ஆட்கொள்ளத் தகுந்தவன் என்று கண்டோர் எல்லாம் சொல்ல ஆசைப்பட்டேன், சடையோனே. | இளைத்தேன், இனி இங்கிருக்க விரும்பிலேன்; இந்தப் பொய்யான வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும், அத்தா; உன் முக ஒளியையும் திருப் புன்னகையையும் காண ஆசைப்பட்டேன், முத்தா; |
மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் வழிபட்டுப் போற்றும் வரதா, முக்தி அளித்து ஆட்கொள்ளும் விஸ்வேஸ்வரா, உன் திருப்பெயர் அனைத்தும் உச்சரித்து வழிபட ஆசைப்பட்டேன், விருடவாகனா; | ஆராவமுதா, உன் திருவடிகளைக் கையால் தடவி, தலையில் ஏந்தி உன் புகழ் பாடி தீயைச் சேர்ந்த மெழுகாய் உருக ஆசைப்பட்டேன், ஆலகண்டா; |
குறை பல நிறைந்த இவ்வுடலை விடுத்து, சிவனே, உன் இடம் சேர, உன் பார்வை ஒளியில் பரவசமடைய, உன் அடியார் கூட்டத்துள் இணைய ஆசைப்பட்டேன், சங்கரனே; | மாதரது மாய வலையில் மாட்டி நான் அவதியுற்றேன், மகேஸ்வரா, உன் திருவாய் மலர்ந்து 'அஞ்சேல்' என்று கூற ஆசைப்பட்டேன், மகாதேவா. |
No comments:
Post a Comment