பரமேஸ்வரா - உன் பாதம் பணிகிறேன். தேவர்களின் தேவனே, புனிதங்களின் புனிதனே, பூமாலைகளால் அர்ச்சிக்கப்படுபவனே, பிறப்பு இறப்புத் துயர் தீர்ப்பவனே, உன்னை வணங்குகிறேன். |
முனிவர்களால் முக்காலமும் பூஜிக்கப்படுபவனே, காமனை எரித்தவனே - ராவணனின் கர்வம் அழித்தவனே, துன்பம் நேர்கையிலெல்லாம் துணை நின்று துயர் துடைப்பவனே, தூயவனே உன்னை வணங்குகிறேன். |
வாசம் மிக்க மலர்களால் நேசம் கொண்டு அர்ச்சிக்கப்படுவோனே, நாடி வந்தோரின் வாழ்வு கூட வைப்போனே, சித்தர்களும் அசுரர்களும் சிரம் தாழ்த்தி வணங்கப்படுவோனே, சங்கரனே உன்னை வணங்குகிறேன். |
உயர்ந்த பல ஆபரணங்களால் அலங்கரிக்கப் படினும், நாகங்களை நகையாய் அணிந்திருப்போனே, தக்ஷனின் யாகம் அழித்தோனே, தயாளனே உன்னை வணங்குகிறேன். |
சந்தனம் தடவி, குங்குமம் இட்டு, தாமரை மலர்களால் மாலை சூட்டி, எங்கள் பாவங்களைப் போக்கும் பார்வதி மணாளா, உன்னை வணங்குகிறேன். |
தேவர்கள் வாழ்த்தி வணங்கி வழிபட வரம் பல தரும் விமலா, ஆயிரம் ஆயிரம் ஆதவனுக்கு நிகராய் பேரொளி வீசி பிரகாசிக்கும் பரமா, உன்னை வணங்குகிறேன். |
எட்டு மலரிதழ் இடையே அமர்ந்து, நல்லது நிலைக்கவும் தீயது அழியவும் அருள் புரியும் பிரணவா உன்னை வணங்குகிறேன். |
உன் அடிபணிந்து தேவர்களின் ஆசான் நிற்க உனை மலர் தூவி மற்றெல்லோரும் அர்ச்சிக்க உயர்ந்தவனும், வலியவனுமான வரதா உன்னை வணங்குகிறேன். |
No comments:
Post a Comment